திருநெல்வேலி: அரசு பள்ளிகளில் வேலை நேரத்தில் விழாக்களை நடத்தி கால விரயம் செய்யப்படுவதால் மாணவ, மாணவிகள் கல்வி பாதிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின் காலதாமதமாக அரசு துவக்க, நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதனால் சனிக் கிழமைகளிலும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. கல்வித் தரத்தை அதிகரிக்கவும், 100 சதவீத தேர்ச்சிக்கும் பள்ளிகளில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
ஆனால் தமிழக முதல்வரின் சீரிய எண்ணத்தை குலைக்கும் வகையில் அரசு பள்ளிகளில் வேலை நேரத்தில் விழாக்கள் அடிக்கடி நடத்தப்பட்டு வருகிறது. தற்போதைய சீசனில் பரவலாக பல்வேறு அரசு பள்ளிகளில் ஆங்கில பள்ளிகள் துவக்க விழா நடத்தப்படுகிறது. இதனை மாவட்ட நிர்வாகமும், கல்வித் துறை அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை.
இதில் அந்தந்த பகுதி ஆளுங்கட்சி நிர்வாகிகளுடன், ஆசிரியர், மாணவர் நலனுக்கு எதிராக செயல்படும் நிர்வாகிகள் பலரும் முதல்வரின் எண்ணத்தை தடுக்கும் வகையில் பங்கேற்று நீண்ட நேரம் "அட்வைஸ்" மழை பொழிகின்றனர்.
பள்ளி வேலை நேரத்தில் விழா நடப்பதால் தலைமை ஆசிரியர்கள், ஆசிரிய, ஆசிரியைகள் இதற்கான ஏற்பாடுகளிலேயே தீவிரம் காட்டுகின்றனர். மாணவ, மாணவிகளும் முழு எண்ணிக்கையில் வேறு வழியில்லாமல் பங்கேற்பதால் பள்ளிகளில் அனைத்து கல்விப் பணிகளும் பாதிக்கப்படுகிறது.
தொடர்ந்து இது போன்ற விழாக்களால் கல்வித் தரம் பாதிக்கப்படுவதோடு, குறிப்பிட்ட காலத்திற்குள் பாடங்களை நடத்தி முடிக்காத சூழ்நிலை ஏற்படலாம் என்பதால் 100 சதவீத தேர்ச்சி என்பது கானல் நீராகவே அமையும். தற்போது இவற்றை கண்டு கொள்ளாமல் இருக்கும் அதிகாரிகள் அப்போது சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் சூழ்நிலை ஏற்படுவதாக ஆசிரிய சங்கங்கள் தெரிவிக்கின்றன.
எனவே, பள்ளி வேலை நேரத்தில் அடிக்கடி நடத்தப்படும் அரசு விழாக்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதோடு, பள்ளியில் நன்கொடை வசூலை மறைக்க ஆளுங்கட்சி பிரமுகர்கள் மற்றும் ஆசிரியர், மாணவர் நலனுக்காக எதிராக செயல்படும் நிர்வாகிகள் பங்கேற்பதையும் முழு அளவில் தடை செய்ய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஆசிரிய சங்கங்கள் விரும்புகின்றன.