சனி, 8 டிசம்பர், 2012

18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பணி நியமன உத்தரவு


18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பணி நியமன உத்தரவு, 13ந் தேதி சென்னையில் நடக்கும் விழாவில் முதல்வர் வழங்குகிறார், முன்னதாக ஆசிரியர்கள் ஆன்லைன் வழியாக பணியிடங்களை தேர்வு செய்ய உத்தரவு.
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வுசெய்யப்பட்ட 18 ஆயிரத்து 382 ஆசிரியர்களுக்கு சென்னையில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் வரும் 13-ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறும் விழாவில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளன.
சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மாலை, 4:00 மணிக்கு இந்த விழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

ஆசிரியர் தகுதி தேர்வு, மறுதேர்வில் வெற்றி பெற்றவர்களில் 18,382 பேர் ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் 9,664 இடைநிலை ஆசிரியர்களாகவும், 8,718 பேர் பட்டதாரி ஆசிரியர்களாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இடைநிலை ஆசிரியர்கள் தொடக்கக் கல்வித் துறையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் பள்ளிக் கல்வித் துறையிலும் பணி நியமனம் செய்யப்படுகின்றனர்.

பள்ளிக் கல்வித் துறையில் முதல்முறையாக 18 ஆயிரம் பேருக்கு மொத்தமாக இப்போதுதான் பணி நியமனம் வழங்கப்படுகிறது. எனவே, இந்த விழாவை முதல்வர் தலைமையில் நடத்தலாம் என்று பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

இதையடுத்து, பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர், இயக்குநர் ஆகியோரின் மேற்பார்வையில் இணை இயக்குநர்கள் தலைமையில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வரவேற்புக் குழு, இருக்கை வசதிகளை ஏற்படுத்தும் குழு, உணவு மற்றும் தங்கும் வசதிகளை செய்யும் குழு என பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த அதிகாரிகள் அனைவரும் நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்துக்கு நேரில் சென்று விழாவுக்குச் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்து வெள்ளிக்கிழமை ஆய்வு நடத்தினர்.

இந்த விழா தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் கூறியது:

புதிய ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்குவதற்காக மாவட்ட வாரியாக உள்ள காலிப்பணியிடங்கள் பட்டியலிடப்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் ஓரிரு நாளில் தொகுக்கப்படும். விழாவுக்கு முன்னதாக ஆன்-லைன் கலந்தாய்வை நடத்தி ஆசிரியர்கள் தங்களின் பணியிடங்களைத் தேர்வுசெய்யுமாறு கேட்டுக்கொள்வோம்.

அதன் பிறகு, முதல்வர் தலைமையில் நடைபெறும் விழாவில், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலம் அவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்படும்.

விழாவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. 18 ஆயிரம் ஆசிரியர்களும் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்டு சமுதாயக் கூடங்கள், திருமணக் கூடங்களில் தங்கவைக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.

போக்குவரத்துத் துறை, சென்னை மாநகராட்சி ஆகியவற்றுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தையும் நடத்த உள்ளனர்.

இந்த விழாவையொட்டி, பள்ளிக் கல்வித் துறையே இப்போது பரபரப்புடன் இயங்கி வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்