ஊதியக் குழு முரண்பாட்டைக் களைய அமைக்கப்பட்ட மூவர் குழு அறிக்கையில் இடைநிலை ஆசிரியர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகக் கூறி ஸ்ரீவில்லிபுத்தூர் உதவித் தொடக்கக் கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் கோரி போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் 6-வது ஊதியக் குழுவின் அறிக்கையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏராளமான ஊதிய முரண்பாடுகள் இருந்தது. இதனைக் களைய அரசு மூவர் குழுவை அமைத்தது. இந்த குழுவின் அறிக்கையின் அடிப்படையில் அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அரசாணையில் இடைநிலை ஆசிரியர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கூறி, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஸ்ரீவில்லிபுத்தூர் உதவித் தொடக்கக் கல்வி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாரத் தலைவர் கருப்பசாமி தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் வைரமுத்து, மாவட்டச் செயலாளர் சங்கர்கணேஷ் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.ஆர்ப்பாட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாரச் செயலாளர் ஆர்.கண்ணன், பொருளாளர் ராமச்சந்திரன், சிவகாசி வட்டாரச் செயலாளர் பி.கண்ணன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சேரன் செங்குட்டுவன் உள்ளிட்ட ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.