செவ்வாய், 16 ஜூலை, 2013

பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்: டி.ஆர்.பி., எச்சரிக்கை

டி.இ.டி., தேர்வை எழுதத் தயாராகி வருபவர்களிடையே, "பணம் கொடுத்தால், வேலை கிடைக்கும்" என்ற தகவலை, சில மர்ம கும்பல்கள், வேகமாக பரப்பி வருகின்றன. இதனால், உஷார் அடைந்துள்ள டி.ஆர்.பி., அமைப்பு, "தேர்வர்கள்,
யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்; நேர்மையான முறையில், தகுதி வாய்ந்தவர் மட்டுமே, ஆசிரியராக தேர்வு செய்யப்படுவர்" என இப்போதே எச்சரித்துள்ளது.

வரும் ஆகஸ்ட், 17, 18ம் தேதிகளில், டி.இ.டி., தேர்வு நடக்கிறது. 17ம் தேதி, இடைநிலை ஆசிரியர்களுக்கான, முதல் தாள் தேர்வும், 18ம் தேதி, பட்டதாரி ஆசிரியர்களுக்கான, இரண்டாம் தாள் தேர்வும் நடக்கிறது. இத்தேர்வுக்கு, 6.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

தேர்வுக்கு, இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில், தேர்வர்கள் மத்தியில், திடீரென, "பணம் கொடுத்தால் வேலை" என்ற தகவலை, சில மர்ம கும்பல்கள் பரப்பி வருகின்றன. ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை நியமிக்கப்படும் இடைநிலை ஆசிரியர்கள், டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெற்றால் போதும்.

மற்றபடி, மாநில பதிவு மூப்பு அடிப்படையில் தான், பணி நியமனம் செய்யப்படுகின்றனர். பட்டதாரி ஆசிரியர் மட்டும், முழுக்க முழுக்க, மதிப்பெண் அடிப்படையில், பணி நியமனம் செய்யப்படுகின்றனர். இதில், இடைநிலை ஆசிரியர்களை தேர்ச்சி அடையச் செய்ய, 3 முதல், 4 லட்சம் ரூபாய் வரை, தேர்வர்கள் மத்தியில், சிலர் பேரம் பேசி வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த தகவலை உறுதி செய்ய, பல தேர்வர்கள், டி.பி.ஐ., வளாகத்தை சுற்றி வருகின்றனர். டி.இ.டி., தேர்வு மூலம், 15 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ள நிலையில், தேர்வர்கள் மத்தியில் உலா வரும் வதந்தியை அறிந்து, டி.ஆர்.பி., அதிர்ச்சி அடைந்துள்ளது.

இதுகுறித்து, அதிகாரி ஒருவர் கூறியதாவது: எழுத்து தேர்வும், அதைத் தொடர்ந்து, நியமன தேர்வு முறையும், நேர்மையான முறையில் நடக்கும். இதில், தேர்வர்கள், எவ்வித சந்தேகமும் அடையத் தேவையில்லை.

முழுக்க முழுக்க, தகுதியான ஆசிரியர் மட்டுமே, தேர்வு செய்யப்படுவர். தேர்வர்கள், அறிமுகம் இல்லாத நபர்களின் பேச்சைக் கேட்டு, பணம் கொடுக்கக் கூடாது. இந்த விவகாரத்தில், மோசடி பேர்வழிகள் சிக்கினால், அவர்கள் மீது, கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அந்த அதிகாரி கூறினார்.

அதிகாரிகள் இப்படி தெரிவித்தாலும், ஆசிரியர் தேர்வு முறையில், வெளிப்படைத் தன்மை இல்லாதது, பெரிய குறையாக உள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன் வரை, ஒரு தேர்வு நடந்தால், அதில் தேர்வு பெற்றவர்களின் பெயர்கள் அனைத்தும், முழு விவரங்களும், டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியாகும்.

இது, ஒருவரை, ஒருவர் சரிபார்த்துக் கொள்ளவும், முறைகேடு நடக்கவில்லை என்பதை வெளிப்படுத்தவும், ஒரு வாய்ப்பாக இருந்தது. ஆனால், தற்போது, நேர்மையான முறையில் நடக்கிறது என, டி.ஆர்.பி., கூறினாலும், அதை, பொதுமக்களோ, தேர்வெழுதுவோரோ, உறுதி செய்ய முடியாத நிலை உள்ளது.

ஒருவர் தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறாரா, இல்லையா என்பதை, சம்பந்தப்பட்ட ஆசிரியர், தன் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை, டி.ஆர்.பி., இணையதளத்தில் பதிவு செய்தால், "செலக்டட் அல்லது நாட் செலக்டட்" என்ற விவரம் வரும்.

மேலும், அவர், பெற்ற மதிப்பெண் விவரத்தையும் அறியலாம். ஆனால், தேர்வு பெற்ற ஒருவரின் மதிப்பெண்ணை, மற்றொரு தேர்வர் அறிய முடியாது. இதனால், தேர்வர்கள் மத்தியில், ஒருவித நம்பிக்கையின்மை, தொடர்ந்து நிலவுகிறது.

இதுகுறித்து, டி.ஆர்.பி., ஏற்கனவே கூறுகையில், "முழுமையான விவரங்கள் அடங்கிய தேர்வு பட்டியலை, கண்டிப்பாக வெளியிடுவோம். அதற்கு, அதிகமான பணிகளை செய்ய வேண்டி உள்ளது. மற்றபடி, வெளியிடக் கூடாது என்ற எண்ணம் இல்லை" என பலமுறை, திரும்ப திரும்பக் கூறியுள்ளது.

தேர்வர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையிலும், முறைகேடுகள் நடக்கவில்லை; எல்லாம், வெளிப்படையாக, நேர்மையாக நடக்கிறது என்பதை வெளிப்படுத்தும் வகையிலும், தேர்வு செய்யப்பட்டவர்கள் குறித்த முழு விவரங்களையும், அனைவரும் பார்க்கும் வகையில் வெளியிட, டி.ஆர்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை செய்யாத வரை, டி.ஆர்.பி., மீதான சந்தேகப் பார்வையை, ஒழிக்க முடியாது.