மாணவர்களுக்கு பள்ளி பருவ காலத்தில் இருந்தே, பாலியல் தொடர்பான கல்வியை கற்றுத் தருவது அவசியம் என மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதையொட்டி, சென்னை வடபழனி ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சை மருத்துவமனையில் பாலியல் பிரச்னை குறித்த விழிப்புணர்வு "நேருக்கு நேர்" நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (பிப்.14) நடைபெற்றது.
பாலியல் கல்வி என்பது வாழ்வியலை கற்றுத் தரும் ஆரோக்கியக் கல்வி. இதில் பெண் குழந்தை என்றால் மாதவிடாய் பற்றியும், தவறான, தேவையில்லாத கர்ப்பம் பற்றியும் கற்றுத் தரப்படும். மேலும், ஆபத்தான பாலுறவு பற்றியும் எச்சரிக்கை செய்யப்படும். ஆண்களுக்கு என்றால் அவர்களின் உடல் உறுப்புகள் மற்றும் நண்பர்களோடு பழகுவது பற்றியும் கற்றுத் தரப்படும்.
அறிவியல் பூர்வமான இத்தகைய தகவல்களை சரியான நேரத்தில் தராவிட்டால் தவறான தகவல்களை மாணவர்கள் இணையதளம் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் தவறாக தெரிந்து கொண்டு துன்பத்துக்குள்ளாவார்கள். எனவே பாலியல் கல்வி அவசியம் என்று தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் குழந்தையின்மை சிகிச்சை நிபுணர்கள் டி.காமராஜ், கே.எஸ்.ஜெயராணி காமராஜ், சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் பி.ஜி.சுந்தரராமன், மகளிர் சிறப்பு மருத்துவர் கே.ருக்மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
.