வியாழன், 27 ஜூன், 2013



டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு புதன்கிழமை வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்தது. இதனால் ஒரு டாலருக்கு ரூ. 60.72 தர வேண்டிய நிலை ஏற்பட்டது. செவ்வாய்க்கிழமை வர்த்தகம் முடிவில் டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்றுமதிப்பு ரூ. 59.66 என்ற நிலையில் இருந்தது. புதன்கிழமை மட்டும் 106 காசுகள் சரிந்தது.

புதன்கிழமை காலை வர்த்தகம் தொடங்கியதிலிருந்து டாலரை வாங்கும் போக்கு அதிகரித்தது. இதனால் ஒரு கட்டத்தில் ஒரு டாலருக்கு ரூ. 60.76 தர வேண்டிய நிலை ஏற்பட்டது. வங்கிகளும், எண்ணெய் இறக்குமதி நிறுவனங்களும் பெருமளவில் டாலரை வாங்கியதே வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாகும்.

மேலும், பங்குச் சந்தையிலிருந்து அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் தொடர்ந்து வெளியேறுவதும் வீழ்ச்சி அதிகரிக்கக் காரணமானது. பங்குச் சந்தையில் புதன்கிழமை அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ. 550 கோடி மதிப்புக்கு பங்குகளை விற்பனை செய்துள்ளன.

இந்த மாதத்தில் இதுவரை ரூ. 9,000 கோடி அளவுக்கு அன்னிய நிறுவனங்கள் பங்குகளை விற்பனை செய்துள்ளன. ஜூன் 25-ம் தேதி நிலவரப்படி இதுவரை ரூ. 27,850 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது. ரூபாயின் மாற்று மதிப்பு தொடர்ந்து சரிவதால் இந்தியாவில் முதலீடு செய்துள்ள நிறுவனங்கள் தங்களது முதலீட்டைத் திரும்பப் பெறத் தொடங்கியுள்ளன.

இதனால் கடந்த சில நாள்களாக ரூபாயின் மாற்று மதிப்பு மேலும் சரிவைச் சந்தித்து வருகிறது. அமெரிக்காவில் பொருளாதார தேக்க நிலை மாறி, வளர்ச்சியை நோக்கி பயணிப்பதாக வெளியான தகவலும் டாலரின் மதிப்பு உயர வழிவகுத்துள்ளது.

டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருவதைத் தடுத்து நிறுத்த ரிசர்வ் வங்கி உரிய நடவடிக்கை எடுக்கும் என சந்தை வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.

கடந்த மே மாதத்திலிருந்து இதுவரை டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு 12 சதவீத அளவுக்குச் சரிவைச் சந்தித்துள்ளது.

சரிவைத் தடுக்க ரிசர்வ் வங்கி ஒரு நாளில் சராசரியாக விற்பனை செய்யும் டாலரின் அளவைக் காட்டிலும் கூடுதலாக டாலரை விடுவித்தது. இதனால் ஓரளவு வீழ்ச்சி தணிந்தது. இருப்பினும் இதே நிலை தொடர்ந்தால் ரூ. 62 என்ற நிலைக்கு மதிப்பு சரியக்கூடும் என வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ரூபாயின் மதிப்பு சரிவைத் தடுக்க ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் உறுதியான நடவடிக்கை எடுக்காவிடில் சரிவைத் தடுக்க முடியாது என்று வல்லுநர்கள் தெரிவித்தனர்.

இதேபோல யூரோவுக்கான மாற்று மதிப்பு ரூ. 78.22 என்ற நிலைக்குச் சரிந்தது. பிரிட்டன் ஸ்டெர்லிங்குக்கு ரூ. 93.21 தர வேண்டியதாயிற்று. ஜப்பானின் 100 யென்னுக்கு ரூ. 62.09 தர வேண்டியிருந்தது.