மத்திய செகண்டரி கல்வி போர்டு (சிபிஎஸ்இ) நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் 99 சதவீத ஆசிரியர்கள் தோல்வியைத் தழுவுகிறார்கள் என்ற தகவல்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது.
அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்விச் சட்டப்படி, ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர்களாகப் பணிபுரிவதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வைக் கட்டாயமாக எழுத வேண்டும். மத்திய செகண்டரி கல்வி போர்டு (சிபிஎஸ்இ) இந்தத் தகுதித் தேர்வை நடத்துகிறது. தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துகிறது. சிபிஎஸ்இ நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வின் முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. 7.95 லட்சம் பேரில் ஒரு சதவீத ஆசிரியர்களே தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்தத் தகுதித் தேர்வு 2011-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதிலிருந்து தேர்ச்சி விகிதம் தொடர்ந்து சரிந்து வருகிறது. பிஎட் பட்டப் படிப்பைத் தரமானதாக்க வேண்டிய எச்சரிக்கை மணி இது என்கிறார்கள் கல்வியாளர்கள்.
ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை ஆசிரியர்களாகப் பணிபுரிய விரும்புபவர்கள் முதல் தாளையும் ஐந்தாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர்களாகப் பணிபுரிய விரும்புபவர்கள் இரண்டாம் தாளையும் எழுத வேண்டும். ஒன்றிலிருந்து எட்டாம் வகுப்பு வரை பணிபுரிய விரும்பும் ஆசிரியர்கள் இந்த இரண்டு தாள்களையும் எழுத வேண்டும். கடந்த நவம்பரில் சிபிஎஸ்இ நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத 9.40 லட்சம் பேர் பதிவு செய்தார்கள். அதில், 7.95 லட்சம் பேர் அத்தேர்வை எழுதினர். அதில் முதல் தாள், இரண்டாம் தாள் அல்லது இரண்டு தாள்களிலும் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 4,849 மட்டுமே.
முதன் முறையாக 2011-ஆம் ஆண்டில் சிபிஎஸ்இ நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் 9 சதவீதம் ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றனர். அதையடுத்து கடந்த ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற இந்தத் தேர்வில் தேர்ச்சி விகிதம் 7 சதவீதமாகக் குறைந்து விட்டது. தற்போது இந்தத் தேர்ச்சி விகிதம் ஒரு சதவீதத்துக்கும் குறைந்து விட்டது கல்வியாளர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதற்கிடையே, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரிய பிஎட் பட்டம் பெற்றவர்களையே ஆசிரியர்களாக நியமிக்க தில்லி அரசு தீர்மானித்துள்ளது.
தமிழகத்தின் நிலையும் திருப்திகரமாக இல்லை. தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஜூலையில் நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதிய 6.60 லட்சம் பேரில் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றார்கள். தேர்வு எழுதியவர்களுக்கு நேரம் போதவில்லை போன்ற காரணங்களை அடுத்து, தேர்வு நேரத்தை ஒன்றரை மணி நேரத்திலிருந்து மூன்று மணி நேரமாக உயர்த்தி மறு தேர்வு நடத்தப்பட்டது. ஆனால், அந்தத் தேர்வை எழுதிய 6.56 லட்சம் பேரில் 19,246 பேரே தேர்ச்சி பெற்றனர். மாணவர்களுக்குப் பாடங்களைக் கற்பிப்பதற்காக உள்ள ஆசிரியர்களே, அதற்கான தகுதித் தேர்வில் இந்த அளவுக்குத் தடுமாறினால் என்ன செய்வது?