விருதுநகர் மாவட்ட அனைவருக்கும் கல்வி இயகத்தின் சார்பில் நியமனம் செய்யப்பட்ட பகுதி நேர ஆசிரியர்களுக்கு முழு சம்பளம் வழங்க வேண்டும் எனக் கூறி புகார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் ஆகியோருக்கு பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சார்பில் நேரில் கொடுத்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:
விருதுநகர் மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் கடந்த ஆண்டு பகுதி நேர ஆசிரியர்களாக 427 பேர் நியமனம் செய்து மாதந்தோறும் 12 நாள்கள் வேலைநாள்கள் எனக் கூறியும் ரூ.5 ஆயிரம் மதிப்பூதியமும் வழங்கப்படும் கூறப்பட்டது.ஆனால் கடந்தாண்டு சரியான முறையில் மதாந்தோறும் வழங்கப்பட்டது. அதேபோல், நிகழாண்டில் ஜூன் மாதம் தலைமை ஆசிரியரின் உத்தரவுப்படி 12 நாள்கள் வரையில் வேலை செய்துள்ளோம். ஆனால், சம்பளமாக ரூ.3750 வீதம் இந்த மாவட்டத்தில் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், மற்ற மாவட்டங்களில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் சரியாக முழு அளவு சம்பளம் வழங்கப்பட்டிருக்கிறது. இதுபோன்ற காரணங்களால் குறிப்பிட்ட அளவு சம்பளத்தை இதுவரையில் பெறாமலே உள்ளோம்.
அதனால், முழு அளவு சம்பளம் வழங்க வேண்டும் எனக்கூறி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் ஆகியோரிடம் நேரில் அளித்த மனுவில் சிறப்பாசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.