வெள்ளி, 28 டிசம்பர், 2012


தகுதித் தேர்வில் தேர்ச்சியின்றி நியமிக்கப்பட்ட ஆசிரியர் விவரங்களைத் தெரிவிக்க வேண்டும்: கல்வித் துறை உத்தரவு
தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் நியமனம் செய்யப்பட்டவர்களின் விவரங்களை உடனடியாகத் தெரிவிக்குமாறு முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு, கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் படி, ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதி தேர்ச்சி பெறுபவர்களுக்கு மட்டுமே தற்போது அரசுப் பள்ளிகளில் நியமனம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அரசு நிதியுதவி பெற்று செயல்படும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத பலர் பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத காரணத்தால், பணி நியமனத்துக்கான கல்வித் துறை அனுமதி கிடைக்காத நிலை நீடித்து வருகிறது. சில பள்ளிகளில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஊதியமும் நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இத்தகைய காரணங்களால் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் நியமிக்கப்பட்டவர்களின் நிலை குறித்து தெளிவற்ற நிலை நீடித்து வருகிறது. இந்தக் குழப்பமான நிலையால் பணி நியமனம் செய்யப்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், 23-8-2010 முதல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் நியமனம் செய்யப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர்களின் விவரங்களை உடனடியாக பள்ளிக் கல்வித் துறை இயக்குநருக்கு அனுப்பி வைக்க உத்தரவிட்டுள்ளார்