திங்கள், 19 ஆகஸ்ட், 2013

இடைநிலை ஆசிரியர் தகுதித்தேர்வு: எளிதாக இருந்ததாக தேர்வர்கள் கருத்து

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இடைநிலை ஆசிரியர் தகுதித்தேர்வு, நேற்று, எவ்வித குளறுபடியும் இன்றி, நடந்து முடிந்தது. ஒட்டுமொத்த அளவில், தேர்வு எளிதாக இருந்ததாக, தேர்வர்கள் கருத்து தெரிவித்தனர். இதனால், 10 சதவீதத்திற்கும் அதிகமாக, தேர்ச்சி அதிகரிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு, இரு டி.இ.டி., தேர்வுகள் நடந்தன. முதல் தேர்வில், 2,400 பேரும், இரண்டாவது தேர்வில், 19 ஆயிரம் பேரும், தேர்ச்சி பெற்றனர். மூன்றாவது டி.இ.டி., தேர்வுகள், நேற்று துவங்கின. அரசு பள்ளிகளில் மட்டும், 15 ஆயிரம் ஆசிரியர், நியமனம் செய்யப்பட உள்ளனர். மேலும், சட்டம் அமலுக்கு வந்தபின் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள், டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதால், பணியில் உள்ள ஆசிரியர்களும், அதிகளவில், தேர்வுக்கு விண்ணப்பித்தனர். இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் என, இரு தேர்வுகளுக்கும் சேர்த்து, ஏழு லட்சம் பேர் விண்ணப்பித்தனர்.
முதலில், இடைநிலை ஆசிரியர் பணிக்கான தகுதித்தேர்வு, நேற்று, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடந்தது. தமிழகத்தில், 687 மையங்களில், 2,68,429 பேர் எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். காலை 10:00 மணி முதல் பகல் 1:00 மணி வரை தேர்வுகள் நடந்தன. அனைத்து தேர்வு மையங்களிலும், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சென்னை, ராஜா அண்ணாமலைபுரம், ராணி மெய்யம்மை மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 326 பேர் தேர்வெழுத அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால், 15 பேர் வரவில்லை. தேர்வு முடிந்து வெளியே வந்த தேர்வர்கள், மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.
தேர்வர்கள் கருத்து:
சென்னை, நெற்குன்றத்தைச் சேர்ந்த உமா கூறுகையில், "கடந்த இரு தேர்வுகளில், 70, 75 மதிப்பெண்கள் பெற்றேன். இந்த தேர்வு, மிகவும் எளிதாக இருந்தது. இதனால், தேர்ச்சி பெற்றுவிடுவேன். தமிழ் பாடத்தில் இருந்து கேட்கப்பட்ட சில கேள்விகள் கடினமாக இருந்தன. எனினும், பெரிய அளவிற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் கேள்விகள் கேட்கப்படவில்லை," என்றார்.
போரூரைச் சேர்ந்த நிவேதா கூறுகையில், "நான், ஆசிரியர் பயிற்சி முடித்த கையோடு, முதல் முறையாக, தேர்வை எழுதி உள்ளேன். மிகவும் பயத்துடன், தேர்வுக்கு வந்தேன். ஆனால், பெரிய அளவிற்கு, கடினமாக இல்லை. கேள்விகள் அனைத்தும், எளிதாக இருந்தன," என்றார்.
தேர்வு, எளிதாக இருந்ததாக, பெரும்பாலான தேர்வர்கள் கருத்து தெரிவித்திருப்பதால், தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த டி.இ.டி., தேர்வில், 3 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இன்று நடக்கும், டி.இ.டி., இரண்டாம் தாள் தேர்வும் எளிதாக அமைந்தால், தேர்ச்சி, 10 சதவீதத்தை தாண்டலாம்.
கடந்த தேர்வுகளில், "ஆப்சென்ட்" சதவீதம், 10க்கும் அதிகமாக இருந்தது. ஆனால், நேற்றைய தேர்வில், வெறும், 2.18 சதவீதம் பேர் மட்டுமே, "ஆப்சென்ட்" ஆனதாக, டி.ஆர்.பி., உறுப்பினர் அறிவொளி தெரிவித்தார்.
அவர், மேலும் கூறியதாவது: ஒட்டுமொத்த அளவில் 5,854 பேர் மட்டும் தேர்வுக்கு வரவில்லை. மாவட்ட அளவில் பார்த்தால், சென்னை மாவட்டத்தில், அதிகபட்சமாக, 465 பேர், "ஆப்சென்ட்" (4.47 சதவீதம்) ஆகியுள்ளனர். குறைந்தபட்சமாக, திருப்பூர் மாவட்டத்தில், 1.46 சதவீதம் பேர், "ஆப்சென்ட்". தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வமும், வேகமும் தேர்வர்களிடையே அதிகமாக இருப்பது தான், "ஆப்சென்ட்" குறைவுக்கு காரணம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

ஆசிரியர் தகுதித் தேர்வு: மூன்று வாரங்களில் விடைகள் வெளியீடு

தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வின் இரண்டாம் தாளை 4 லட்சத்து 77 பேர் எழுதினர்.
இந்தத் தேர்வுக்கு 4 லட்சத்து 11 ஆயிரத்து 635 பேர் விண்ணப்பித்தனர். இரண்டு தாள்களையும் சேர்த்து தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வினை இந்த ஆண்டு (2013) மொத்தம் ஆறு லட்சத்து 62 ஆயிரம் பேர் எழுதியுள்ளனர்.
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. முதல் தாள் சனிக்கிழமையும், இரண்டாம் தாள் ஞாயிற்றுக்கிழமையும் நடந்தன. முதல் தாளை 2 லட்சத்து 62 ஆயிரம் பேர் எழுதினர்.
மொழிப் பாடங்கள் கடினம்: ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரண்டாம் தாளில் தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிப் பாடங்களில் கேள்விகள் கடினமாக இருந்ததாகவும், உளவியல் பாடத்தில் கேள்விகள் பொதுவாக இருந்ததாகவும் தேர்வர்கள் கருத்துத் தெரிவித்தனர். தமிழகம் முழுவதும் ஆயிரத்து 60 மையங்களில் நடந்த இரண்டாம் தாள் தேர்வை 4 லட்சத்து 77 பேர் எழுதினர்.
மூன்று வாரங்களில் வெளியீடு: ஆசிரியர் தகுதித் தேர்வின் இரண்டு தாள்களுக்கான விடைகளும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (ற்ழ்க்ஷ.ற்ய்.ய்ண்ஸ்ரீ.ண்ய்) வெளியிடப்படும் என்று தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
விடைகள் வெளியிடப்பட்ட பிறகு, தேர்வு முடிவுகள் இரண்டு மாதங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் உள்பட காலியாகவுள்ள மொத்தம் 14 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதித் தேர்வு நடத்தப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரண்டாம் தாள் தேர்வின்போது கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஒவ்வொரு மையத்திலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டதோடு, போலீஸ் பாதுகாப்பும் அளிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்சியர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு தேர்வுகள் கண்காணிக்கப்பட்டன. இந்தத் தேர்வினை எழுத பெண்கள் 73 சதவீதம் பேரும், ஆண்கள் 27 சதவீதம் பேரும் விண்ணப்பித்திருந்தனர்.
சென்னையில் எத்தனை பேர்? சென்னை மாவட்டத்தில் 26 ஆயிரத்து 96 பேர் தேர்வு எழுத விண்ணப்பத்திருந்தனர். அவர்களில் 24 ஆயிரத்து 782 பேர் தேர்வு எழுதினர். ஆயிரத்து 314 பேர் தேர்வு எழுதவில்லை.
தேர்வு மையங்களில் அதிகாரிகள் அவ்வப்போது நேரில் ஆய்வு செய்தனர்.
சில மையங்களில் தேர்வுக்கூட அலுவலர்களுக்கு போதிய பயிற்சிகள் வழங்கப்படாததால் அவர்கள் தேர்வர்களிடம் இருந்து 10 நிமிஷங்களுக்கு முன்பாகவே விடைத்தாள்களை பெற்றதாக புகார்கள் எழுந்தன.
சென்னை மாவட்டத்திலும் தேர்வு அமைதியாக நடந்து முடிந்தததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தெளிவு இல்லாத ஹால் டிக்கெட்: தேர்வுக்கூடங்களை தேடி அலைந்த தேர்வர்கள்
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த இரண்டாம் தாள் தேர்வின்போது தேர்வு மையங்களை தேர்வர்கள் தேடி அலையும் நிலை ஏற்பட்டது.
தேர்வுக்கூட நுழைவுச் சீட்டில் (ஹால் டிக்கெட்) சரியான விவரங்களைக் குறிப்பிடாததே இந்த குழப்பங்களுக்குக் காரணம் என்று புகார் கூறப்படுகிறது. தேர்வுக்கூட நுழைவுச் சீட்டில் தேர்வு மையத்தின் பிரதான சாலையின் பெயர் மற்றும் ஊர் பெயர் மட்டுமே இடம்பெற்றிருந்தது. இதனால், எந்தப் பள்ளி, அது எங்கு இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க முடியாமல் தேர்வர்கள் திணறினர்.
குறிப்பாக, சென்னை மாவட்டத்தில் மாநகராட்சி பள்ளிகள் அனைத்தும் சென்னை பள்ளிகள் என்றே அழைக்கப்படுகின்றன. தேர்வுக்கூட நுழைவுச் சீட்டில் தேர்வர்களுக்கு, சென்னை பள்ளி என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது. அது ஆண்கள் பள்ளியா பெண்கள் பள்ளியா எந்தப் பகுதியில் இருக்கிறது என்கிற விவரங்கள் ஏதும் இல்லை. இதனால் தேர்வர்கள் தேர்வுக்கூட மையங்களைத் தேடி அலையும் நிலை ஏற்பட்டது.
டி.என்.பி.என்.சி., முன்மாதிரி: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளின் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளில் தேர்வு மையத்தின் விவரத்தை தெளிவாகக் குறிப்பிடுகிறார்கள். இதனால், தேர்வு மையத்தைக் கண்டுபிடிப்பது எளிதாக இருக்கிறது.  அதே நடைமுறையை ஆசிரியர் தேர்வு வாரியமும் பின்பற்ற வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னையில் மாநகராட்சிப் பள்ளிகளைக் குறிப்பிடும்போது மிகவும் கவனமாக அது எந்த இடத்தில் இருக்கிறது என்ற விவரத்தை முழுமையாக தேர்வுக்கூட நுழைவுச் சீட்டில் குறிப்பிட வேண்டும் என்றும் தேர்வர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஆசிரியர்கள் அச்சம் தவிருமா?

முன்பொருகாலத்தில் ஆசிரியர்கள் மீது மாணவர்களுக்குப் பக்தி, மரியாதை, பயம் முதலியன மேலோங்கிக் காணப்பட்டன. ஆசிரியர்களை வழிகாட்டிகளாகவும் முன்மாதிரிகளாகவும் மாணவர்கள் எண்ணிய காலம் தற்போது மாறிப் போய்விட்டதாகவே படுகிறது.
தொடக்கக்கல்வி முதல் கல்லூரிக்கல்வி வரை பணியாற்றும் ஆசிரியப் பெருமக்கள் அண்மைக்காலமாக மாணவ-மாணவிகளுக்கு அஞ்சும் துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
கண்ணுக்குத் தெரிந்து தவறுகள் செய்யும் மாணவர்களை நேரடியாகக் கூப்பிட்டுக் கண்டிக்க முடியவில்லை. அப்படியே மாணவர்களின் நலன்கருதி கண்டிப்பில் ஈடுபடும் ஆசிரியர்களின் நிகழ்கால வாழ்வு அதோகதி நிலைக்குத் தள்ளப்பட்டு விடுகிறது. நான்காம் வகுப்பே படிக்கும் மாணவிக்குக்கூட இன்று கோபம் பொத்துக்கொண்டு வந்துவிடுகிறது.
ஆசிரியர்கள் தம் சொல்லாலும் செயலாலும் மாணவர்களுக்கு உடல் மற்றும் மன ரீதியாக எப்பொழுதிலும் எத்தகைய வழியிலும் துன்பம் தரக்கூடாது என்று இக்கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் இரும்புக்கரம் கொண்டு வலியுறுத்துகின்றது. இதன் விளைவு என்ன தெரியுமா?
இளைய பாரதமாகத் திகழும் மாணவ சமுதாயம் திசைமாறிச் செல்வதைத் தடுக்க வழியின்றி ஆசிரியர்கள் கைகளைப் பிசைந்துகொண்டு உணர்வின்றி வெறுமனே கூலிக்கு மாரடிக்கும் கூட்டமாக மாறிப்போய்விட்டனர்.நிதானம் தவறி வெற்று உணர்ச்சிகளுக்கு அடிமையாகி தம் இன்னுயிரைப்பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படாமல் தம்மை மாய்த்துக்கொள்ள நினைக்கும் மாணவச்சமூகத்தைத் திருத்தி நல்வழிக்காட்டுவது ஆசிரியர்களின்றி வேறு யார்?
அச்சு,காட்சி ஊடகங்கள்,வளர்ந்துவரும் நவீனத் தொழில்நுட்பங்களான செல்பேசிகள்,இணையங்கள்,தெருவெங்கும் திறந்துகிடக்கும் மதுபானக்கடைகள்,மலிவான போதைப்பொருள்கள்,நலிவடைந்துபோன மனித மதிப்புகள்,அதிநுகர்வுக் கலாச்சார நோக்குகள் மற்றும் போக்குகள் போன்றவை பிஞ்சு உள்ளங்களைப் பெருமளவில் நஞ்சாக்கி வருவது கண்கூடு.
மேலும்,உடல் கவர்ச்சி மற்றும் எதிர்பால் ஈர்ப்புக் காரணமாகப் பதின்பருவ வயதினரிடையே இயல்பாக எழும் அன்பொழுக்கம் தவறாகத் திரிந்து காதலெனக் கூறப்பட்டு வகுப்பறைக்குள்ளும் வெளியேயும் சொல்ல நா கூசுமளவிற்குத் தகாத முறைகளில் நடைபெற்று வருவதை ஆசிரியர்கள் கண்டும் காணாமலும் ஒதுங்கிச்செல்லவே முற்படுகின்றனர்.இந்த இழிநிலைக்குக் காரணம் எது?
மாணவர்களுக்கு இரண்டாம் பெற்றோராக விளங்கும் ஆசிரியரின் கைக்கு விலங்கையும் வாய்க்குப் பூட்டையும் போடும் சட்டமா? பெற்றோரின் மாறிப்போன மனப்போக்கா? சமுதாயத்தின் ஒருதலைப்பட்சமான குறுகிய பார்வையா? பரபரப்பையும் விறுவிறுப்பையும் மட்டுமே குறிக்கோளாகக்கொண்டு செயல்படும் ஊடகங்களின் சமூக அக்கறையின்மையா? மாணவரிடையே மங்கிப்போன குருபக்தியா? இவ்வாறு ஒரு பெரும்விவாதமே நிகழ்த்தவியலும். தப்பித்தவறி தாய் உள்ளத்துடன் குடும்பநிலை மற்றும் வருங்காலம் குறித்து நல்லறிவு புகட்டத் துணியும் ஆசிரிய,ஆசிரியைகளுக்கு மிஞ்சுவது மிரட்டல்கள் மட்டுமே. ஆம். காதல்வயப்பட்ட அப்பாவிப் பள்ளிச்சிறுமி வெளிப்படையாகவே ஆசிரியர்கள்மீது அவதூறுகளைப் பரப்பி அவர்கள் வாழ்க்கையையே நாசப்படுத்திவிடும் கொடுமையை என்னவென்பது?
ஒருசார்பான தீர்ப்பினாலும் முடிவினாலும் அவ்வாசிரியரின் நல்லதோர் குடும்பம் வீண்பழியால் சிதைந்து சின்னாபின்னமாவது என்பது வெளிச்சத்திற்கு வராத பேருண்மையாகும்.இத்தகைய குரலற்றவர்களின் குரலைச் சற்றேனும் காதுகொடுத்து கேட்க இச்சமூகம் ஏனோ முன்வருவதில்லை.இருதரப்பு நியாயங்களை இனியாவது செவிமடுக்க முன்வருதல் எல்லோருக்கும் நல்லது.
அதுபோல,தாம் பணியாற்றும் பள்ளியை முழுத் தேர்ச்சி பெறவைக்கவும், தேர்ச்சிக்குரிய குறைந்த மதிப்பெண்கள் அடைவை எட்டாத மாணவ, மாணவியர்மீது தனிக்கவனம் செலுத்தி,சிறப்பு வகுப்புகள் நடத்தித் தேர்ச்சியுற வைக்கவும் முயலும் ஆற்றல்மிக்க ஆசிரிய, ஆசிரியைகள் படும்பாடுகள் சொல்லிமாளாதவை. மென்மையாகக்கூட மாணவ, மாணவிகளைக் கண்டிக்கவோ, தண்டிக்கவோ இயலவில்லை. ஒருபக்கம் அரசு மற்றும் அதிகாரிகளின் கெடுபிடிகள் மற்றும் கிடுக்கிப்பிடிகள். மறுபக்கம் சொல்பேச்சுக்கேளாத அடங்காப்பிள்ளைகள். இதைத்தவிர, வேறொருபக்கம் நன்குத் திட்டமிடப்பட்டு வேலைக்கு உலைவைக்கும் அச்சுறுத்தல்கள் மற்றும் அவப்பெயர்கள். அதிகம் போனால் பளார் அறைகள், கத்திக்குத்துகள், பாலியல் வன்கொடுமைப் புனைவுகள் எனப் பட்டியல் நீண்டுகொண்டே போகும்.
 தவிர, அண்மைக்காலமாக மாணவ, மாணவியரிடையே சில விரும்பத்தகாத நடவடிக்கைகள் பெருகிக் கிடப்பதை நன்கு அறிய முடிகின்றது. மேலும் சமூகத் தீங்குமிக்கப் பல்வேறு தகாத நடவடிக்கைகளும் மலிந்துள்ளன. கற்றல்-கற்பித்தல் நிகழ்வுகளின்போதே தவறு செய்யும் மாணவனைக்கண்டு உண்மையில் ஆசிரியர்கள் கண்டிக்கத் திராணியின்றி அஞ்சி வருந்தும் அவலநிலைதான் எதிர்காலச் சிற்பிகளை உருவாக்கும் வகுப்பறை நடப்பாக இருக்கின்றது.
தமிழகத்தின் ஒட்டுமொத்த வகுப்பறைகளும் மாணாக்கர்களும் இவ்வாறு உள்ளனர் என்று பொதுவாகக் குற்றம் சாட்டுவது இங்கு நோக்கமல்ல. நல்ல நெல்மணிகளாய் மாணவக் கண்மணிகள் பலர் பல்வேறிடங்களில் அறியக்கிடைக்கின்றனர் என்பது மறுப்பதற்கில்லை. எனினும், பதர்கள், முட்செடிகள், நச்சுக்களைகள் போலுள்ள தீயோரை அடையாளம் காட்டுவதென்பது சமுதாயக் கடமையாகும். திசைமாறிப் பயணித்துக்கொண்டிருக்கும் மாணவ சமுதாயத்தை மீளவும் நல்வழிக்குக் கொணர பெற்றோர், சமுதாயம், அரசாங்கம், ஊடகங்கள் ஆகியவை ஆசிரியர்களுடன்  கைகோர்ப்பது சாலச்சிறந்தது. ஆசிரிய சமுதாயத்தைத் தவறாகச் சித்தரித்து கேலி,கிண்டல் செய்து இழிவாகக் கருதும் சமுதாய பொதுமனநிலை நிச்சயம் மாற்றம்பெற வைக்கவேண்டியது. அதற்கு ஆசிரியரின் தனிப்பட்ட நல்லொழுக்கப்பண்பும் மட்டுமல்லாது காலந்தோறும் சமுதாயத்திற்கு உதவக்கூடியவகையில் அமைந்த விழுமியகுணங்களும் முன்மாதிரி நடத்தைகளும் இன்றியமையாதவை.
ஆசிரியர்-மாணவர் உறவென்பது ஆண்டான்-அடிமை உறவல்ல.அதுவொரு நல்ல கருத்துப் பரிமாற்றம் உள்ளடக்கிய நட்புறவு.அதைப் போற்றிப் பேணிக்காத்தல் என்பது இருவரின் கடமையாகும். அப்போதுதான் வலியின்றிச் சுதந்திரமாக கல்வி மலரும். நாடும் நலமுடனும் வளமுடனும் ஒளிவீசித் திகழும்.

சனி, 17 ஆகஸ்ட், 2013

ஆசிரியர் தகுதித் தேர்வு : உயர்நீதிமன்றம் தடை விதிக்க மறுப்பு

ஆசிரியர் தகுதித் தேர்வு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. திட்டமிட்டபடி ஆகஸ்ட் 17, 18 ம் தேதிகளில் தேர்வுகள் நடைபெறும் என அறிவித்துள்ளது. இட ஒதுக்கீட்டு பிரச்சினையை முடிவு செய்யும் வரை தேர்வுக்கு தடை விதிக்க கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
மனுதாரர் கருப்பையா கோரிக்கைபடி ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு தடை விதிக்க நீதிபதி மறுப்பு தெரிவித்து தீர்ப்பளித்தார். கருப்பையா மனுவுக்கு தமிழக அரசு 2 வாரத்தில் பதிலளிக்க ஐகோர்ட் ஆணை பிறப்பித்துள்ளது.

மனு விபரம்
தமிழகத்தில் ஆகஸ்ட் 17, 18 தேதிகளில் ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறுகிறது. ஆசிரியர் தகுதி தேர்வில் ஆதி திராவிடர், பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு இல்லை என மனுவில் குறிப்பிடபட்டுள்ளது. இட ஓதுக்கீடு அளிக்க தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் விதியில் வழி உள்ளது. தேர்வு நடத்தும் மாநிலங்கள் ஆசிரியர் கல்வி கவுன்சில் விதிப்படி இடஒதுக்கீடு அளிக்கலாம் என விதி உள்ளது. சில மாநிலங்கள் ஆதி திராவிடர், பழங்குடியினருக்கு மதிப்பெண்ணை தளர்த்தியுள்ளன. எனவே தமிழக அரசும் ஆதி திராவிடர், பழங்குடியினருக்கு மதிப்பெண்ணை தளர்த்க்கோரி மனு அளிக்கப்பட்டிருந்தது.

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013

டி.இ.டி., தேர்வுக்குஆகஸ்ட் 15,2013,19:31 IST

எழுத்தின் அளவு :
சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி.,) நேர மேலாண்மை மிகவும் அவசியம் என, மதுரை நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பாங்கிங் நிர்வாக இயக்குனர் பெ.வெங்கடாச்சலம் கூறினார்.
* ஆசிரியர் தகுதித் தேர்வை எழுத தயாராவோர், பதட்டம் இல்லாமல் படித்து தேர்வை எதிர்கொள்ள வேண்டும். இனி, புதிய பாடங்களை படித்தல் கூடாது. ஏற்கனவே படித்துள்ளவற்றையே திருப்புதல் செய்ய வேண்டும்.
* தமிழில் நூலாசிரியர்கள், தமிழ் எண்கள், பா வகை, யாப்புவில் தளை, அணி, ஆகுபெயர்களை படிக்க வேண்டும்.
* குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தலில், கோட்பாடுகளை கூறியவர்கள், பயன்பாடு, தோன்றிய ஆண்டு, உளவியலில் பல்வேறு பிரிவுகளை தெரிந்து கொள்வது அவசியம்.
* ஆங்கிலத்தில் சுருக்கு வடிவத்தின் விரிவாக்கம், ஆங்கிலச் சொல்லுக்கு இணையான, எதிர்மறை சொற்கள், பறவை, விலங்குகளின் ஒலிகள், அவற்றின் பாலினங்கள், அவற்றின் கூட்டப் பெயர்களை தெரிந்து கொள்ள வேண்டும்.
* கணக்கில் எண்ணியல், பரப்பளவு, கனஅளவு, தனிவட்டி, கூட்டுவட்டி, சராசரி, புள்ளியியல் பாடங்களில் முக்கிய சூத்திரங்கள் தெரிவது அவசியம்.
* இயற்பியலில் அலகுகள், விதிகள், பயன்கள் தெரிந்து இருக்க வேண்டும். வேதியியலில் தனிமங்களின் குறியீடுகள், சேர்மங்களின் பயன்கள், வேதிப்பெயர்கள், அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் வேதிச் சேர்மங்களை படிக்க வேண்டும்.
* தாவரவியலில் செல்கள், வைரஸ், பாக்டீரியா போன்ற பகுதிகளை நினைவுபடுத்தவும்.
* உலக புவியியலில் கோள்களின் சிறப்பம்சங்கள், இந்திய மாநிலங்களின் தலைநகரங்கள், உலகில் நடைபெற்ற முக்கிய பேரழிவுகள், நடந்த ஆண்டு, இந்திய மலைகள், காடுகள் தொடர்புடைய பகுதிகளை அறிந்திருக்க வேண்டும்.
* மனித உடலியல் பகுதியில் நோய்கள், வைட்டமின்கள், ரத்தசெல்கள் பற்றி அறிய வேண்டும்.
* வரலாறு பகுதியில் முக்கிய போர்கள், நடந்த ஆண்டு, சுதந்திர போராட்ட காலத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள், நூல், நூலாசிரியர்கள், இயக்கங்களை தோற்றுவித்தவர்கள்.
* அரசியல் அமைப்பின் முக்கிய ஷரத்துகள் (குறிப்பாக குழந்தை கல்வி தொடர்பானவை), அட்டவணைகள், சட்ட திருத்தங்கள் அறியவேண்டும்.
* சூழ்நிலையியல் பாடத்தில் சுற்றுச்சூழல் தொடர்புடைய மாநாடுகள், தினங்கள், சட்டங்கள், கல்வி தொடர்புடைய தினங்கள், தேசிய நினைவுச் சின்னங்களை நினைவுபடுத்த வேண்டும்.
* விண்வெளி தொடர்புடைய நிகழ்வுகள், ஆண்டுகள், மையங்கள், ஊராட்சி நிர்வாகம், தமிழக வரலாறு தொடர்புள்ள நிகழ்வுகளை அறிந்திருப்பது அவசியம்.
கடந்த ஆண்டு நடந்த தேர்வுகளில், பல கேள்விகளுக்கு பதில் தெரிந்து இருந்தும், நேர மேலாண்மை தெரியாததால் பலர் தோல்வி அடைந்தனர். எனவே, வீட்டிலேயே மாதிரி தேர்வுகளை எழுதிப் பழகலாம்.
150 வினாக்களில், முதலில் நன்கு தெளிவாக தெரிந்த விடைகளை எழுதியபின், மற்ற வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும். இத்தேர்வில் தவறான விடைகளுக்கு மதிப்பெண் பிடித்தம் கிடையாது. எனவே, எல்லா வினாக்களுக்கும் விடையளித்து விடவும்.
தேர்வுக்கு முன்தினம், நன்கு தூங்க வேண்டும். தேர்வு நாளில் ஹால் டிக்கெட், பால் பாயின்ட் பேனாவை முதலிலேயே எடுத்து வைத்து, கடைசி நேர பதற்றத்தை தவிர்க்க வேண்டும்.
நேர மேலாண்மைக்கு கடிகாரம் அணிந்து செல்வது நல்லது. தேர்வு மையத்தை முன்தினமே அறிந்து வைத்திருப்பது நல்லது. எல்லாவற்றையும்விட, "என்னால் வெல்ல முடியும்" என்ற நம்பிக்கை இருப்பது அவசியம். இவ்வாறு தெரிவித்தார். 

ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013

மத்திய அரசு ஊதியத்துடன் ஒப்பிட்டால் இடைநிலை ஆசிரியரின் ஒரு மாத இழப்பு

மத்திய அரசு ஊதியம்:

அடிப்படை ஊதியம் : 9300
தர ஊதியம் : 4200
அகவிலைப்படி (80%) : 10800

மொத்தம் : 24300

தமிழ்நாடு ஊதியம்:

அடிப்படை ஊதியம் : 5200
தர ஊதியம் : 2800
தனி ஊதியம் : 750
அகவிலைப்படி (80%) : 7000

மொத்தம் : 15750

ஒரு மாத இழப்பு : 8550/-

இது இந்த மாதத்தில் பணியில் சேர்ந்தவருக்கான ஒரு மாதிரி கணக்கீடு தான் . பணியில் உள்ளோருக்கு இன்னும் இழப்பு அதிகம். சங்கங்கள் தாண்டி அனைவரும் ஒன்றினைந்து போராடினால் மட்டுமே 9300+4200 தர ஊதியம் என்ற இலக்கை அடைய முடியும்

இடைநிலை ஆசிரியர்கள் கவனிக்க

மூவர் குழு அரசாணையில் தங்களுக்கு தர ஊதியம் உயர்வு இல்லை என அறிந்தபின்பும் பல்வேறு அமைப்புகள் நடத்தும் பல்வகைப்போராட்ட புகைப்படங்கள் ,நாளிதழ்செய்திகள் ,தொலைக்காட்சி ஊடக செய்திகளின் ஒளிக்காட்சிகள் பார்வையிட்டவகையில் அனேகமாக அனுபவம் மிக்க (சீனியர்)ஆசிரியர்கள்மட்டுமே,ஆங்காங்கே அதுவும் குறைந்த அளவிலே பங்கேற்பது கண்கூடாக த்தெரிகிறது.

அரசு அனைத்தையும் உளவுப்பிரிவு மூலம் கண்காணிக்கிறது.

எந்த இயக்கமாயினும் அமைப்பின் முண்ணனி தலைவர்கள்,மற்றும் தீவிரபற்றாளர்கள் கலந்து கொள்வர் என்பது இயல்பே

இதுமட்டும் போதாது, கோரிக்கை வென்றெடுக்க

உள்ளத்தில் நம்பிக்கையோடு அனைத்து இடைநிலை ஆசிரியர்களும் இயக்க வேறுபாடு பாராமல் யார் நடத்தும் போராட்டத்திலும் பங்கேற்று அவற்றை வலுப்படுத்தினால் மட்டுமே நோக்கம் நிறைவேறும்.

இது எங்கள் அமைப்பின் வேண்டுகோள் இல்லை என எவற்ரையும் ஒதுக்காமல் தர ஊதியம் கோரும் அனைத்து இயக்கப்போராட்டத்தில் அனைவரும் குறிப்பாக இடைநிலை ஆசிரியர்கள் அனைவரும் பங்கேற்பீர் !!!!!!!!!!!!!!!!!!!!

புரளிகளைநம்பாதீர்
எண்ணிக்கை மட்டுமே எதையும் வென்றெடுக்கும்.எல்லோரும் ஒருவரும் விடுபட்டாமல், சாக்கு போக்கு சொல்லாமல்,அவசரம் என சமாளிக்காமல்.காரணம் கூறாமல், அனைவரும் பங்கேற்பீர் !!!!!!!!!!!!!!!!!!!!
அதுமட்டுமே வெற்றிக்கு வழி
அதுமட்டுமே வெற்றிக்கு வழி
அது ஒன்றே வெற்றிக்கு வழி

வியாழன், 1 ஆகஸ்ட், 2013

டி.இ.டி., தேர்வர்களுக்கு, வரும், 5ம் தேதி, டி.ஆர்.பி., இணைய தளத்தில், "ஹால் டிக்கெட்' வெளியிடப்படும்' - டி.ஆர்.பி.,

வரும், 17,18 தேதிகளில், டி.இ.டி., தேர்வு நடக்கிறது. 17ம் தேதி நடக்கும், முதல் தாள் தேர்வை (இடைநிலை ஆசிரியருக்கானது), 2,68,160 பேரும், 18ம் தேதி நடக்கும், இரண்டாம் தாள் தேர்வை (பட்டதாரி ஆசிரியருக்கானது), 4,11,634 பேரும் எழுதுகின்றனர்.

தேர்வுகளுக்கான ஏற்பாடுகள், முழு வீச்சில் நடந்து வருகின்றன. தேர்வர்களுக்கு, வரும், 5ம் தேதி, டி.ஆர்.பி., இணையதளத்தில், "ஹால் டிக்கெட்' வெளியிடப்படுகிறது.
இதற்கிடையே, 27 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், விண்ணப்பங்களை, சரியாக பூர்த்தி செய்யவில்லை என, தெரிய வந்துள்ளது. 44 பேர், ஆணா, பெண்ணா என்பதையே குறிப்பிடவில்லை. 2,500 பேர், தேர்வு மையத்தை குறிப்பிடவில்லை. விருப்ப பாடம் குறித்த தகவலை, 7,800 பேர் பூர்த்தி செய்யவில்லை என்பதையும், டி.ஆர்.பி., கண்டறிந்துள்ளது. 17 ஆயிரம் பேர், பல்வேறு தவறுகளை செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த தவறுகளை சரிசெய்ய, தேர்வு நாளன்று வாய்ப்பு வழங்கப்படும் என, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது. தேர்வு நாளன்று வழங்கப்படும் விடைத்தாளில், அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை, சரியாக பூர்த்தி செய்ய வேண்டும் என்றும், டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.

இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்காததால் மாநிலம் தழுவிய மறியல் போராட்டம்

இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்காததால் மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக சங்கத்தின் மாநில செயலாளர் தெரிவித்துள்ளார்.இடைநிலை ஆசிரியர்கள் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ராபர்ட் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த 2009-ம் ஆண்டு தமிழகம் முழுவதும் மாநில பதிவு மூப்பு அடிப்படையில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
அவர்களில் ஏராளமானோர் தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஆவர். அவர்கள் அனைவரும் தற்போது சென்னை, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற தொலை தூர மாவட்டங்களில் தங்களது குடும்பத்தை விட்டு விட்டு பணியாற்றி வருகின்றனர். தற்போது வரை இந்த ஆசிரியர்களுக்கு இடமாறுதல் வழங்கப்படவில்லை. இதனால் நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். இதுமட்டுமல்லாமல், எங்களுக்கு முன்பு பணியில் சேர்ந்தவர்களுக்கு வழங்கியது போன்று எங்களுக்கு அடிப்படை சம்பளம் நிர்ணயிக்கப்படவில்லை. குறைவான சம்பளமே பெற்று வருகிறோம். ஊதிய குறைப்புஇதுபோன்ற சூழ்நிலையில் ஒட்டுமொத்த இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஊதிய உயர்வு குறித்து 3 நபர் ஊதியக்குழு அறிக்கையில் எந்தவித அறிவிப்பும் இல்லை. இது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதை போன்று உள்ளது. 6-வது ஊதியக்குழுவில் மிகக்கடுமையாக இடைநிலை ஆசிரியர்கள் பாதிப்படைந்தனர். ஒருநபர் குழுவிலும் புறக்கணிக்கப்பட்டனர். தற்போது மீண்டும் 3 நபர் குழுவிலும் மிக மோசமாக ஏமாற்றப்பட்டுள்ளனர். எந்த ஊதியக்குழுவிலும் ஊதிய இழப்பு என்பது இருக்காது. ஆனால் தமிழகத்திலேயே 6-வது ஊதியக்குழுவில் தான் ஒரு பதவிக்கு ஊதிய குறைப்பு என்பது முதல் முறையாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தோம். மறியல் போராட்டம்அப்போது, மத்திய அரசுக்கு இணையாக ஊதியம் வழங்க பரிந்துரைப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதைப்பற்றி ஒரு வார்த்தை கூட 3 நபர்கள் கொண்ட குழுவின் அறிக்கையில் இல்லை. அடுத்த மாதம் (ஆகஸ்டு) 4-ந் தேதி மதுரையில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் மதுரையில் நடக்க உள்ளது. இதில் பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் பங்கேற்கின்றன. இதன்பின்பு, எங்களது கோரிக்கையை வலியுறுத்தி மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

சனி, 27 ஜூலை, 2013

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மாண்புமிகு தமிழக முதல்வரின் 26.02.2011 அன்றைய உறுதிமொழி - பழைய நாளிதழ் செய்தி

தமிழகத்தில் விரைவில் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஊதிய விகிதத்தில் உள்ள முரண்பாடுகளை களைந்து, இதர கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையிலும், அவர்களுடைய சலுகைகளைப் பேணிப் பாதுகாக்கும் வகையிலும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற உறுதியை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சத்துணவு ஊழியர்கள், போக்குவரத்து ஊழியர்கள், டாஸ்மாக் ஊழியர்கள், ஆசிரியர்கள், கெளரவ விரிவுரையாளர்கள் என்ற வரிசையில் தற்போது அரசு ஊழியர்களையும் திமுக அரசு போராடும் நிலைக்கு தள்ளிவிட்டிருக்கிறது.
மத்திய அரசின் ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஊதியம் அளித்துவிட்டதாக திமுக அரசு தம்பட்டம் அடித்துக் கொள்கிறது. எனினும், இதில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன.
இதே போன்று, ஒப்பந்த முறை அறவே நீக்கப்படும் என்ற திமுக அரசின் தேர்தல் வாக்குறுதி இன்று வரை நிறைவேற்றப்படவில்லை. கடந்த ஐந்தாண்டு காலத்தில் லட்சக்கணக்கான காலிப் பணியிடங்களை நிரப்பியதாக திமுக அரசு அறிவித்தாலும், மருத்துவமனைகளிலும், அரசு அலுவலகங்களிலும், பள்ளிக்கூடங்களிலும் ஊழியர்கள் பற்றாக்குறை இதுவரை கண்டிராத அளவுக்கு இருக்கிறது.
இந்த சூழ்நிலையில், ஊதியக் குழுவில் உள்ள முரண்பாடுகளை களைதல், காலிப் பணியிடங்களை முறையான நியமனங்கள் மூலம் நிரப்புதல், தேர்வு நிலை, சிறப்பு நிலை, முதுநிலை ஊதிய நிர்ணயம் செய்யப்படும்போது அடுத்த பதவி உயர்வுக்கான ஊதியம் மற்றும் தர ஊதியம் வழங்கிடுதல், சிறப்பு காலமுறை ஊதியம், மதிப்பூதியம் ஆகியவற்றை அடியோடு நீக்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 23.2.2011 முதல் சென்னை சேப்பாக்கம் வளாகத்தில் அரசு ஊழியர்கள் காலவரையற்ற உண்ணாவிரதத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.
அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசி உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வராமல் அரசு வேடிக்கை பார்த்தது. மேலும், கோரிக்கை மனுவினை அளிக்க வந்த அரசு ஊழியர்களை காவல் துறையைக் கொண்டு தடியடி நடத்தி கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள்.
முதல்வர் கருணாநிதியின் இந்த அடக்குமுறை நடவடிக்கைக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 1989ம் ஆண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் என்று அறிவித்துவிட்டு, அதில் பல முரண்பாடுகளை உருவாக்கியவர்தான் கருணாநிதி. பின்னர் 1991ம் ஆண்டு அதிமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு, ஊதிய முரண்பாடுகள் களையப்பட்டன.
மேலும், அமைச்சுப் பணியாளர்களுக்கு 5 சதவீத தனி ஊதியம் வழங்கி, அவர்களின் பதவி உயர்வில் நிலவி வந்த தேக்க நிலையை போக்கும் வகையில், 12,000 இளநிலை உதவியாளர்களுக்கு உதவியாளர் பதவி உயர்வு கிடைக்கவும் வகை செய்யப்பட்டது.
2000க்கும் மேற்பட்ட உதவியாளர்களுக்கு கண்காணிப்பாளர் பதவி உயர்வு கிடைக்கவும், கண்காணிப்பாளர் பதவிக்கு மேலான பதவிகளைப் பொறுத்த வரையில் அந்தந்த துறைகளில் உள்ள மொத்தப் பணியாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் உயர் பதவிகள் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
எனவே, உண்ணாவிரத அறப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களை அழைத்துப் பேசி அவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற முதல்வர் கருணாநிதி உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இதை திமுக அரசு புறக்கணித்தால், விரைவில் தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஊதிய விகிதத்தில் உள்ள முரண்பாடுகளை களைந்து, இதர கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையிலும், அவர்களுடைய சலுகைகளைப் பேணிப் பாதுகாக்கும் வகையிலும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற உறுதியை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா

பகுதி நேர ஆசிரியர்களுக்கு முழு சம்பளம் வழங்கக் கோரி மனு

விருதுநகர் மாவட்ட அனைவருக்கும் கல்வி இயகத்தின் சார்பில் நியமனம் செய்யப்பட்ட பகுதி நேர ஆசிரியர்களுக்கு முழு சம்பளம் வழங்க வேண்டும் எனக் கூறி புகார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் ஆகியோருக்கு பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சார்பில் நேரில் கொடுத்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: 
விருதுநகர் மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் கடந்த ஆண்டு பகுதி நேர ஆசிரியர்களாக 427 பேர் நியமனம் செய்து மாதந்தோறும் 12 நாள்கள் வேலைநாள்கள் எனக் கூறியும் ரூ.5 ஆயிரம் மதிப்பூதியமும் வழங்கப்படும் கூறப்பட்டது.ஆனால் கடந்தாண்டு சரியான முறையில் மதாந்தோறும் வழங்கப்பட்டது. அதேபோல், நிகழாண்டில் ஜூன் மாதம் தலைமை ஆசிரியரின் உத்தரவுப்படி 12 நாள்கள் வரையில் வேலை செய்துள்ளோம். ஆனால், சம்பளமாக ரூ.3750 வீதம் இந்த மாவட்டத்தில் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், மற்ற மாவட்டங்களில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் சரியாக முழு அளவு சம்பளம் வழங்கப்பட்டிருக்கிறது. இதுபோன்ற காரணங்களால்   குறிப்பிட்ட அளவு சம்பளத்தை இதுவரையில் பெறாமலே உள்ளோம்.
அதனால், முழு அளவு சம்பளம் வழங்க வேண்டும் எனக்கூறி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் ஆகியோரிடம் நேரில் அளித்த மனுவில் சிறப்பாசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.  

இடைநிலை ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்


ஊதியக் குழு முரண்பாட்டைக் களைய அமைக்கப்பட்ட மூவர் குழு அறிக்கையில் இடைநிலை ஆசிரியர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகக் கூறி ஸ்ரீவில்லிபுத்தூர் உதவித் தொடக்கக் கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் கோரி போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் 6-வது ஊதியக் குழுவின் அறிக்கையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏராளமான ஊதிய முரண்பாடுகள் இருந்தது. இதனைக் களைய அரசு மூவர் குழுவை அமைத்தது. இந்த குழுவின் அறிக்கையின் அடிப்படையில் அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அரசாணையில் இடைநிலை ஆசிரியர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கூறி, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஸ்ரீவில்லிபுத்தூர் உதவித் தொடக்கக் கல்வி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாரத் தலைவர் கருப்பசாமி தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் வைரமுத்து, மாவட்டச் செயலாளர் சங்கர்கணேஷ் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.ஆர்ப்பாட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாரச் செயலாளர் ஆர்.கண்ணன், பொருளாளர் ராமச்சந்திரன், சிவகாசி வட்டாரச் செயலாளர் பி.கண்ணன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சேரன் செங்குட்டுவன் உள்ளிட்ட ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

வியாழன், 18 ஜூலை, 2013

பள்ளி வேலை நேரத்தில் விழாக்கள்: கல்வித் தரம் பாதிக்கப்படும் அபாயம்

திருநெல்வேலி: அரசு பள்ளிகளில் வேலை நேரத்தில் விழாக்களை நடத்தி கால விரயம் செய்யப்படுவதால் மாணவ, மாணவிகள் கல்வி பாதிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின் காலதாமதமாக அரசு துவக்க, நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதனால் சனிக் கிழமைகளிலும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. கல்வித் தரத்தை அதிகரிக்கவும், 100 சதவீத தேர்ச்சிக்கும் பள்ளிகளில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
ஆனால் தமிழக முதல்வரின் சீரிய எண்ணத்தை குலைக்கும் வகையில் அரசு பள்ளிகளில் வேலை நேரத்தில் விழாக்கள் அடிக்கடி நடத்தப்பட்டு வருகிறது. தற்போதைய சீசனில் பரவலாக பல்வேறு அரசு பள்ளிகளில் ஆங்கில பள்ளிகள் துவக்க விழா நடத்தப்படுகிறது. இதனை மாவட்ட நிர்வாகமும், கல்வித் துறை அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை.
இதில் அந்தந்த பகுதி ஆளுங்கட்சி நிர்வாகிகளுடன், ஆசிரியர், மாணவர் நலனுக்கு எதிராக செயல்படும் நிர்வாகிகள் பலரும் முதல்வரின் எண்ணத்தை தடுக்கும் வகையில் பங்கேற்று நீண்ட நேரம் "அட்வைஸ்" மழை பொழிகின்றனர்.
பள்ளி வேலை நேரத்தில் விழா நடப்பதால் தலைமை ஆசிரியர்கள், ஆசிரிய, ஆசிரியைகள் இதற்கான ஏற்பாடுகளிலேயே தீவிரம் காட்டுகின்றனர். மாணவ, மாணவிகளும் முழு எண்ணிக்கையில் வேறு வழியில்லாமல் பங்கேற்பதால் பள்ளிகளில் அனைத்து கல்விப் பணிகளும் பாதிக்கப்படுகிறது.
தொடர்ந்து இது போன்ற விழாக்களால் கல்வித் தரம் பாதிக்கப்படுவதோடு, குறிப்பிட்ட காலத்திற்குள் பாடங்களை நடத்தி முடிக்காத சூழ்நிலை ஏற்படலாம் என்பதால் 100 சதவீத தேர்ச்சி என்பது கானல் நீராகவே அமையும். தற்போது இவற்றை கண்டு கொள்ளாமல் இருக்கும் அதிகாரிகள் அப்போது சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் சூழ்நிலை ஏற்படுவதாக ஆசிரிய சங்கங்கள் தெரிவிக்கின்றன.
எனவே, பள்ளி வேலை நேரத்தில் அடிக்கடி நடத்தப்படும் அரசு விழாக்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதோடு, பள்ளியில் நன்கொடை வசூலை மறைக்க ஆளுங்கட்சி பிரமுகர்கள் மற்றும் ஆசிரியர், மாணவர் நலனுக்காக எதிராக செயல்படும் நிர்வாகிகள் பங்கேற்பதையும் முழு அளவில் தடை செய்ய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஆசிரிய சங்கங்கள் விரும்புகின்றன.

செவ்வாய், 16 ஜூலை, 2013

தேர்வுக்கு படித்தல் - ஒரு திட்டமிட்ட கலை

மூன்று மணி நேரம்தான். அதற்குள் கேட்பவற்றை சிறப்பாக எழுதி முடித்துவிட வேண்டும். புத்தகத்தில் உள்ளதையே எழுத வேண்டும். முழு மதிப்பெண்ணை எடுத்தால்தான், நினைத்த மேற்படிப்பை படிக்க முடியும்.
இந்த கல்விமுறையால், மாணவர்களுக்கு ஏற்படும் மனஅழுத்தங்களுக்கு அளவேயில்லை. வெறுமனே அரசு தேர்வுகளுக்கு தயாராகும் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே மன அழுத்தம் ஏற்படுவதில்லை. கல்லூரி மாணவர்கள், போட்டித் தேர்வுக்கு படிப்பவர்கள், தொலைநிலைக் கல்வி முறையில் படிப்பவர்கள் உள்பட, அனைத்து தரப்பாருக்குமே, படிப்பு தொடர்பான மன அழுத்தங்கள் உண்டு.
எனவே, இங்கே படிப்பது என்பதுதான் முக்கிய அம்சம். அது பள்ளியா, கல்லூரியா, தொலைநிலைக் கல்வியா அல்லது போட்டித் தேர்வுக்கு படிப்பதா என்பது விஷயமல்ல. தேர்வுக்கு படிக்கும் டென்ஷனிலிருந்து விடுபடுவதற்கு பல மாணவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.
இக்கட்டுரை, சிறப்பான முறையில் எப்படியெல்லாம் படிக்கலாம் என்று அலசுகிறது.
பொருத்தமான நேரம்
படிப்பதற்கென்று, இதுதான் பொருத்தமான நேரம் என்பதெல்லாம் இல்லை. நமக்கு எந்த நேரம் வசதியாகவும், உற்சாகமாகவும் படுகிறதோ, அந்த நேரத்தையே, படிப்பதற்கு தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். பொதுவாக, இரவு 10.30 மணிக்குமேல் உலகம் அமைதியாக இருக்கும். சிலருக்கு அந்த நேரம் மிகவும் பிடிக்கும்.
சிலருக்கு அதிகாலை 3 மணி அல்லது 4 மணிக்கு எழுந்து படிப்பது பிடிக்கும். சிலருக்கு, நண்பகல் வேளையில் படிப்பது பிடிக்கும். எனவே, இது அவரவர் உடல்நிலையையும், விருப்பத்தையும் பொறுத்தது. இதுதான் சிறந்த நேரம் என்றெல்லாம் எதுவும் இல்லை.
ஆரம்பத்திலிருந்தே படிக்கத் தொடங்குதல்
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு, தினந்தோறும் தங்களின் பாடங்கள் வகுப்பறைகளில் அறிமுகப்படுத்தப்படுவதால், அவர்களுக்கு பெரியளவில் பிரச்சினையில்லை. ஆனால், தொலைநிலைக் கல்வி முறையில் படிப்பவர்கள், தேர்வு நெருங்கும் நேரம்வரை அலட்சியமாக விட்டுவிடுவார்கள். தங்களின் புத்தகங்களையே தொட மாட்டார்கள். தேர்வுக்கு இன்னும் சில நாட்களே இருக்கின்றன எனும் நிலை வரும்போதுதான், அவர்களின் பலர் படிக்கவே தொடங்குகின்றனர்.
இதனால், பலர், மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். தொலைநிலைத் தேர்வை வெறுமனே நிறைவுசெய்ய வேண்டும் என்று எழுதுகிறவர்களைவிட, அதில் அதிக மதிப்பெண்கள் பெற்று மேல்நிலைப் படிப்பிற்கு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அதிக மனஅழுத்தம் ஏற்படுகிறது. எனவே, ஆரம்பத்திலிருந்தே வழங்கப்பட்ட பாடப்புத்தகங்களை படிக்கத் தொடங்கிவிட வேண்டும். அப்போதுதான் இறுதி நேரத்தில் திருப்புதலை மேற்கொண்டு, சிறப்பாக எழுதி, அதிக மதிப்பெண்களைப் பெற முடியும்.
போட்டித் தேர்வுகளைப் பொறுத்தவரை சொல்லவே வேண்டாம். ஆரம்பம் முதலே கடினமாக படித்தால் மட்டுமே, அவற்றில் வெற்றிபெற முடியும்.
திட்டம் வகுத்தல்
என்னதான் கடினமாக உழைத்தாலும், திட்டமிட்டு உழைப்பவனே வெற்றியடைவான் என்பது பிரபலமான அறிவுரை மொழி. அதற்கேற்ப, என்னதான் அதிகநேரம் படித்தாலும், திட்டமிட்டு, தெளிவான புரிதலுடன் படித்தால்தான் பயன் கிடைக்கும். இந்த நாளுக்குள் இந்தப் பாடத்தை முடித்துவிட வேண்டும் மற்றும் இதை இத்தனைமுறை திரும்ப திரும்ப படிக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ள வேண்டும்.
இல்லையெனில், எதற்கு எதைப் படித்தோம் என்று குழம்பி, தேர்வை எழுதுகையில், பலவற்றை மறந்து, சொதப்பி விடுவோம். எனவே, திட்டமிட்டு சிறப்பாக படித்துக்கொள்ள வேண்டும்.
முக்கியமானவற்றை குறிப்பிடல்
படிக்கும்போது முக்கியமான பாயின்டுகள் என்று தோன்றுபவைகளை பென்சிலின் மூலம் அடிக்கோடிட்டுக் கொண்டால், அவற்றை திரும்ப படிக்கும்போது எளிமையாக இருக்கும். மேலும், ஆங்கிலம் போன்ற வேற்றுமொழிகளில் பாடங்களைப் படிக்கையில், பல வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாமல் இருக்கும். எனவே, அதற்கான அர்த்தங்களை, அந்தந்த பக்கங்களிலேயே எழுதி வைத்துக்கொள்ள வேண்டும். இதன்மூலம், நன்றாக புரிந்து படிக்க முடியும்.
போதுமான இடைவெளி
படிக்கையில், தொடர்ந்து பல மணிநேரங்கள் ஒரே இடத்தில் அமர்ந்து படிக்கையில், சோர்வு ஏற்படுவதை தவிர்ப்பது கடினம். எனவே, தேவைப்படும் நேரத்தில், சிறிய சிறிய இடைவெளிகளை எடுத்துக்கொள்ள வேண்டும். தொடர்ந்து உட்கார்ந்தே படித்தால், சிறிதுநேரம் நடந்துகொண்டு படிக்கலாம். சிறிதுநேரம் கீழே அமர்ந்துகொண்டோ, எழுத்து மேசை பயன்படுத்தியோ அல்லது மேசை பயன்படுத்தியோ, இவ்வாறு மாறி மாறி செயல்பட்டு, நமது சோர்வை விரட்டலாம்.
வழக்கமாக படுக்கும் கட்டிலின் மீது, இரவில் அமர்ந்து படிப்பதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில், பலருக்கு, இரவில் அதன்மீது அமர்ந்து படிக்கையில், விரைவில் தூக்க உணர்வு ஏற்படும்.
எவ்வளவு மதிப்பெண்?
தேர்வுக்கு படிக்கும்போதே, குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் எடுத்தால்போதும், 60 எடுத்தால்போதும் அல்லது 80 எடுத்தால்போதும் என்று நினைத்துப் படிப்பது பெரும் தவறு.
முடிந்தவரை, அனைத்து விஷயங்களையும் படிக்க வேண்டும். முழு மதிப்பெண்களுக்கு குறிவைத்து எழுத வேண்டும். அதேசமயம், Objective type தேர்வுகளில் நெகடிவ் மதிப்பெண் உள்ள தேர்வுகளை எழுதுகையில் கவனமாக செயல்பட வேண்டும். மற்றபடி, இதர விரிவான எழுத்துத் தேர்வுகளில், முழு மதிப்பெண்களுக்கும் எழுத வேண்டும்.
அடுத்தவரை பின்பற்ற முயல வேண்டாம்
உங்களின் நண்பர் படிக்கும் முறை உங்களுக்கு ஒத்துவரலாம் அல்லது ஒத்துவராமல் போகலாம். உங்களின் நண்பர் அதிக மதிப்பெண்களைப் பெறுபவராகவும் இருக்கலாம். ஆனால், அதற்காக அவரையேப் பின்பற்ற வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. உங்களுக்கு ஒத்துவராத முறையினால், உங்கள் படித்தல் செயல்பாட்டில் மிகப்பெரிய பின்னடைவு ஏற்படவும் வாய்ப்புண்டு.
எனவே, எந்தமுறையில் படித்தால் உங்களுக்கு விரைவில் சோர்வு ஏற்படாதோ, எளிதில் கிரகிக்க முடியுமோ, அதிகளவு படிக்க முடியுமோ, அந்த முறையையே பின்பற்றி, வெற்றிபெற முயற்சிக்க வேண்டும்

இரட்டைப் பட்டப்படிப்பு பயனுள்ள ஒன்றா?

இன்டக்ரேட்டட் அல்லது இரட்டைப் பட்டப் படிப்புகள், நேரத்தை மிச்சப்படுத்தி, குறிப்பிட்ட துறைகளில், ஆராய்ச்சித் திறன்களை மேம்படுத்த உதவுகிறது என்பதை இன்றைய மாணவர்கள் பல பேர் புரிந்து கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு, ஐ.ஐ.டி., கான்பூர் உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்கள், பொறியியல், மேலாண்மை, அறிவியல், மானுடவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில், இரட்டை அல்லது இன்டக்ரேட்டட் பட்டப் படிப்புகளை வழங்குகின்றன.
ஒன்றில் இரண்டு...
படித்து முடித்து பணிவாய்ப்புக்காக பட்டதாரிகள் அல்லாடுவதை தவிர்க்கும் வகையில், இந்த இன்டக்ரேட்டட் படிப்புகள் வடிவமைக்கப்பட்டு, ஒருவரை பணிக்கு தயார் செய்கின்றன. இடைவெளியின்றி, ஒரே நேரத்தில், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பட்டப் படிப்புகளை படிக்கும் வாய்ப்புகளை இந்த இன்டக்ரேட்டட் படிப்புகள் வழங்குகின்றன.
சில நிறுவனங்களுக்கு, பொறியியல் மற்றும் மேலாண்மை திறன்களைப் பெற்ற மனிதவளம் தேவைப்படுவதால், அவை, இரட்டைப் பட்டப் படிப்பு பெற்ற நபர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன. சாதாரண பட்டப் படிப்பு தகுதிகளைவிட, பணிக்கு தேவையான உடனடித் தகுதியைப் பெறுவது மிகவும் உயர்ந்தது என்பதை உணர வேண்டும். பி.டெக்., படிப்புடன், எம்.பி.ஏ., பட்டத்தையும் (4+1) என ஐந்து ஆண்டுகளில் நிறைவு செய்யலாம். எனவே, இந்த இரட்டைப் பட்டப் படிப்பு திட்டத்தை, விரைவுபடுத்தப்பட்ட படிப்புத் திட்டம் என்றும் கூறலாம்.
படிப்பின் காலகட்டம்
படிப்பை பொறுத்து, கல்வி நிறுவனத்தைப் பொறுத்து, காலகட்டம், 4 முதல் 7 ஆண்டுகள் வரை விரியும். இன்டர்மீடியேட் முதல் பிஎச்.டி., வரையான படிப்புகள் இம்முறையில் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தின் மூலம், உயர்கல்வி பெறும்போது, மாணவர்களை எளிதாக பணிக்கு தயார்படுத்த முடிகிறது மற்றும் ஆசிரியர்கள் மற்றும் பாடத்திட்டத்துடன் மாணவர்கள் நன்கு பழக்கமாகி, மேம்பட்ட சிந்தனைகளைப் பெறுகிறார்கள் என்று சில கல்வியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
உற்சாகமாக படித்தல்
பொறியியல் பிரிவில், இரட்டைப் பட்டப் படிப்பு படிக்கும் மாணவர்கள், தங்களுக்கான பாடங்கள், வேறுபட்ட முறையில் விரிவாக கற்பிக்கப்படுவதின் மூலம், புதிய அனுபவத்தைப் பெறுகிறார்கள். பொறியியல் முதுநிலைப் பட்டம்பெற மொத்தம் 6 ஆண்டுகள் செலவழிக்க வேண்டிய நிலையில், 5 ஆண்டுகளிலேயே முதுநிலைப் பட்டம் பெற்றுவிடுவது அவர்களுக்கு  மகிழ்ச்சியான ஒன்றாக இருக்கிறது.
பழைய பட்டப் படிப்பு முறைகளிலிருந்து(6 ஆண்டுகள் படிப்பு) புதிய இரட்டைப் பட்டப் படிப்பு முறைகளுக்கு மாறுவதென்பது, பல கல்வி நிறுவனங்களில் உற்சாகமுள்ளதாகவே இருக்கிறது. ஒரு மாணவரை, தொழில்துறைக்கு தயாரானவராக மாற்றுவதில், இந்த இரட்டைப் பட்டப்படிப்பு முறை தெளிவாக செயல்படுகிறது என்று கல்வியாளர்கள் கூறுகிறார்கள். மேலும், இந்தப் புதிய கல்வி முறையின் மூலமாக, நுணுக்க சிந்தனை மற்றும் கற்றல் உற்சாகம் அதிகரிக்கிறது. பொதுவாக, இரட்டைப் பட்டப் படிப்பின் பாடத்திட்டமானது, நிறைந்த உள்ளடக்கமும், பயன்பாட்டு அடிப்படையும் கொண்டது.
பாடத்தை தெரிவு செய்தல்
ஒரு கல்வி நிறுவனத்தில், இரட்டைப் பட்டப் படிப்பை தேர்வு செய்கையில், அந்த கல்வ நிறுவனத்தின் அங்கீகாரம், புகழ் மற்றும் தரம் ஆகியவற்றை கட்டாயம் மனதில் கொண்டே முடிவுசெய்ய வேண்டும். ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களில், மூன்றாம் வருட பி.டெக்., படிப்பை முடித்தவுடன், எம்.டெக்., படிப்பில் சேர முடியும்.
ஆறாவது செமஸ்டர் முடிந்த பின்னர், 6.5 CGPA அளவில் மதிப்பெண் வைத்துள்ள அத்தகைய ஆர்வமிக்க மாணவர்கள், ஆசிரியர் மற்றும் துறைத் தலைவரிடம் வேண்டுகோள் வைக்கிறார்கள். இதன்மூலம், இரட்டை டிகிரி படிப்புக்கு மாறிக்கொள்ள பரிந்துரை செய்யப்படுகிறது.
இரட்டை டிகிரி படிப்புகளுக்கான சேர்க்கை முறை, கல்வி நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடுகிறது. சில கல்வி நிறுவனங்கள், முதல் நாளிலிருந்தே, இரட்டை டிகிரி படிப்புகளில் மாணவர்களை சேர்த்துக் கொள்கின்றன. வேறுசில கல்வி நிறுவனங்கள், இரட்டை டிகிரி படிப்பிற்கான சேர்க்கையில், மாணவர்களின் சூழலைப் பொறுத்து, நெகிழ்வுத் தன்மையுடன் நடந்து கொள்கின்றன. வேறுசில கல்வி நிறுவனங்களில், இரட்டை டிகிரி படிப்பு முறையை ஒரு மாணவர் கடினமாக உணர்ந்தால், அவர் எம்.டெக்., படிப்பில் சேராமலேயே விலகிக் கொள்ளலாம்.
பணத்தையும், நேரத்தையும் சேமித்தல்
போட்டி நிறைந்த சந்தையில், ஒரு வருடத்தை சேமிப்பதென்பது மிகவும் முக்கியமான ஒன்று. ஒருவர், ஒரு வெளிநாட்டு பல்கலையில் எம்.டெக்., படிப்பை முடித்தால், இரட்டை டிகிரி பட்டதாரிக்கு சமமாகவே கருதப்படுவார் என்று கல்வியாளர்கள் கூறுகிறார்கள். மேலும், இரட்டைப் பட்டப் படிப்பானது, தொழில் தொடர்பாக, விரைவான முடிவெடுக்க உதவுகிறது.
பொதுவாக, பி.இ., படிப்பிற்கு 2 லட்சமும், எம்.டெக்., படிப்பிற்கு 1.25 லட்சமும் செலவாகிறது. ஆனால், இரட்டை டிகிரி படிப்பில், குறைந்தபட்சம் 1 லட்சம் வரை மிச்சமாகிறது மற்றும் முதுநிலைப் படிப்பில் சேர்வதற்காக எழுத வேண்டிய நுழைவுத்தேர்விலிருந்தும் விலக்கு அளிக்கப்படுகிறது. மேலும், அலைச்சலின்றி, இரண்டு பட்டங்களையும், ஒரே கல்வி நிறுவனத்தில் பெற்றுக் கொள்ளவும் முடிகிறது.
சந்தை தேவையை நிறைவுசெய்தல்
இன்றைய நிலையில், ஒவ்வொருவரும் ஸ்பெஷலைசேஷனை எதிர்பார்க்கின்றனர். இளநிலைப் பட்டப் படிப்பை முடித்தவர்களுக்கு சந்தையில் தேவை அதிகமாக இருந்தாலும், அனுபவம் அதிகமுள்ளவர்களே, தொழில்துறைகளுக்கு தேவைப்படுகிறார்கள். இந்த இடத்தில்தான், இரட்டை டிகிரி படிப்பின் தேவை பன்மடங்கு அதிகரிக்கிறது. தனித்தனியாக இளநிலை, முதுநிலை படிப்புகளை முடித்தால் என்ன மரியாதையோ, அதேயளவு மரியாதைதான், இரட்டை டிகிரி முறையில், இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்பை முடிப்பதற்கும் கிடைக்கிறது.
ஒரு பி.டெக்., பட்டதாரி ஆண்டு சம்பளமாக ரூ.6 - 12 லட்சம் பெறுகிறார் என்றால், ஒரு இரட்டை டிகிரி முடித்தவர், ஆண்டுக்கு ரூ.9 - 15 லட்சங்கள் பெறுகிறார். கூகுள் போன்ற பிரபலமான நிறுவனங்கள், பி.டெக்., பட்டதாரிகளை விட, இரட்டை டிகிரி முடித்தவர்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றன. அதாவது, ஆராய்ச்சி செய்யும் மனப்பாங்கு மற்றும் தனியாக சிக்கலைத் தீர்க்கும் திறன் பெற்ற நபர்களுக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது.
மாறுபாடுகள்
குறிப்பிட்ட அளவிலான மாணவர்களுக்கு, இந்த இரட்டை டிகிரி படிப்பு ஒத்துவருவதில்லை. அவர்கள் இப்படிப்பில் சேர விரும்புவதுமில்லை. ஏனெனில், சிலருக்கு பி.டெக்., மூன்றாமாண்டு படிக்கும்போதே, நல்ல நிறுவனங்களில் வேலை கிடைத்துவிடுகிறது. எனவே, அதற்குமேல் அவர்கள் முதுநிலைப் படிப்பை மேற்கொள்ள விரும்புவதில்லை. எனவே, கல்வி நிறுவனங்களைப் பொறுத்து, நிலைமை வேறுபடுகிறது.

பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்: டி.ஆர்.பி., எச்சரிக்கை

டி.இ.டி., தேர்வை எழுதத் தயாராகி வருபவர்களிடையே, "பணம் கொடுத்தால், வேலை கிடைக்கும்" என்ற தகவலை, சில மர்ம கும்பல்கள், வேகமாக பரப்பி வருகின்றன. இதனால், உஷார் அடைந்துள்ள டி.ஆர்.பி., அமைப்பு, "தேர்வர்கள்,
யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்; நேர்மையான முறையில், தகுதி வாய்ந்தவர் மட்டுமே, ஆசிரியராக தேர்வு செய்யப்படுவர்" என இப்போதே எச்சரித்துள்ளது.

வரும் ஆகஸ்ட், 17, 18ம் தேதிகளில், டி.இ.டி., தேர்வு நடக்கிறது. 17ம் தேதி, இடைநிலை ஆசிரியர்களுக்கான, முதல் தாள் தேர்வும், 18ம் தேதி, பட்டதாரி ஆசிரியர்களுக்கான, இரண்டாம் தாள் தேர்வும் நடக்கிறது. இத்தேர்வுக்கு, 6.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

தேர்வுக்கு, இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில், தேர்வர்கள் மத்தியில், திடீரென, "பணம் கொடுத்தால் வேலை" என்ற தகவலை, சில மர்ம கும்பல்கள் பரப்பி வருகின்றன. ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை நியமிக்கப்படும் இடைநிலை ஆசிரியர்கள், டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெற்றால் போதும்.

மற்றபடி, மாநில பதிவு மூப்பு அடிப்படையில் தான், பணி நியமனம் செய்யப்படுகின்றனர். பட்டதாரி ஆசிரியர் மட்டும், முழுக்க முழுக்க, மதிப்பெண் அடிப்படையில், பணி நியமனம் செய்யப்படுகின்றனர். இதில், இடைநிலை ஆசிரியர்களை தேர்ச்சி அடையச் செய்ய, 3 முதல், 4 லட்சம் ரூபாய் வரை, தேர்வர்கள் மத்தியில், சிலர் பேரம் பேசி வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த தகவலை உறுதி செய்ய, பல தேர்வர்கள், டி.பி.ஐ., வளாகத்தை சுற்றி வருகின்றனர். டி.இ.டி., தேர்வு மூலம், 15 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ள நிலையில், தேர்வர்கள் மத்தியில் உலா வரும் வதந்தியை அறிந்து, டி.ஆர்.பி., அதிர்ச்சி அடைந்துள்ளது.

இதுகுறித்து, அதிகாரி ஒருவர் கூறியதாவது: எழுத்து தேர்வும், அதைத் தொடர்ந்து, நியமன தேர்வு முறையும், நேர்மையான முறையில் நடக்கும். இதில், தேர்வர்கள், எவ்வித சந்தேகமும் அடையத் தேவையில்லை.

முழுக்க முழுக்க, தகுதியான ஆசிரியர் மட்டுமே, தேர்வு செய்யப்படுவர். தேர்வர்கள், அறிமுகம் இல்லாத நபர்களின் பேச்சைக் கேட்டு, பணம் கொடுக்கக் கூடாது. இந்த விவகாரத்தில், மோசடி பேர்வழிகள் சிக்கினால், அவர்கள் மீது, கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அந்த அதிகாரி கூறினார்.

அதிகாரிகள் இப்படி தெரிவித்தாலும், ஆசிரியர் தேர்வு முறையில், வெளிப்படைத் தன்மை இல்லாதது, பெரிய குறையாக உள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன் வரை, ஒரு தேர்வு நடந்தால், அதில் தேர்வு பெற்றவர்களின் பெயர்கள் அனைத்தும், முழு விவரங்களும், டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியாகும்.

இது, ஒருவரை, ஒருவர் சரிபார்த்துக் கொள்ளவும், முறைகேடு நடக்கவில்லை என்பதை வெளிப்படுத்தவும், ஒரு வாய்ப்பாக இருந்தது. ஆனால், தற்போது, நேர்மையான முறையில் நடக்கிறது என, டி.ஆர்.பி., கூறினாலும், அதை, பொதுமக்களோ, தேர்வெழுதுவோரோ, உறுதி செய்ய முடியாத நிலை உள்ளது.

ஒருவர் தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறாரா, இல்லையா என்பதை, சம்பந்தப்பட்ட ஆசிரியர், தன் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை, டி.ஆர்.பி., இணையதளத்தில் பதிவு செய்தால், "செலக்டட் அல்லது நாட் செலக்டட்" என்ற விவரம் வரும்.

மேலும், அவர், பெற்ற மதிப்பெண் விவரத்தையும் அறியலாம். ஆனால், தேர்வு பெற்ற ஒருவரின் மதிப்பெண்ணை, மற்றொரு தேர்வர் அறிய முடியாது. இதனால், தேர்வர்கள் மத்தியில், ஒருவித நம்பிக்கையின்மை, தொடர்ந்து நிலவுகிறது.

இதுகுறித்து, டி.ஆர்.பி., ஏற்கனவே கூறுகையில், "முழுமையான விவரங்கள் அடங்கிய தேர்வு பட்டியலை, கண்டிப்பாக வெளியிடுவோம். அதற்கு, அதிகமான பணிகளை செய்ய வேண்டி உள்ளது. மற்றபடி, வெளியிடக் கூடாது என்ற எண்ணம் இல்லை" என பலமுறை, திரும்ப திரும்பக் கூறியுள்ளது.

தேர்வர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையிலும், முறைகேடுகள் நடக்கவில்லை; எல்லாம், வெளிப்படையாக, நேர்மையாக நடக்கிறது என்பதை வெளிப்படுத்தும் வகையிலும், தேர்வு செய்யப்பட்டவர்கள் குறித்த முழு விவரங்களையும், அனைவரும் பார்க்கும் வகையில் வெளியிட, டி.ஆர்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை செய்யாத வரை, டி.ஆர்.பி., மீதான சந்தேகப் பார்வையை, ஒழிக்க முடியாது.

ஐந்தாம் வகுப்பு வரை ஒரே ஆசிரியர்: கல்வித்தரம் பாதிப்பதாக மக்கள் புகார்

வேதாரண்யம்: "பழமையான தொடக்கப்பள்ளியில், ஒன்றாம் வகுப்பு முதல், 5ம் வகுப்பு வரையுள்ள, 26 மாணவ, மாணவியருக்கு ஒரே ஆசிரியர் பாடம் எடுப்பதால், கல்வித்தரம் பாதிக்கிறது. அதனால், போதிய ஆசிரியர்களை நியமிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த புஷ்பவனத்தில் கொத்தங்காடு பஞ்., யூனியன் தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளி கடந்த, 1961ம் ஆண்டு ஆக., 11ம் தேதி துவங்கப்பட்டது. இப்பள்ளியில் துவக்கத்தில் நூற்றுக்கணக்கானோர் படித்து வந்தனர். பள்ளியில், 1ம் வகுப்பில் ஒருவரும், 2ம் வகுப்பில், 5 பேரும், மூன்றாம் வகுப்பில், 10 பேரும், 4ம் வகுப்பில், 6 பேரும், 5ம் வகுப்பில், 4 பேரும் என மொத்தம், 26 பேர் மட்டுமே படிக்கின்றனர்.
இந்நிலையில் பள்ளியில் தலைமையாசிரியர், உதவி ஆசிரியர்கள், சத்துணவு அமைப்பாளர், சமையலர் என, ஐந்து பேர் பணியாற்றி வந்தனர். ஆசிரியர் சிங்காரவேலு மீது போலீஸ் வழக்கு இருந்ததால், கடந்த மார்ச் மாதம், பணிநீக்கம் செய்யப்பட்டார். தலைமையாசிரியராக பணியாற்றிய தனலட்சுமி கடந்தாண்டு ஜூன் மாதம் கத்திரிப்புலம் பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். சத்துணவு அமைப்பாளர் மாரியப்பன் ஓய்வு பெற்றுவிட்டார்.
இந்நிலையில் தற்போது பள்ளியில் தலைமையாசிரியர் மகேந்திரன், சமையலராக வசந்தா மட்டுமே பணியாற்றி வருகிறார். ஆசிரியர் பணியில் ஒருவரே உள்ளதால், ஒன்றாம் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரை, அனைத்து வகுப்பு மாணவ, மாணவியரையும் ஒரே அறையில் அமர வைத்து, தலைமையாசிரியர் மகேந்திரன் பாடம் எடுத்து வருகிறார்.
போதிய ஆசிரியர்கள் பணியில் இல்லாததால், ஏழை, எளிய மாணவ, மாணவியரின் கல்வித்தரம் அடியோடு பாதிக்கிறது என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து கொத்தாங்காடு பகுதி மக்கள் கூறுகையில், "கொத்தங்காடு பஞ்., யூனியன் தொடக்கப்பள்ளியில், வெறும் 26 மாணவ, மாணவியர் மட்டுமே சேர்ந்து படிக்கின்றனர்.
ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே பணியில் உள்ளார். அவரும் தலைமையாசிரியர் பொறுப்பு வகித்து கொண்டு, பாடம் எடுப்பதால் கல்வித்தரம் பாதிக்கப்படுகிறது. அதனால் போதிய அளவில் கூடுதல் ஆசிரியர்களை நியமித்து, மாணவர்கள் கல்வித்தரத்தை உயர்த்த வேண்டும்," என்றனர்.

"பெற்றோர் தங்கள் குழந்தைகளிடம் அதிக நேரம் செலவிட முன்வர வேண்டும்"

மொபைல் போன் வாங்கி தர மறுத்த காரணத்தால், கோவையில் கடந்த ஆறுமாதங்களில் பள்ளி, கல்லூரி மாணவியர் இருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விலை உயர்ந்த "ஆப்பிள் ஐ" போனை வாங்கி தர, நடுத்தர வர்கத்தை சேர்ந்த தந்தை மறுத்ததால், மனமுடைந்த கோவை கல்லூரி மாணவி கடந்த ஆறு மாதங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில், மொபைல் போன் வாங்கி தர தந்தை மறுத்த காரணத்தால், கோவை ஆர்.எஸ்.புரத்தில் வசித்து வந்த பத்தாம் வகுப்பு மாணவி அஸ்வதி, மனமுடைந்து கடந்த 11ம் தேதி அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பெற்றோர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றம் இன்றைய இளைய சமூகத்தினரின் மன நிலையில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதை, இவ்விரு சம்பவங்களும் எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளன.
தங்கள் குடும்பத்தின் பின்னணி, நிதிநிலை உள்ளிட்டவற்றை மறந்து, சமுதாயத்தில் தங்களின் மதிப்பு குறைந்துவிட கூடாது என்பதற்காக ஆடம்பர பொருட்களை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர், இன்றைய இளைய சமூகத்தினர்.
வாழ்கையில் தங்களுக்கு தேவையான அடிப்படை பொருட்கள் எவை, அடிப்படை தேவைகளுக்கு அடுத்தப்படியாக பட்டியலில் உள்ள பொருட்கள் எவை என்பது குறித்து இவர்களுக்கு தெரிவதில்லை.
இன்றைய சூழலில் குழந்தைகளுடன் அதிக நேரத்தை பெற்றோர்கள் செலவிட முடியாததே, மேற்குறிப்பட்ட துயர சம்பவங்கள் நடக்க முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
பெற்றோருக்கு விழிப்புணர்வு தேவை
டாக்டர் சீனிவாசன் கூறியதாவது: "வளர் இளம் பருவத்தில் உள்ள குழுவில், ஒருவர் செய்வது போன்றே மற்றவர்களும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அதிகம் காணப்படும். நட்சத்திர ஓட்டலில் ஒரு மாணவர் பிறந்தநாள் விருந்து வைத்தால், தங்கள் குடும்பத்தின் பொருளாதார நிலையை மறந்து, அதே போன்று தானும் செயல்பட வேண்டும் என்று நினைப்பதே இதற்கு காரணம். பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் விழிப்புணர்வுடன் செயல்படுவதே, இப்பிரச்னைக்கு தீர்வாக அமையும்.
அடம் பிடித்தால், கண்டு கொள்ளாதீர்
டாக்டர் மோனி கூறியதாவது: "வளர் இளம் பருவத்தினரிடையே, எந்த செயலை வேண்டுமானாலும் செய்து பார்க்கலாம் என்ற எண்ணம் அதிகம் காணப்படும். 84 சதவீத குழந்தைகளுக்கு, அவர்களின் பெற்றோரே முன்மாதிரியாக கொண்டு செயல்படுகின்றனர். 15 சதவீதத்தினர் ஆசிரியர்களையும், நான்கு சதவீதத்தினர் சினிமா நடிகர், நடிகைகளை முன்மாதிரியாக கொண்டு செயல்படுகின்றனர்.
எது தவறு, எது சரி என்பதை குழந்தைகளுக்கு பெற்றோர் சொல்லித்தர வேண்டும். அடம்பிடித்தால் கேட்டதை எல்லாம் வாங்கி தர கூடாது. ஐந்து அல்லது ஆறு முறை பெற்றோர் இவ்வாறு, செயல்பட்டால், குழந்தைகளுக்கு அடம் பிடிக்க வேண்டும் என்ற எண்ணமே தோன்றாது. வளர் இளம் பருவத்தில் குழந்தைகள் கேட்பதை உடனடியாக மறுக்காமல், ஏன், எதற்கு என்று கேட்க வேண்டும். பெற்றோர் தங்கள் குழந்தைகளிடம் அதிக நேரம் செலவிட முன்வர வேண்டும்." இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

சனி, 13 ஜூலை, 2013

இடைநிலை ஆசிரியர்களின் நிலை என்ன?

மத்திய அரசு கடந்த 2010 ஏப்ரல் 1ஆம் தேதி கட்டாய கல்வி உரிமை சட்டத்தை கொண்டு வந்தது. பல்வேறு மாநிலங்களில் தமிழ்நாட்டில் உள்ளது போல் ஆசிரியர் பணிக்கென பிரத்யேக படிப்பு இல்லாததைக் கருத்தில் கொண்டு இடை நிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத் திற்கு தகுதித்தேர்வை நடத்த அறிவுறுத்தியது.

தமிழ்நாட்டில் ஆசிரியர் பணிக்கென பிரத்யேக படிப்பு இருந்து வருவதால் தமிழக அரசு 2010 மே மாதம் 32 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களை பணி நியமனத்திற்கு வேண்டி சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைத்தது. தேசிய கல்வி கழகத்தின் அறிவுறுத்தல்படி தமிழக அரசு இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்திற்கு தகுதித்தேர்வை அறிவித்தது.

(15.11.2011) திருமங்கலத்தை சேர்ந்த மாயா உட்பட மூவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்குப் போட்டதன் பேரில் பழைய பதிவு மூப்பு அடிப் படையிலேயே இடைநிலை ஆசிரியர்களை பணிநியமனம் செய்ய வேண்டும் என்று 2011 நவம்பர் 24இல் மதுரை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் குறிப் பாணை எண் 5281/ஆ4/2010 (பார்வை: 1.அரசாணை (நிலை) எண்.220 பள்ளிக்கல்வித் (எஸ்-2)துறை,நாள் 10.11.2008, 2.அரசாணை (நிலை) எண்.153 பள்ளிக்கல்வித்(வ.செ-2)துறை,நாள் 03.06.2010, எனக் குறிப்பிட்டு 2010-11ஆம் ஆண்டு தொடக்கக் கல்வித்துறை  பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிட நேரடி நியமனத்திற்கான சான்றிதழ் சரிபார்க்கும் அழைப்புக் கடிதத்தை அதே 2011 நவம்பர் 24 தேதியில் அனுப்பியது. மேற்கண்ட அழைப்பின்பேரில் 10 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் 3.12.2011இல் சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிந்து வேலைவாய்ப்பு உத்தர விற்காகக் காத்திருந்தனர்.

இந்த நிலையில் 9.7.2013 அன்று சென்னை உயர் நீதிமன்றம்  2010 மே மாதம் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்ட பட்டதாரி ஆசிரியர்களை தகுதித் தேர்வின்றி பணி நியமனம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இதையே அறிவுறுத்தலாகக் கொண்டு 2011 இல் சான்றிதழ் சரிபார்ப்பு செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களையும் தமிழக அரசு பணியில்  அமர்த்துவதுதான் சரியானதாக இருக்க முடியும். தலைக்கொரு சீயக்காய், தாடிக்கொரு சீயக்காய் என்ற முறையில் ஓர் அரசு நடந்து கொள்ள முடியாது.

இந்தப்பிரச்சினை குறித்து தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் விரிவான அறிக்கை ஒன்றினை கடந்த ஏப்ரல் மாதத்திலேயே வெளியிட்டார் (விடுதலை 2.4.2013).

தொடர்ந்து விடுதலை இந்தத் திசையில் பல தலையங்கங்களைத் தீட்டியதுண்டு. இதுகுறித்து கடந்த 6ஆம் தேதியன்று முதல் அமைச்சருக்குத் திறந்த மடலையும் எழுதியுள்ளார் திராவிடர் கழகத் தலைவர்.

தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் இன்றுகூட ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கடந்த 5ஆம் தேதி சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழக மாணவரணி சார்பில் கருத் தரங்கமும், பொது மாநாடும் நடைபெற்றன. திராவிடர் கழகத் தலைவர் உட்பட பல தலைவர் களும், கல்வியாளர்களும் கலந்து கொண்டனர். முக்கிய தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

கடந்த10ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுவிலும் இந்த வகையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட் டுள்ளது. வரும் 18ஆம் தேதி சென்னையில் இது தொடர்பான ஆர்ப்பாட்டத்தையும் கழகம் நடத்திட உள்ளது. இதற்கிடையே இதனை வலுப்படுத்தும் வகையில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு அமைந்துள்ளது. நீதிமன்ற தீர்ப்பை ஆதாரப்படுத்தி தகுதித் தேர்வைப் புறந்தள்ளி, பட்டதாரி மற்றும் இடை நிலை ஆசிரியர்களுக்கும் பணி நியமனம் செய்வதே சரியானதாக இருக்க முடியும். இல்லை யெனில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் நீதிமன்றம் சென்றால் அரசுக்கு எதிராகவே தீர்ப்புக் கிடைக்க வாய்ப்புகள் அதிகம். தமிழ்நாடு அரசு விழித்துக் கொள்ளுமா? எங்கே பார்ப்போம்.

2ம் பருவத்திற்கு 2.29 கோடி புத்தகங்கள்: பாடநூல் கழகம் ஏற்பாடு

சென்னை: வரும் செப்டம்பர் இறுதியில், ஒன்பதாம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு வழங்க, இரண்டாம் பருவத்திற்கு, 2.29 கோடி பாடப் புத்தகங்களை அச்சிடும் பணியை, பாடநூல் கழகம், மும்முரமாக செய்து வருகிறது.
ஒன்று முதல், 9ம் வகுப்பு வரை, முப்பருவ கல்வி முறை திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஜூன் முதல், செப்டம்பர் வரை, முதல் பருவம்; அக்டோபர் முதல், டிசம்பர் வரை, இரண்டாம் பருவம்;  ஜனவரி முதல், ஏப்ரல் வரை, மூன்றாம் பருவம் அமல்படுத்தப்பட்டு உள்ளன.
இதன்படி, பாடப் புத்தகங்கள், மூன்று பருவங்களாக பிரிக்கப்பட்டு, தனித்தனியே அச்சடிக்கப்பட்டு, மாணவருக்கு வழங்கப்படுகின்றன. இரண்டாம் பருவத்திற்காக, 2.29 கோடி பாடப் புத்தகங்கள் அச்சிடும் பணி, 100 அச்சகங்களில் நடந்து வருகின்றன.
பல அச்சகங்களில் இருந்து, பாடப் புத்தகங்கள் தயாராகி, வெளிவர ஆரம்பித்து விட்டதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. அச்சகங்களில் இருந்து, நேரடியாக, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து, செப்டம்பர், கடைசி வாரத்தில், மாணவர்களுக்கு, புத்தகங்கள் வினியோகம் செய்யப்படும் எனவும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
நடப்பு கல்வி ஆண்டில், புதிதாக வழங்கப்பட்ட, பிளஸ் 1 புத்தகங்களின் பின்பக்க அட்டையில், மாணவியரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான வாசகங்கள், அச்சடிக்கப்பட்டுள்ளன.
"காணாமல் போகும் குழந்தைகள், கொடுமைக்கு இரையாகும் குழந்தைகள், வீட்டிலிருந்து ஓடிப்போன குழந்தைகள், மருத்துவ உதவி தேவைப்படும் குழந்தைகள், கவனிப்பும், பாதுகாப்பும் தேவைப்படும் குழந்தைகள், "1098" என்ற எண் மூலம், "சைல்டு லைன்" அமைப்பை தொடர்பு கொண்டு, தகவல் தெரிவிக்கலாம்" என அச்சடிக்கப்பட்டுள்ளது.
இந்த வாசகம், அடுத்த கல்வி ஆண்டில், மேலும் சில வகுப்பு புத்தகங்களில் அச்சடிக்கப்படும் என, பாடநூல் கழக வட்டாரங்கள் தெரிவித்தன.

ஓர் ஆசிரியருக்கு இரு பள்ளிகளில் பணி: இந்தாண்டும் தொடரும் சோதனை

மதுரை: மதுரையில் நடந்த, கள்ளர் சீரமைப்பு பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வில், ஓர் ஆசிரியருக்கு, இரு பள்ளிகளில் பணியாற்ற உத்தரவிடப் பட்டதால், இத்துறை ஆசிரியர்களின் வேதனை தொடர்கதையாகி உள்ளது.
மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்ட, கள்ளர் சீரமைப்பு பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு, மதுரை கள்ளர் சீரமைப்புத் துறை இணை இயக்குனர் அலுவலகத்தில் நடந்தது. காலையில், உயர்நிலை, மேல்நிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி மாறுதல்; மாலையில், தொடக்க கல்வி தலைமை ஆசிரியர், இடைநிலை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் பணிமாறுதல் கலந்தாய்வு நடந்தது. காலிப் பணியிடங்கள், 282 காட்டப்பட்டன. 334 ஆசிரியர்கள் பங்கேற்றனர்; 97 ஆசிரியர்களுக்கு, மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது. ஆசிரியர்கள் பற்றாக்குறையால், "ஒரு ஆசிரியர், இரு பள்ளிகளில் பணியாற்ற வேண்டும்&' என்று, கடந்தாண்டு கலந்தாய்வில் உத்தரவிடப்பட்டது. இந்த முறையை, இவ்வாண்டு கலந்தாய்வில் ரத்து செய்ய வேண்டும் என, ஆசிரியர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், நேற்று நடந்த கலந்தாய்வில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு, வழங்கப்பட்ட மாறுதல் உத்தரவில், "மாறுதல் கோரும் பள்ளியில், மூன்று நாட்களும், பழைய பள்ளியில், இரண்டு நாட்களும் பணியாற்ற வேண்டும்&' என, குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில செயலர், நவநீதகிருஷ்ணன் கூறியதாவது: ஓராசிரியர் இரு பள்ளிகளில் பணியாற்றும், "இரட்டை சவாரி&' முறையை ரத்து செய்ய வேண்டும் என, இத்துறையின் அனைத்து ஆசிரியர்களும் எதிர்பார்த்தனர். ஆனால், இந்தாண்டும் தொடர்வது வேதனையாக உள்ளது. இதனால், இரு பள்ளிகளையும் ஒரே ஆசிரியரால், முழுமையாக கவனிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

காலி பணியிடங்களை நிரப்பாதது ஏன்? ஆசிரியர் கூட்டணி கேள்வி


எழுத்தின் அளவு :
சென்னை: "பள்ளி கல்வித் துறையில், சி.இ.ஓ., - டி.இ.ஓ., உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் காலி பணியிடங்களை நிரப்பாதது ஏன்?" என தமிழக ஆசிரியர் கூட்டணி நிர்வாகி அண்ணாமலை, கேள்வி எழுப்பி உள்ளார்.
அவரது அறிக்கை: முதன்மை கல்வி அலுவலர், கூடுதல் முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் போன்ற பதவிகளில், 50க்கும் மேற்பட்ட இடங்கள், காலியாக உள்ளன. பதவி உயர்வுக்கு, அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. இதன் பிறகும், காலி பணியிடங்களை நிரப்பாதது ஏன்?
கல்வியில், மிகவும் பின்தங்கியுள்ள பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில், சி.இ.ஓ., பணியிடங்கள் காலியாக உள்ளன. திருச்சி, ஈரோடு, சேலம் என, பல மாவட்டங்களில், மாவட்ட அளவில், பல்வேறு அதிகாரிகள் பணியிடங்கள் காலியாக உள்ளன.
தேர்வுத் துறையில், இணை இயக்குனர் பதவி (மேல்நிலை), தொடக்க கல்வித் துறை, இணை இயக்குனர், கருப்பசாமியிடம் கூடுதலாக தரப்பட்டுள்ளது. மற்றொரு இணை இயக்குனர், தங்கமாரிக்கு, டி.ஆர்.பி.,யில், கூடுதல் பொறுப்பு தரப்பட்டுள்ளது.
பள்ளி கல்வித் துறையில், பணியாளர் தொகுதி இணை இயக்குனர் கண்ணப்பனிடம், நூலகத் துறை, இணை இயக்குனர் பதவி, கூடுதலாக தரப்பட்டுள்ளது. துறையில், எப்போது பார்த்தாலும், ஆய்வுக் கூட்டங்கள் நடக்கின்றன. ஆனாலும், காலி பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த பிரச்னையில், முதல்வர் தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அண்ணாமலை தெரிவித்துள்ளார்

புதன், 10 ஜூலை, 2013

மற்ற மாநில TET வினாத்தாள்களை போன்று தயாரிக்கப்படும் TNTET வினாத்தாள்கள்

மிக மிக நுட்பமான முறையில் வினவப்படும் TNTET வினாத்தாள்கள் முழுமையாக ஒரு கட்டுப்பாட்டு விதிகளுக்கு உட்பட்டே தயாரிக்கப்பட்டு வருகின்றன.

அவற்றில் கவனிக்கக்கூடிய ஒரு விடயம் என்ன வென்றால்...

கல்வி உளவியலுக்கு D.T.tetEd, மற்றும் B.Ed கல்வி உளவியல் புத்தகங்களை படித்திருந்தாலே போதும்... (இருந்தாலும் அதில் 30 க்கு 30 ஐ எவராலும் எடுக்க முடியாது என்பது வேறு விடயம்.)

தமிழ் பகுதிக்கு கண்டிப்பாக பாட புத்தகங்களை படித்தாக வேண்டும்.

ஆங்கிலத்திற்கு ஆங்கில அறிவு சற்று இருந்தாலே போதும்.

கணிதத்திற்கு கணித புத்தகங்களில் உள்ள பெரிய பெரிய கணக்குகளை இவர்கள் வினவுவதில்லை மாறாக railway, postal போன்றவற்றில் வினவப்படும் நுட்பமான mathematical Aptitude சார்ந்த வினாக்களே பெரும்பாலும் இடம் பெறுகின்றன.


அறிவியலுக்கு என்று தனியாக பாடபுத்தகங்களை நம்பி புரிந்து படித்தாக வேண்டியது அவசியம்.

சமூக அறிவியலில் வினவப்படும் வினாக்கள் அனைத்தும் எளிமையாகவும் ... பார்த்தவுடன் விடையளிக்கும் விதமாகவும் வினவப்பட்டுள்ளன.

..............

மேற்சொன்ன அனைத்தும் இதுவரை TNTET தேர்வில் வினவப்பட்டுள்ள வினாக்களின் கடின எளிமை தன்மையை குறிப்பிடும் செய்திகள்.

ஆனால் ஒவ்வொருமுறையும் இதற்கான கடின எளிமை தன்மைகளை ஒவ்வொரு பாடத்திற்கும் மாற்றியமைத்து வினாத்தளை ஒரு புரியாத புதிராக்கி வருகிறது TRB.


எளிதாக இத்தேர்வினில் வெற்றி பெற உண்மையாகவும்... உறுதியாகவும் படிக்க வேண்டியது கட்டாயம்.

பாடங்களை புரிந்து மாணவர்களுக்கு எவ்வகையில் எல்லாம் நடத்தினால் புரியும் என்பதை மனதில் கொண்டு நாம் 1 முதல் 12 வகுப்பு வரை உள்ள தமிழ்நாடு பாடநூல் கழகத்தால் வெளியிடப்பட்டுள்ள பாடநூல்களை படித்திருந்தாலே போதும்.

மாறாக பள்ளி படிக்கும் போது சிறந்த ஆசிரியர்கள் அமையப்பெற்ற மாணவர்களுக்கு இது மிக மிக எளிதான ஒன்று.

வினாத்தாள்கள் எப்படிதான் வினவப்படுமோ! என்ற அச்சத்தில் இருப்பவர்களுக்கு வழிகாட்டியாக பலர் கூறும் நுட்பம் இதுதான்...


நம் தமிழகத்தில் TNTET என்று வைக்கப்படுவது போன்றே... APTET, UP TET, KRTET என்று ஒவ்வொரு மாநில TET தேர்வு வினாத்தாள்களை கொஞ்சம் இணையத்தில் இருந்து உருவி பார்த்தாலே போதும் என்கிறார்கள் கல்வி வல்லுநர்கள்.


மற்ற மாநில TET வினாத்தாள்களை போன்றே தயாரிக்கப்பட்டுள்ளது வரவிருக்கும் TNTET வினாத்தாள் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது.


எது எப்படியோ... இந்த ஆசிரியர் தகுதித் தேர்வு TNTET 2013 இல் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து ஆசிரியர் பணியிடங்களும் நிரப்பபடும் அளவிற்கு தயாராகி விட்டனர் மாநிலம் முழுவதிலும் தேர்வு எழுதும் 6 லட்சத்திற்கும் அதிகமான மாணவ ஆசிரியர்கள் என்றால் அது மிகையாகாது.
செய்தி பகிர்வு : ஜெகநாதன்

ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதத் தேவையில்லை: உயர் நீதிமன்ற தீர்ப்பால் 94 பட்டதாரிகள் நிம்மதி


ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான அறிவிக்கை வெளியாகும் முன்பே பட்டதாரி ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தவர்கள் தகுதித் தேர்வு எழுதத் தேவையில்லை என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்தத் தீர்ப்பின் மூலம் வழக்குத் தொடர்ந்த 94 பட்டதாரிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் காலியாக இருந்த பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக 2010-ஆம் ஆண்டு பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு மற்றும் இடஒதுக்கீட்டு விதிகளின்படி 32 ஆயிரம் பட்டதாரிகள் சான்றிதழ் சரிபார்ப்புப் பணிக்காக அழைக்கப்பட்டனர்.
அனைத்து மாவட்டங்களிலும் 12.5.2010 முதல் சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் நடைபெற்றன. பணி நியமன ஆணைக்காக காத்திருந்த அவர்கள் யாருக்கும் பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை. ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சிப் பெற்றால் மட்டுமே இனி ஆசிரியர் பணி வழங்கப்படும் என்று அரசு கூறிவிட்டது.
இதனை எதிர்த்து டி.எஸ். அன்பரசு உள்ளிட்ட 70 பேர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அவர்களின் மனுக்களை தனி நீதிபதி தள்ளுபடி செய்து விட்டார். அதனை எதிர்த்து அவர்கள் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை உயர் நீதிமன்றத்தின் முதன்மை அமர்வு தள்ளுபடி செய்து விட்டது. இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி அவர்கள் 70 பேரும் உயர் நீதிமன்றத்திலேயே மனு தாக்கல் செய்தனர்.
அதேபோல் என்.பரந்தாமன் உள்ளிட்ட வேறு 24 பேர் தனியாக மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை தனி நீதிபதி தள்ளுபடி செய்து விட்டார். இதனை எதிர்த்து அவர்கள் அனைவரும் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.
ஆக 70 பேர் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவும், பின்னர் 24 பேர் தனியாக தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவும் நீதிபதிகள் எலிபி தர்மராவ், எம்.வேணுகோபால் ஆகியோரைக் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மனுதாரர்கள் 94 பேரும் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதத் தேவையில்லை என்று செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தனர்.
தீர்ப்பு விவரம்: 2010-ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சான்றிதழ் சரி பார்ப்புப் பணிக்கு மனுதாரர்களின் பெயர்களை வேலைவாய்ப்புத் துறை ஆணையர் பரிந்துரை செய்துள்ளார். அதன்படி அவர்களும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டுள்ளனர். அன்றைய நிலவரப்படி ஆசிரியர் தகுதித் தேர்வு எதுவும் எழுதாமலேயே அவர்கள் ஆசிரியர் பணி நியமனத்துக்கான முழுத் தகுதியையும் பெற்றிருந்தனர்.
இந்நிலையில் ஆசிரியர் பணி நியமனத்துக்கு இனி ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவது கட்டாயம் என்ற அறிவிக்கையை 23.8.2010 அன்று ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் வெளியிட்டது. எனினும் அதில் ஒரு விதிவிலக்கும் அளிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிக்கை வெளியாகும் முன்னரே ஆசிரியர் பணி நியமனத்துக்கான அறிவிப்புகள் ஏதேனும் வெளியிடப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்றிருந்தால், அந்த பணி நியமனங்களை 2001-ஆம் ஆண்டின் ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் விதிமுறைகளின்படி மேற்கொள்ளலாம் என்ற அந்த விதிவிலக்கில் கூறப்பட்டிருந்தது.
ஆகவே, இந்த வழக்கில் தொடர்புடைய 94 பேரும் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதத் தேவையில்லை. எனினும் தற்போது அவர்களுக்கு பணி நியமனம் வழங்கிட காலியிடங்கள் இல்லை என்று அரசு தலைமை வழக்குரைஞர் கூறியுள்ளார். ஆகவே, எதிர்காலத்தில் காலியிடங்கள் உருவாகும்போது இவர்கள் அனைவரையும் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத வேண்டும் என கட்டாயப்படுத்தாமல் ஆசிரியர் பணியில் நியமித்திட வேண்டும் என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.