செவ்வாய், 9 ஜூலை, 2013

ஆசிரியர் தகுதித் தேர்வு: வென்றவர் வழிகாட்டுகிறார்! மோகனன்


இன்று தலைகுனிந்து படிப்பது; நாளை தலைநிமிர்ந்து வாழ்வதற்கே!

கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வின் இரண்டாம் தாளில் 150-க்கு  107 மதிப்பெண்கள் பெற்று, மாநில அளவில் நான்காமிடம் பிடித்த, கன்னியாகுமரியைச் சேர்ந்த சுந்தரி, தற்போது நாகர்கோவில், மீனாட்சிபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆங்கிலம் மற்றும் கணித ஆசிரியையாகப் பணிபுரிந்து வருகிறார். ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு தயாராகி  வருபவர்களுக்காக அவர் வழங்கிய டிப்ஸ் இதோ...

முதல் தாளுக்காக தயாராகிக் கொண்டு இருப்பவர்கள், ஒன்று முதல் ஆறாம் வகுப்பு வரை உள்ள பாடப்புத்தகங்களை ஒரு வரி விடாமல் முழுமையாகப் படித்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு பாடத்திலும் முக்கியமானவை எவை என உங்கள் மனதிற்குத் தோன்றுகிறதோ அவற்றையெல்லாம் அடிக்கோடிட்டு, குறித்து வைத்துக்கொண்டு படியுங்கள். புத்தகத்தில் இருந்து படிப்பதைவிட, ஒரு நோட்டில் பாயிண்ட், பாயிண்டாக எழுதி வைத்துக்கொண்டு படித்தால், எழுதும்போதே மனதிற்குள் பதியும். படிக்கும் போதும், படித்து முடித்த பிறகும் மனதைவிட்டு மறையாமல் இருக்கும்.

இரண்டாம் தாளுக்காக தயாராகிக் கொண்டிருப்பவர்கள், 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து பாடப் புத்தகங்களையும் முழுமையாகப் படித்துக்கொள்ள வேண்டும். தமிழ்ப் பாடத்தில் உள்ள செய்யுள்களில் ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் தெரிந்துகொள்ள வேண்டும். செய்யுள் எழுதிய ஆசிரியர்களின் அடைமொழிகள், எழுதிய நூல்கள், வாழ்ந்த காலம் போன்றவற்றை குறிப்பெடுத்துக்கொண்டு படித்துக் கொள்ளுங்கள். உரைநடைப் பகுதியை ஒரு முறைக்கு மூன்று முறை படித்து வைத்துக்கொள்ளுங்கள். இலக்கணப் பகுதிகளை நன்கு படித்துக்கொள்ள வேண்டும். தமிழ் எண்ணுருக்களைப் பற்றி கேள்வி வரும் என்பதால், அதையும் படித்துக்கொள்ளுங்கள்.

ஆங்கிலத்தில் அடிப்படை இலக்கணம் முக்கியம். பாடல் எழுதிய ஆசிரியர்கள் பெயர், அவர்கள் எழுதிய மற்ற நூல்கள் போன்றவற்றைப் படித்துக் கொள்ளவேண்டும். ஒவ்வொரு பாடத்தின் பின்புறமும் கொடுக்கப்பட்டுள்ள ஒரு மதிப்பெண் கேள்விகளை நன்கு படித்து வைத்துக் கொள்ளுங்கள்.

கணிதப் பாடத்தில் கனங்கள், குலங்கள் போன்றவற்றைப் பற்றி கேட்பார்கள். புத்தகத்தில் கேட்கப்பட்டிருக்கும் மாதிரிக் கணக்குகளை நன்றாகப் போடத் தெரிந்துகொள்ள வேண்டும். புத்தகத்தில் உள்ளபடியே கேட்கமாட்டார்கள். ஆனால், அதை மாதிரியாகக்கொண்டு வேறு விதமா கேள்விகள் கேட்பார்கள். அறிவியல் விதிகள், விஞ்ஞானிகளின் பெயர்கள், கண்டுபிடிப்புகள், சோதனை முறைகள் போன்றவற்றை எல்லாம் நன்றாகப் படித்துக் கொள்ளுங்கள்.

குழந்தைகள் மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் பாடத்தைப் பொருத்தவரை பி.எட். பாடப் புத்தகத்தைப் படித்துக் கொள்ளுங்கள். மனவியல் கோட்பாடுகள், அதனை வரையறுத்துச் சொன்ன ஆசிரியர்கள், எந்த விலங்கினத்தைக் கொண்டு வரையறை செய்தார்கள் போன்றவற்றையும் படித்துக் கொள்ளுங்கள்.

ஒன்று முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள சமூக அறிவியல் பாடங்களை நன்றாகப் படித்துக்கொள்ள வேண்டும். வரலாறு, குடிமையியல், புவியியல் என மூன்று பகுதிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்துப் படிக்கவேண்டும். முக்கியமான அரசர்கள், அரச வம்சங்கள், படையெடுப்புகள், படையெடுப்பு நடந்த ஆண்டுகள், முக்கியமான சட்டங்கள், மக்களின் அடிப்படை உரிமைகள், கடமைகள், அரசின் பணிகள், புவியியல் நிலப்பரப்பு, முக்கிய நகரங்கள், போக்குவரத்துகள் போன்றவற்றைப் படித்துக் கொள்ளுங்கள்.

இன்று தலைகுனிந்து படிப்பது நாளை தலைநிமிர்ந்து வாழ்வதற்காகத்தான் என்பதை தாரக மந்திரமாகக் கொண்டு படித்தால் போதும்... தேர்வில் வெற்றி பெற்று, உன்னதமான ஆசிரியப் பணியில் அமரலா