மாணவர்களின் குழப்பங்களை தீர்க்க வேண்டிய ஆசிரியர்களே குழம்பிப்போய் இருக்கிறார்கள். அதற்கு பல காரணங்கள். ஆசிரியர் தேர்வு தொடர்பான அறிவிப்பில் தொடங்கிய குழப்பம், விண்ணப்ப விற்பனை, தேர்வு முறை, ரிசல்ட் வெளியீடு, அதற்குப் பிறகு படிப்பு தகுதி என தீராமல் தொடர்ந்தது.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இந்த குளறுபடிகளால் 400க்கும் மேற்பட்ட வழக்குகள் போடப்பட்டுள்ளன. இந்த நிலையில் இந்த ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் நியமனம் செய்வதற்கான தகுதித் தேர்வை நடத்தும் பொறுப்பு2011ல் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு(டிஆர்பி) அளிக்கப்பட்டது. மத்திய அரசின் என்சிஇஆர்டி நடத்தும் ஆசிரியர் தேர்வை அப்படியே காப்பி அடித்து, தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவதாக டிஆர்பி அறிவித்தது. அதேநேரத்தில் என்சிஆர்டியின் விதிகளை டிஆர்பி ஏற்கவில்லை. ஆனால் அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகியவை, பட்டதாரிகளின் நலன் காக்கும் வகையில் மத்திய அரசின் சட்டத்தில் கூறப்பட்ட அம்சங்களை உள்ளடக்கி தகுதித் தேர்வுகளை நடத்தி வருகின்றன. தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச்சில் ஆசிரியர் தேர்வு அறிவிப்பு வெளியானது. 18,343 பட்டதாரி ஆசிரிய பணியிடங்கள், 5451 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதிலிருந்து தொடங்கியது வரிசையாக குழப்பங்கள். விண்ணப்பம் விற்பதில் தொடங்கி தேர்வு முடிவுகளை வெளியிடுவது வரை பல்வேறு குழப்பம். தகுதித் தேர்வு எழுதுவோருக்கு உரிய தகுதிகளை வாரியம் வரையறுத்து கூறவில்லை. யாரும் தேர்வு எழுதலாம் என்று அறிவித்ததின் விளைவாக, பட்டம் படித்து, பி.எட் முடித்த சுமார் 7 லட்சம் பேர் விண்ணப்பம் போட்டனர். அவர்களுக்கு தேர்வு மையங்களை ஒதுக்குவது, ஹால்டிக்கெட் அனுப்புவதில் பிரச்னைகள் எழுந்தன.தேர்வு முடிவில் சுமார் 1800 பட்டதாரிகளே தேர்ச்சி அடைந்தனர். இது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கேள்வித்தாளில் இடம் பெற்ற பல கேள்விகள் பாடத்திட்டத்தில் இருந்து இடம் பெறவில்லை என்பதால் பல பட்டதாரிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கைவிசாரித்த நீதிமன்றம் மீண்டும் தேர்வு நடத்த உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் இடம் பெறும் வகையில் கேள்வித்தாள் தயாரித்து, இரண்டாம்கட்டமாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் தேர்வை நடத்தினர். இரண்டாம் கட்ட தேர்வில் சுமார் 6 லட்சம் பேர் பங்கேற்றும் சுமார் 9,000 பேர்தான் தேர்ச்சி பெற்றனர். ஆனால் ஆசிரியர் பணியிடங்கள் 20,000 இருந்தன. இது தவிர தமிழ் வழியில் படித்தவர்களுக்கு பணி நியமனத்தில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சட்டத்தை டிஆர்பி கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. ஆசிரியர் தகுதித் தேர்வில் இது போல பல குழப்பங்கள் ஏற்பட்டதற்கு பிறகு, இந்த ஆண்டுக்கான தேர்வை நடத்துவதா வேண்டாமா என்ற நிலையில் டிஆர்பி உள்ளது. கடந்த ஆண்டில் மட்டும், 10 வகையான தேர்வுகளை டிஆர்பி நடத்தியுள்ளது.மேற்கண்ட 10 வகை தேர்வுகளும் குழப்பங்களில் சிக்கித் தவித்தன. தேர்வு எழுதிய பிறகு டிஆர்பியால் பாதிக்கப்பட்டதாக இதுவரை 400க்கும் மேற்பட்டவர்கள் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்குகளை முடிக்க முடியாமல் டிஆர்பி திணறி வருகிறது. முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வில் இன்னும் ஒரு பகுதியினருக்கு முடிவுகளை டிஆர்பி வெளியிடவில்லை. மேலும், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்வது குறித்தும் இன்னும் முடிவு எடுக்கவில்லை. அந்த பணிகள் முடிந்தால்தான், அடுத்த கட்ட தேர்வை நடத்த வேண்டும் என்று டிஆர்பி முடிவு செய்துள்ளது. அதனால் இந்த முறை ஆசிரியர் தகுதித்தேர்வு குழப்பம் இல்லாமல் நடத்தப்படுமா என்று பட்டதாரிகள் எதிர்பார்க்கின்றனர். இதற்கிடையே, தற்போது நாடாளுமன்றத் தேர்தல் வருவதை அடுத்து, தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவதை தள்ளிப் போட அரசு முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது. பட்டதாரிகளை சமாதானம் செய்வதற்காக கடந்த ஆட்சியின் இறுதியில், பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்யாமல் நிலுவையில் வைக்கப்பட்ட பட்டதாரிகளின் பட்டியலை தூசு தட்டி எடுத்து, இப்போது அவர்களுக்கு பணி நியமனம் வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை சமூக அறிவியல் பாடங்களில் பொருளியல், வணிகவியல் பாடங்களும் சேர்க்கப்பட்டுள்ளதால் பொருளியல், வணிகவியல் பட்டம் பெற்று பி.எட் முடித்தவர்களை கீழ் வகுப்புகளில் ஆசிரியர்களாக நியமிக்கலாம் என்று பட்டதாரிகள் தொடர்ந்து கேட்டுவருகின்றனர். ஆனால் அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளதை தவிர வேறு எதைப்பற்றியும்டிஆர்பி அலுவலர்கள் சிந்திக்கவோ ஏற்கவோ மறுக்கின்றனர். அரசு உத்தரவுகளில் உள்ள சில நல்ல விஷயங்களையும் சுட்டிக்காட்டினால் ஏற்க மறுப்பது பட்டதாரிகளை உதாசீனம் செய்வது போல உள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான தகுதித் தேர்வை டிஆர்பி நடத்துமா என்ற சந்தேகம் பட்டதாரிகள் இடையே வலுத்துள்ளது.கடந்த 2012&2013ம் ஆண்டு பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கை மீதான அறிவிப்பின்போது பட்டதாரி ஆசிரியர்கள் 6768, இடைநிலைஆசிரியர்கள் 3433 பேர் நியமிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. அதற்கு பிறகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ஒரு கூட்டத்தில் பேசும் போது 56000 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதன்மீது பல சர்ச்சைகள் எழுந்தன. தற்போது சட்டப் பேரவையில் பள்ளிக் கல்லூரிகளில் 22269 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே உள்ள இடங்கள் 20000 அளவுக்கு உள்ளன. இந்த சூழ்நிலையில் இந்த ஆண்டுக்கான பணியிடங்களை நிரப்புவது குறித்து அரசிடம் இருந்து டிஆர்பிக்கு இன்னும் உத்தரவு வரவில்லை. அரசு தகுதித் தேர்வு நடத்த முன்வருமா?