பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக உள்ள 22,269 ஆசிரியர்கள் உள்பட 43,666 பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி. முனுசாமி தெரிவித்தார்.
பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் அ. சௌந்திரராசன் (பெரம்பூர்), கே. பாலகிருஷ்ணன் (சிதம்பரம்), இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் எம். ஆறுமுகம் (வால்பாறை), சு. குணசேகரன் (சிவகங்கை), கே. உலகநாதன் (திருத்துறைப்பூண்டி), வி. பொன்னுபாண்டி (ஸ்ரீவில்லிபுத்தூர்), பி.எல். சுந்தரம் (பவானிசாகர்), காங்கிரஸ் உறுப்பினர்கள் என்.ஆர். ரங்கராஜன் (பட்டுக்கோட்டை), ஜே.ஜி. பிரின்ஸ் (குளச்சல்) ஆகியோர் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு பதில் அளித்து அமைச்சர் பேசியது:
அதிமுக ஆட்சியில் இதுவரை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம் 54,420, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 13,581 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
64,435 கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள், 16,793 சத்துணவு அமைப்பாளர்கள், சமையல், சமையல் உதவியாளர் பணியிடங்கள், 11,803 அங்கன்வாடி பணியாளர் பணியிடங்கள், அரசு போக்குவரத்துக் கழகங்களில் 16,963, கூட்டுறவு நியாய விலை கடைகளில் 6,307 பணியிடங்கள், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 5,489 பணியிடங்கள், பல்வேறு அரசுத் துறை நிறுவனங்களில் 3717 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
43,666 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: மேலும் 22,269 ஆசிரியர்கள், 1091 காவல் உதவி ஆய்வாளர்கள், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 4,042, கூட்டுறவு வங்கிகளில் 3607, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 10,105 காலிப் பணியிடங்களும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மருத்துவப் பணி கழகத்தால் 2,159 டாக்டர்கள், 4 ஆயிரம் செவிலியர் பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.
அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஏராளமான காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதால் அரசுப் பணிகள் எவ்விதத் தொய்வும் இல்லாமல் சிறப்பாக நடைபெறுகின்றன. மேலும் 43,666 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதால் அரசின் பணிகள் மேலும் சிறப்பாக நடைபெறும் என்றார் அமைச்சர் முனுசாமி.