ஞாயிறு, 7 ஏப்ரல், 2013


11 பி.எட்., கல்லூரிகளுக்கு அனுமதி வழங்க மறுப்பு

தமிழகத்தில், 11 புதிய பி.எட்., கல்லூரிகளுக்கு, அனுமதி வழங்க, என்.சி.டி.இ., மறுப்பு தெரிவித்து உள்ளது. ஆசிரியர் கல்விக்கான தேசிய குழுவின், தென் மண்டல அலுவலக குழு கூட்டம், சமீபத்தில் பெங்களூருவில் நடந்தது. அதில், தமிழகம், ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களில், புதிய ஆசிரியர் கல்லூரிகள் துவங்குவதற்கு அனுமதி கேட்ட கோப்புகள் குறித்து பரிசீலனை செய்து, முடிவு எடுக்கப்பட்டது.
அதன்படி, தமிழகத்தில், வரும் கல்வி ஆண்டில் (2013-14), 11 புதிய பி.எட்., கல்லூரிகள் துவங்க அனுமதி கேட்ட கோப்புகளை, என்.சி.டி.இ., நிராகரித்துள்ளது. மேலும், பல பி.எட்., கல்லூரிகள், மூடுவதற்கு அனுமதி கேட்டதன் அடிப்படையில், மூடுவதற்கு அனுமதி வழங்கியதுடன், அந்த கல்லூரிகளுக்கான அங்கீகாரத்தை, திருப்பிப் பெறுவதாகவும், என்.சி.டி.இ., அறிவித்துள்ளது.

பெரம்பலூர், வேலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள, ஆறு தனியார் ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள், மூடுவதற்கு அனுமதி கேட்டதன் அடிப்படையில், என்.சி.டி.இ., அனுமதி வழங்கி உள்ளது. ஆசிரியர் பயிற்சிக்கு, மாணவர் மத்தியில் வரவேற்பு இல்லாததால், தமிழகத்தில் இந்த பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.