பள்ளிக் கல்வி வரலாற்றில் முதன்முதலாக ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு நடத்தி பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளது. பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. 25 ஆயிரம் காலி பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தகுதித் தேர்வில் 18,291 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். அவர்களின் சான்றிதழ்கள் சரி பார்க்கப்பட்டு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது.
இன்றும், நாளையும் நடைபெறும் கவுன்சிலிங்கின் மூலம் காலி பணி இடங்களை ஆசிரியர்களே ஆன்லைன் மூலம் தேர்வு செய்கிறார்கள். அவர்கள் விரும்பிய இடங்களை தேர்வு செய்த பின்னர் பணி நியமன ஆணையை முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேரில் வழங்க முடிவு செய்துள்ளார். இதற்கான விழா சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 13-ந்தேதி நடக்கிறது. பள்ளிக் கல்வித்துறை இதற்கான ஏற்பாடுகளை விரிவாக செய்து வருகிறது. பகல் 12 மணியளவில் நடைபெறும் விழாவில் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்று பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்குகிறார்.
முதல்-அமைச்சர் நேரில் ஆணையை வழங்க இருப்பதால் 32 மாவட்டங்களில் இருந்தும் ஆசிரியர்கள் சென்னைக்கு அழைத்து வரப்படுகிறார்கள். அந்தந்த மாவட்ட கலெக்டர், முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் ஏற்பாட்டில் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர், ஆசிரியைகள் 12-ந்தேதி மாலை புறப்பட்டு 13-ந்தேதி சென்னைக்கு அழைத்து வரப்படுகிறார்கள். பணி நியமன ஆணை பெற்ற ஆசிரியர்கள் 17-ந்தேதி பள்ளியில் சேர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வி துறை சார்பில் நடக்கும் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அமைச்சர் என்.ஆர். சிவபதி, முதன்மை செயலாளர் சபீதா, இயக்குனர்கள் கு.தேவராஜன், வி.கி. ராமேஸ்வர முருகன் ஆகியோர் செய்து வருகின்றனர்.