புதன், 9 ஜனவரி, 2013


ஆசிரியர் தரம் என்ன?

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (சி.டி.இ.டி.,) தேர்ச்சி விகிதம் தொடர்ந்து குறைந்து வருவது சி.பி.எஸ்.இ., நிர்வாகத்தை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

மத்திய அரசின் ஆர்.டி.இ., சட்டப்படி, நாட்டில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர் பணிகளில் சேர்வதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதன்படி மாநிலங்கள் தனித்தனியாக தேர்வை நடத்துகின்றன . சி.பி.எஸ்.சி.,யும் அதன் கீழ் செயல்படும் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியில் சேர்வதற்கு, மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை CTET நடத்துகிறது. முடிவுகள் டிச., 27ம் தேதி வெளியிடப்பட்டன. இதில் 1 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். 7 லட்சத்து 96 ஆயிரம் பேர் கலந்து கொண்ட இத்தேர்வில் வெறும் 4,849 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.

குறையும் தேர்ச்சி

2011ல், முதன்முறையாக நடந்த முதல் தேர்வில், 9 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். தொடர்ந்து நடத்தப்பட்ட மறுதேர்வில், தேர்ச்சி விகிதம் 7 சதவீதமாக குறைந்தது. தற்போது இது, வெறும் 1 சதவீதமாக குறைந்துள்ளது. தமிழகத்தில் நடந்த முதல் டி.இ.டி., தேர்வில் கூட, தேர்ச்சி சதவீதம் ஒன்றைத் தாண்டவில்லை.

ஆசிரியர்களின் தேர்ச்சி விகிதம், தொடர்ந்து குறைந்து வருவது ஆசிரியர்களின் தரத்தை கேள்விக்குறி ஆக்கியுள்ளது. இருப்பினும் தகுதித்தேர்வை வைத்து மட்டுமே, ஆசிரியர்களின் தரத்தை நிர்ணயித்து விட முடியாது என ஒரு தரப்பு கூறுவதிலும் நியாயம் இருக்கிறது. ஆனால் இதிலிருந்து ஒரு கருத்து மட்டும் தெளிவாகிறது. ஆசிரியர் பயிற்சி படிப்புகளின் நிலை எந்தளவுக்கு இருக்கிறது என்பதை இது வெளிக்காட்டுகிறது.

எனவே பி.எட்., மற்றும் D.T.Ed., படிப்புகளில் மாற்றத்தை கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.