அன்னூர்: பாடம் நடத்த புத்தகங்கள் வழங்கப்படாததால், தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
தமிழக அரசு, 2011ம் ஆண்டில், பழைய பாடத்திட்டங்களை மாற்றி, சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்தியது. அரசு மற்றும் மெட்ரிக் பள்ளிகள் சமச்சீர் பாடத் திட்டத்தை பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டது. இதில் முப்பருவ முறை கடந்த ஆண்டு 8ம் வகுப்பு வரையும், இந்த ஆண்டு 9ம் வகுப்புக்கும் செயல்படுத்தப்பட்டது.
பழைய பாடத்திட்டத்தில் மாற்றம் செய்து, அரசு பள்ளி மாணவர்களுக்கு முன்பு இருந்ததை விட கூடுதலான பாடங்களுடனும், மெட்ரிக் மாணவர்களுக்கு ஏற்கனவே இருந்த பாடத்திட்டத்தை விட குறைந்த பாடங்களுடனும் பாடத்திட்டம் அமைந்துள்ளது. இத்துடன் செயல்வழிக்கற்றலும் அட்டைகள் மூலம் கற்பிக்கப்படுகிறது. புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தி இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டன. எனினும், புதிய பாடத்திட்ட புத்தகங்கள் ஆசிரியர்களுக்கு வழங்கப்படவில்லை.
ஆசிரியர்கள் கூறியதாவது:
அன்னூர் வட்டாரத்தில் 74 தொடக்கப்பள்ளிகளும், 17 நடுநிலைப்பள்ளிகளும் உள்ளன. 6,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். அரசு பள்ளி மாணவ, மாணவியர் அனைவருக்கும் பாட புத்தகங்கள் மற்றும் நோட்டுகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு புத்தகம் வழங்கப்படவில்லை. பள்ளியில் எவ்வளவு மாணவர்கள் உள்ளனரோ, அவர்களுக்கு மட்டும் வந்துள்ளது. இதனால், மாணவர்களிடம் புத்தகத்தை வாங்கி, பாடம் நடத்த வேண்டி உள்ளது.
புதிய பாடத்திட்டம் என்பதால், வீட்டில் படித்து பார்க்கவும், மாணவரிடம் பெற வேண்டி உள்ளது. அரசு பள்ளிகளில் கல்வித்தரம் உயர பாடுபடும் கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரியர்களுக்கு, அவர்கள் கற்பிக்கும் வகுப்புகளின் பாடபுத்தகங்கள் தலா ஒரு செட் வழங்க வேண்டும். அப்போது தான், கற்பித்தல் எளிதாக இருக்கும். இவ்வாறு ஆசிரியர்கள் தெரிவித்தனர்.