வெள்ளி, 28 ஜூன், 2013

சிஎப்எல்-க்கு மாறுவோம்!

மின்இழை பல்புகளுக்கு (குண்டு பல்பு) பதிலாக ஃபுளோரசன்ட் பல்புகளை (சிஎப்எல் பல்புகள்) மாற்ற வேண்டும் என்ற முனைப்பை தமிழ்நாடு பல ஆண்டுகளுக்கு முன்பாகவே தொடங்கிய போதிலும், இன்னும் முழுமையாகச் செய்ய இயலவில்லை.
வழக்கமான மின்இழை பல்புகளுக்குச் செலவாகும் மின்சாரத்தில் மூன்றில் ஒரு பங்கு மின்சாரம் சிஎப்எல் பல்புகளுக்குப் போதும். அதே அளவு வெளிச்சம் கிடைக்கும். இதனால் தமிழகத்தில் வீட்டு இணைப்புகளுக்குத் தேவைப்படும் மின்அளவு மூன்றில் ஒரு பங்காகக் குறைவதுடன், மின் நுகர்வோருக்கு மின்கட்டணமும் பாதியாகக் குறையும்.
2010-இல் இந்திய அரசு அறிவித்த திட்டத்தின் கீழ், கேரள மாநிலத்தில் 100 விழுக்காடு சிஎப்எல் பல்புகள் பொருத்தும் பணி செய்து முடிக்கப்பட்டது. இதனால் கேரள மாநிலத்துக்கு ஆண்டுக்கு 300 மெகாவாட் மின்தேவை குறைந்துள்ளது.
தமிழ்நாடு முழுவதிலும் அனைத்து வீடுகளிலும் (சுமார் 1.6 கோடி வீடுகள்) உள்ள குண்டு பல்புகளை மாற்றிவிட்டு, சிஎப்எல் பல்புகளைப் பொருத்தினால் தமிழ்நாட்டில் ஒரு ஆண்டுக்கு 600 மெகாவாட் மின்சாரம் மிச்சமாகும். தமிழ்நாட்டில் நிலவும் மின்பற்றாக்குறையால் பெரிதும் பாதிக்கப்படுவது ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த வீட்டு இணைப்பு மின்நுகர்வோர் மட்டுமே. மின்சேமிப்புக்கான முனைப்பில் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சில மாதங்களுக்கு முன்பு இத்திட்டத்தை மீண்டும் அறிவித்தது. இதன்படி ஒருவிளக்கு திட்டத்தில் இடம்பெறும் 11.4 லட்சம் குடிசை வீடுகளுக்கு 9 வாட் சிஎப்எல் பல்புகளை இலவசமாகவும், தமிழகத்தின் இரண்டு மாவட்டங்களில் (விழுப்புரம், கன்னியாகுமரி) மின்நுகர்வோருக்கு 13 வாட் சிஎப்எல் பல்புகளை ரூ.15-க்கு வழங்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் முடிவு செய்தது.
குடிசைகளுக்கு இலவசமாக வழங்கப்படும் சிஎப்எல் பல்புகளுக்கான செலவாக சுமார் ரூ.14 கோடி வழங்கப்படும். நுகர்வோருக்கான திட்டத்தை (13 வாட் பல்பு ரூ.15) தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ஏற்று அமல்படுத்த வேண்டும்.
2010-ஆம் ஆண்டு இதே திட்டத்தை அறிவித்தபோது, 22 மாவட்டங்களில் உள்ள நுகர்வோருக்கு ஒரு சிஎல்எப் பல்பு ரூ.15-க்கு வழங்கப்படும் என்று தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்த போதிலும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்த திட்டத்தில் இரண்டு மாவட்டங்களில் உள்ள 10 லட்சம் வீடுகளுக்கு மட்டுமே ரூ.15 விலையில் பல்பு என்று அறிவித்தது.
தற்போது ராஜஸ்தான் மாநில அரசு அறிவித்துள்ள திட்டத்தின்படி, வறுமைக்கோட்டுக்கு கீழே வாழ்வோரின் இருப்பிடங்களுக்கு மட்டுமின்றி கிராமங்களில் உள்ள அனைத்து மின்நுகர்வோருக்கும் இரண்டு சிஎப்எல் பல்புகள் இலவசமாக வழங்கப்படும். மின்சேமிப்புக்கு மேற்கொள்ளப்படும் இத்திட்டத்துக்கு அரசு ரூ.100 கோடியை ஒதுக்கியுள்ளது. ஒரு கோடி சிஎப்எல் பல்புகள் மூலம் ராஜஸ்தான் மாநிலத்தில் மின்நுகர்வோர் செலுத்தும் கட்டணம் ஆண்டுக்கு ரூ.278 கோடி குறையும், அதாவது மின்நுகர்வோருக்குச் சேமிப்பாகும் என்று ராஜஸ்தான் மின்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் போல, தமிழகத்திலும் அனைத்து குண்டு பல்புகளையும் சிஎப்எல் பல்புகளாக மாற்றும் முயற்சிகளை விரைவுபடுத்த வேண்டும். இரண்டு மாவட்டங்களை மட்டும் தேர்வு செய்வது போதாது. அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டத்தை அமல்படுத்த வேண்டியது அவசியம்.
ஆண்டுக்கு 600 மெகாவாட் மின்சாரம் மிச்சமாகும் என்றால், இந்த அளவு மின்சார உற்பத்திக்குத் தேவைப்படும் நிலக்கரி பயன்பாடும் குறைகின்றது என்று பொருள். இந்திய அளவில் இதனை நடைமுறைப்படுத்தும்போது, நிலக்கரியின் தேவை பல மடங்கு குறையும்.
தமிழக அரசு அலுவலகங்களில் மின்இழை பல்புகள் (குண்டு பல்புகள்) பயன்படுத்தப்படக்கூடாது என்று ஏற்கெனவே தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணை ஊரகப் பகுதிகளில் முழுமையாகக் கடைப்பிடிக்கப்படவில்லை. அதை நடைமுறைப்படுத்துவதில் மாவட்ட ஆட்சியாளர்கள் முனைப்பு காட்ட வேண்டியது அவசியம்.
சிஎப்எல் விளக்குகளின் பயன்பாட்டை தமிழக அரசு கட்டாயப்படுத்த வேண்டும். தமிழகத்தில் குண்டு பல்புகள் விற்பனைக்குக் கட்டுப்பாடு விதிப்பதும்கூட சிஎப்எல் பல்புகள் மாற்றத்துக்கு உதவும். ஒவ்வொரு வீட்டுக்கும் மலிவு விலையில் சிஎப்எல் பல்புகளை விற்பனை செய்ய தமிழக அரசு நிதிஒதுக்குவது, தமிழக மின்தட்டுப்பாட்டை சமாளிக்க உதவும்.
சிஎப்எல் பல்புகள் புறஊதாக் கதிர்களை அதிகம் வெளிப்படுத்துவதால் மனிதர்களின் தோலுக்கு நல்லதல்ல என்று ஆய்வுகள் கூறியபோதிலும், இரண்டு அடிக்கு அதிகமான தொலைவில் சிஎப்எல் விளக்குகள் இருந்தால் இத்தகைய புறஊதாக் கதிர்களின் பாதிப்பு ஏற்படாது என்பதையும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இந்த பல்புகள் உடையும்போது அவற்றை எவ்வாறு கையாளுவது என்பது குறித்த விழிப்புணர்வை மட்டும் மக்களிடம் ஏற்படுத்தினால் போதும்.
தமிழகத்தைப் பொருத்தவரை மின் உற்பத்தியை அதிகரிப்பதில் எந்த அளவுக்கு முனைப்புக் காட்டுகிறோமோ அதே அளவுக்கு மின் சிக்கனத்திலும் மின் இழப்பைக் கணிசமாகக் குறைப்பதிலும் முனைப்பு காட்ட வேண்டியது அவசியம். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலக்கரி விலையால் அனல் மின் உற்பத்தி மின்சாரத்தின் விலையைக் கணிசமாக உயர்த்தும் நிலையில் இதுபோன்ற முயற்சிகளுக்கு மக்களை ஊக்குவிப்பது அவசியம்.