20/08/2012 தினகரன் செய்தி
சென்னை, ஆக.20:
ஆசிரியர் தகுதி தேர்விலிருந்து விலக்கு அளிக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் தாக் கல் செய்யப்பட்ட வழக்கில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
திண்டுக்கல்லை சேர்ந்த அருள் மற்றும் நெல்லையை சேர்ந்த தேவேந்திரன் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் காலியாக இருந்த 1740 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு கடந்த ஆட்சியில் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். நாங்களும் அப்படி தேர்வு செய்யப்பட்டோம். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் எங்களுக்கு பணி வழங்கப்படவில்லை. இதுபற்றி அரசுக்கு முறையிட்டோம். இதை அரசு ஏற்றுக் கொண்டு எங்களுக்கு நியமன உத்தரவு வழங்கும் நிலையில் உயர்நீதிமன்றத்தில் சிலர் வழக்கு தாக்கல் செய்து, தகுதி தேர்வு எழுதினால்தான் ஆசிரியர் தேர்வு செய்ய வேண்டும் என்று உத்தரவு பெற்றனர். இது தவறானது. நாங்கள் தகுதி தேர்வு கட்டாயம் என்று மத்திய அரசு அறிவிப்பதற்கு முன்பு தேர்ந்தெடுக்கப்பட்டோம். எனவே எங்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்க வேண்டும்.
இதுதவிர 5 ஆண்டுகள் தகுதி தேர்வு எழுதினால் போதும் என்று தற்போதைய அரசு புதிய விதிமுறை வகுத்தும் அதை உயர்நீதிமன்ற நீதிபதி ஏற்க மறுத்து தகுதி தேர்வு கட்டாயம் என்று தீர்ப்பு கூறினர். இது தவறானது. எனவே எங்களுக்கு தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளித்து எங்களுக்கு நியமனம் உத்தரவு வழங்க வேண்டும். தனி நீதிபதி உத்தரவினால் 1740 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு மனுவில் அவர்கள் கூறியிருந்தனர்.
இந்த மனுவை தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் விசாரித்து, அரசு 2 வாரத் தில் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டனர்.