திங்கள், 19 ஆகஸ்ட், 2013

இடைநிலை ஆசிரியர் தகுதித்தேர்வு: எளிதாக இருந்ததாக தேர்வர்கள் கருத்து

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இடைநிலை ஆசிரியர் தகுதித்தேர்வு, நேற்று, எவ்வித குளறுபடியும் இன்றி, நடந்து முடிந்தது. ஒட்டுமொத்த அளவில், தேர்வு எளிதாக இருந்ததாக, தேர்வர்கள் கருத்து தெரிவித்தனர். இதனால், 10 சதவீதத்திற்கும் அதிகமாக, தேர்ச்சி அதிகரிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு, இரு டி.இ.டி., தேர்வுகள் நடந்தன. முதல் தேர்வில், 2,400 பேரும், இரண்டாவது தேர்வில், 19 ஆயிரம் பேரும், தேர்ச்சி பெற்றனர். மூன்றாவது டி.இ.டி., தேர்வுகள், நேற்று துவங்கின. அரசு பள்ளிகளில் மட்டும், 15 ஆயிரம் ஆசிரியர், நியமனம் செய்யப்பட உள்ளனர். மேலும், சட்டம் அமலுக்கு வந்தபின் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள், டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதால், பணியில் உள்ள ஆசிரியர்களும், அதிகளவில், தேர்வுக்கு விண்ணப்பித்தனர். இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் என, இரு தேர்வுகளுக்கும் சேர்த்து, ஏழு லட்சம் பேர் விண்ணப்பித்தனர்.
முதலில், இடைநிலை ஆசிரியர் பணிக்கான தகுதித்தேர்வு, நேற்று, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடந்தது. தமிழகத்தில், 687 மையங்களில், 2,68,429 பேர் எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். காலை 10:00 மணி முதல் பகல் 1:00 மணி வரை தேர்வுகள் நடந்தன. அனைத்து தேர்வு மையங்களிலும், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சென்னை, ராஜா அண்ணாமலைபுரம், ராணி மெய்யம்மை மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 326 பேர் தேர்வெழுத அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால், 15 பேர் வரவில்லை. தேர்வு முடிந்து வெளியே வந்த தேர்வர்கள், மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.
தேர்வர்கள் கருத்து:
சென்னை, நெற்குன்றத்தைச் சேர்ந்த உமா கூறுகையில், "கடந்த இரு தேர்வுகளில், 70, 75 மதிப்பெண்கள் பெற்றேன். இந்த தேர்வு, மிகவும் எளிதாக இருந்தது. இதனால், தேர்ச்சி பெற்றுவிடுவேன். தமிழ் பாடத்தில் இருந்து கேட்கப்பட்ட சில கேள்விகள் கடினமாக இருந்தன. எனினும், பெரிய அளவிற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் கேள்விகள் கேட்கப்படவில்லை," என்றார்.
போரூரைச் சேர்ந்த நிவேதா கூறுகையில், "நான், ஆசிரியர் பயிற்சி முடித்த கையோடு, முதல் முறையாக, தேர்வை எழுதி உள்ளேன். மிகவும் பயத்துடன், தேர்வுக்கு வந்தேன். ஆனால், பெரிய அளவிற்கு, கடினமாக இல்லை. கேள்விகள் அனைத்தும், எளிதாக இருந்தன," என்றார்.
தேர்வு, எளிதாக இருந்ததாக, பெரும்பாலான தேர்வர்கள் கருத்து தெரிவித்திருப்பதால், தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த டி.இ.டி., தேர்வில், 3 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இன்று நடக்கும், டி.இ.டி., இரண்டாம் தாள் தேர்வும் எளிதாக அமைந்தால், தேர்ச்சி, 10 சதவீதத்தை தாண்டலாம்.
கடந்த தேர்வுகளில், "ஆப்சென்ட்" சதவீதம், 10க்கும் அதிகமாக இருந்தது. ஆனால், நேற்றைய தேர்வில், வெறும், 2.18 சதவீதம் பேர் மட்டுமே, "ஆப்சென்ட்" ஆனதாக, டி.ஆர்.பி., உறுப்பினர் அறிவொளி தெரிவித்தார்.
அவர், மேலும் கூறியதாவது: ஒட்டுமொத்த அளவில் 5,854 பேர் மட்டும் தேர்வுக்கு வரவில்லை. மாவட்ட அளவில் பார்த்தால், சென்னை மாவட்டத்தில், அதிகபட்சமாக, 465 பேர், "ஆப்சென்ட்" (4.47 சதவீதம்) ஆகியுள்ளனர். குறைந்தபட்சமாக, திருப்பூர் மாவட்டத்தில், 1.46 சதவீதம் பேர், "ஆப்சென்ட்". தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வமும், வேகமும் தேர்வர்களிடையே அதிகமாக இருப்பது தான், "ஆப்சென்ட்" குறைவுக்கு காரணம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

ஆசிரியர் தகுதித் தேர்வு: மூன்று வாரங்களில் விடைகள் வெளியீடு

தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வின் இரண்டாம் தாளை 4 லட்சத்து 77 பேர் எழுதினர்.
இந்தத் தேர்வுக்கு 4 லட்சத்து 11 ஆயிரத்து 635 பேர் விண்ணப்பித்தனர். இரண்டு தாள்களையும் சேர்த்து தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வினை இந்த ஆண்டு (2013) மொத்தம் ஆறு லட்சத்து 62 ஆயிரம் பேர் எழுதியுள்ளனர்.
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. முதல் தாள் சனிக்கிழமையும், இரண்டாம் தாள் ஞாயிற்றுக்கிழமையும் நடந்தன. முதல் தாளை 2 லட்சத்து 62 ஆயிரம் பேர் எழுதினர்.
மொழிப் பாடங்கள் கடினம்: ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரண்டாம் தாளில் தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிப் பாடங்களில் கேள்விகள் கடினமாக இருந்ததாகவும், உளவியல் பாடத்தில் கேள்விகள் பொதுவாக இருந்ததாகவும் தேர்வர்கள் கருத்துத் தெரிவித்தனர். தமிழகம் முழுவதும் ஆயிரத்து 60 மையங்களில் நடந்த இரண்டாம் தாள் தேர்வை 4 லட்சத்து 77 பேர் எழுதினர்.
மூன்று வாரங்களில் வெளியீடு: ஆசிரியர் தகுதித் தேர்வின் இரண்டு தாள்களுக்கான விடைகளும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (ற்ழ்க்ஷ.ற்ய்.ய்ண்ஸ்ரீ.ண்ய்) வெளியிடப்படும் என்று தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
விடைகள் வெளியிடப்பட்ட பிறகு, தேர்வு முடிவுகள் இரண்டு மாதங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் உள்பட காலியாகவுள்ள மொத்தம் 14 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதித் தேர்வு நடத்தப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரண்டாம் தாள் தேர்வின்போது கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஒவ்வொரு மையத்திலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டதோடு, போலீஸ் பாதுகாப்பும் அளிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்சியர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு தேர்வுகள் கண்காணிக்கப்பட்டன. இந்தத் தேர்வினை எழுத பெண்கள் 73 சதவீதம் பேரும், ஆண்கள் 27 சதவீதம் பேரும் விண்ணப்பித்திருந்தனர்.
சென்னையில் எத்தனை பேர்? சென்னை மாவட்டத்தில் 26 ஆயிரத்து 96 பேர் தேர்வு எழுத விண்ணப்பத்திருந்தனர். அவர்களில் 24 ஆயிரத்து 782 பேர் தேர்வு எழுதினர். ஆயிரத்து 314 பேர் தேர்வு எழுதவில்லை.
தேர்வு மையங்களில் அதிகாரிகள் அவ்வப்போது நேரில் ஆய்வு செய்தனர்.
சில மையங்களில் தேர்வுக்கூட அலுவலர்களுக்கு போதிய பயிற்சிகள் வழங்கப்படாததால் அவர்கள் தேர்வர்களிடம் இருந்து 10 நிமிஷங்களுக்கு முன்பாகவே விடைத்தாள்களை பெற்றதாக புகார்கள் எழுந்தன.
சென்னை மாவட்டத்திலும் தேர்வு அமைதியாக நடந்து முடிந்தததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தெளிவு இல்லாத ஹால் டிக்கெட்: தேர்வுக்கூடங்களை தேடி அலைந்த தேர்வர்கள்
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த இரண்டாம் தாள் தேர்வின்போது தேர்வு மையங்களை தேர்வர்கள் தேடி அலையும் நிலை ஏற்பட்டது.
தேர்வுக்கூட நுழைவுச் சீட்டில் (ஹால் டிக்கெட்) சரியான விவரங்களைக் குறிப்பிடாததே இந்த குழப்பங்களுக்குக் காரணம் என்று புகார் கூறப்படுகிறது. தேர்வுக்கூட நுழைவுச் சீட்டில் தேர்வு மையத்தின் பிரதான சாலையின் பெயர் மற்றும் ஊர் பெயர் மட்டுமே இடம்பெற்றிருந்தது. இதனால், எந்தப் பள்ளி, அது எங்கு இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க முடியாமல் தேர்வர்கள் திணறினர்.
குறிப்பாக, சென்னை மாவட்டத்தில் மாநகராட்சி பள்ளிகள் அனைத்தும் சென்னை பள்ளிகள் என்றே அழைக்கப்படுகின்றன. தேர்வுக்கூட நுழைவுச் சீட்டில் தேர்வர்களுக்கு, சென்னை பள்ளி என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது. அது ஆண்கள் பள்ளியா பெண்கள் பள்ளியா எந்தப் பகுதியில் இருக்கிறது என்கிற விவரங்கள் ஏதும் இல்லை. இதனால் தேர்வர்கள் தேர்வுக்கூட மையங்களைத் தேடி அலையும் நிலை ஏற்பட்டது.
டி.என்.பி.என்.சி., முன்மாதிரி: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளின் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளில் தேர்வு மையத்தின் விவரத்தை தெளிவாகக் குறிப்பிடுகிறார்கள். இதனால், தேர்வு மையத்தைக் கண்டுபிடிப்பது எளிதாக இருக்கிறது.  அதே நடைமுறையை ஆசிரியர் தேர்வு வாரியமும் பின்பற்ற வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னையில் மாநகராட்சிப் பள்ளிகளைக் குறிப்பிடும்போது மிகவும் கவனமாக அது எந்த இடத்தில் இருக்கிறது என்ற விவரத்தை முழுமையாக தேர்வுக்கூட நுழைவுச் சீட்டில் குறிப்பிட வேண்டும் என்றும் தேர்வர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஆசிரியர்கள் அச்சம் தவிருமா?

முன்பொருகாலத்தில் ஆசிரியர்கள் மீது மாணவர்களுக்குப் பக்தி, மரியாதை, பயம் முதலியன மேலோங்கிக் காணப்பட்டன. ஆசிரியர்களை வழிகாட்டிகளாகவும் முன்மாதிரிகளாகவும் மாணவர்கள் எண்ணிய காலம் தற்போது மாறிப் போய்விட்டதாகவே படுகிறது.
தொடக்கக்கல்வி முதல் கல்லூரிக்கல்வி வரை பணியாற்றும் ஆசிரியப் பெருமக்கள் அண்மைக்காலமாக மாணவ-மாணவிகளுக்கு அஞ்சும் துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
கண்ணுக்குத் தெரிந்து தவறுகள் செய்யும் மாணவர்களை நேரடியாகக் கூப்பிட்டுக் கண்டிக்க முடியவில்லை. அப்படியே மாணவர்களின் நலன்கருதி கண்டிப்பில் ஈடுபடும் ஆசிரியர்களின் நிகழ்கால வாழ்வு அதோகதி நிலைக்குத் தள்ளப்பட்டு விடுகிறது. நான்காம் வகுப்பே படிக்கும் மாணவிக்குக்கூட இன்று கோபம் பொத்துக்கொண்டு வந்துவிடுகிறது.
ஆசிரியர்கள் தம் சொல்லாலும் செயலாலும் மாணவர்களுக்கு உடல் மற்றும் மன ரீதியாக எப்பொழுதிலும் எத்தகைய வழியிலும் துன்பம் தரக்கூடாது என்று இக்கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் இரும்புக்கரம் கொண்டு வலியுறுத்துகின்றது. இதன் விளைவு என்ன தெரியுமா?
இளைய பாரதமாகத் திகழும் மாணவ சமுதாயம் திசைமாறிச் செல்வதைத் தடுக்க வழியின்றி ஆசிரியர்கள் கைகளைப் பிசைந்துகொண்டு உணர்வின்றி வெறுமனே கூலிக்கு மாரடிக்கும் கூட்டமாக மாறிப்போய்விட்டனர்.நிதானம் தவறி வெற்று உணர்ச்சிகளுக்கு அடிமையாகி தம் இன்னுயிரைப்பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படாமல் தம்மை மாய்த்துக்கொள்ள நினைக்கும் மாணவச்சமூகத்தைத் திருத்தி நல்வழிக்காட்டுவது ஆசிரியர்களின்றி வேறு யார்?
அச்சு,காட்சி ஊடகங்கள்,வளர்ந்துவரும் நவீனத் தொழில்நுட்பங்களான செல்பேசிகள்,இணையங்கள்,தெருவெங்கும் திறந்துகிடக்கும் மதுபானக்கடைகள்,மலிவான போதைப்பொருள்கள்,நலிவடைந்துபோன மனித மதிப்புகள்,அதிநுகர்வுக் கலாச்சார நோக்குகள் மற்றும் போக்குகள் போன்றவை பிஞ்சு உள்ளங்களைப் பெருமளவில் நஞ்சாக்கி வருவது கண்கூடு.
மேலும்,உடல் கவர்ச்சி மற்றும் எதிர்பால் ஈர்ப்புக் காரணமாகப் பதின்பருவ வயதினரிடையே இயல்பாக எழும் அன்பொழுக்கம் தவறாகத் திரிந்து காதலெனக் கூறப்பட்டு வகுப்பறைக்குள்ளும் வெளியேயும் சொல்ல நா கூசுமளவிற்குத் தகாத முறைகளில் நடைபெற்று வருவதை ஆசிரியர்கள் கண்டும் காணாமலும் ஒதுங்கிச்செல்லவே முற்படுகின்றனர்.இந்த இழிநிலைக்குக் காரணம் எது?
மாணவர்களுக்கு இரண்டாம் பெற்றோராக விளங்கும் ஆசிரியரின் கைக்கு விலங்கையும் வாய்க்குப் பூட்டையும் போடும் சட்டமா? பெற்றோரின் மாறிப்போன மனப்போக்கா? சமுதாயத்தின் ஒருதலைப்பட்சமான குறுகிய பார்வையா? பரபரப்பையும் விறுவிறுப்பையும் மட்டுமே குறிக்கோளாகக்கொண்டு செயல்படும் ஊடகங்களின் சமூக அக்கறையின்மையா? மாணவரிடையே மங்கிப்போன குருபக்தியா? இவ்வாறு ஒரு பெரும்விவாதமே நிகழ்த்தவியலும். தப்பித்தவறி தாய் உள்ளத்துடன் குடும்பநிலை மற்றும் வருங்காலம் குறித்து நல்லறிவு புகட்டத் துணியும் ஆசிரிய,ஆசிரியைகளுக்கு மிஞ்சுவது மிரட்டல்கள் மட்டுமே. ஆம். காதல்வயப்பட்ட அப்பாவிப் பள்ளிச்சிறுமி வெளிப்படையாகவே ஆசிரியர்கள்மீது அவதூறுகளைப் பரப்பி அவர்கள் வாழ்க்கையையே நாசப்படுத்திவிடும் கொடுமையை என்னவென்பது?
ஒருசார்பான தீர்ப்பினாலும் முடிவினாலும் அவ்வாசிரியரின் நல்லதோர் குடும்பம் வீண்பழியால் சிதைந்து சின்னாபின்னமாவது என்பது வெளிச்சத்திற்கு வராத பேருண்மையாகும்.இத்தகைய குரலற்றவர்களின் குரலைச் சற்றேனும் காதுகொடுத்து கேட்க இச்சமூகம் ஏனோ முன்வருவதில்லை.இருதரப்பு நியாயங்களை இனியாவது செவிமடுக்க முன்வருதல் எல்லோருக்கும் நல்லது.
அதுபோல,தாம் பணியாற்றும் பள்ளியை முழுத் தேர்ச்சி பெறவைக்கவும், தேர்ச்சிக்குரிய குறைந்த மதிப்பெண்கள் அடைவை எட்டாத மாணவ, மாணவியர்மீது தனிக்கவனம் செலுத்தி,சிறப்பு வகுப்புகள் நடத்தித் தேர்ச்சியுற வைக்கவும் முயலும் ஆற்றல்மிக்க ஆசிரிய, ஆசிரியைகள் படும்பாடுகள் சொல்லிமாளாதவை. மென்மையாகக்கூட மாணவ, மாணவிகளைக் கண்டிக்கவோ, தண்டிக்கவோ இயலவில்லை. ஒருபக்கம் அரசு மற்றும் அதிகாரிகளின் கெடுபிடிகள் மற்றும் கிடுக்கிப்பிடிகள். மறுபக்கம் சொல்பேச்சுக்கேளாத அடங்காப்பிள்ளைகள். இதைத்தவிர, வேறொருபக்கம் நன்குத் திட்டமிடப்பட்டு வேலைக்கு உலைவைக்கும் அச்சுறுத்தல்கள் மற்றும் அவப்பெயர்கள். அதிகம் போனால் பளார் அறைகள், கத்திக்குத்துகள், பாலியல் வன்கொடுமைப் புனைவுகள் எனப் பட்டியல் நீண்டுகொண்டே போகும்.
 தவிர, அண்மைக்காலமாக மாணவ, மாணவியரிடையே சில விரும்பத்தகாத நடவடிக்கைகள் பெருகிக் கிடப்பதை நன்கு அறிய முடிகின்றது. மேலும் சமூகத் தீங்குமிக்கப் பல்வேறு தகாத நடவடிக்கைகளும் மலிந்துள்ளன. கற்றல்-கற்பித்தல் நிகழ்வுகளின்போதே தவறு செய்யும் மாணவனைக்கண்டு உண்மையில் ஆசிரியர்கள் கண்டிக்கத் திராணியின்றி அஞ்சி வருந்தும் அவலநிலைதான் எதிர்காலச் சிற்பிகளை உருவாக்கும் வகுப்பறை நடப்பாக இருக்கின்றது.
தமிழகத்தின் ஒட்டுமொத்த வகுப்பறைகளும் மாணாக்கர்களும் இவ்வாறு உள்ளனர் என்று பொதுவாகக் குற்றம் சாட்டுவது இங்கு நோக்கமல்ல. நல்ல நெல்மணிகளாய் மாணவக் கண்மணிகள் பலர் பல்வேறிடங்களில் அறியக்கிடைக்கின்றனர் என்பது மறுப்பதற்கில்லை. எனினும், பதர்கள், முட்செடிகள், நச்சுக்களைகள் போலுள்ள தீயோரை அடையாளம் காட்டுவதென்பது சமுதாயக் கடமையாகும். திசைமாறிப் பயணித்துக்கொண்டிருக்கும் மாணவ சமுதாயத்தை மீளவும் நல்வழிக்குக் கொணர பெற்றோர், சமுதாயம், அரசாங்கம், ஊடகங்கள் ஆகியவை ஆசிரியர்களுடன்  கைகோர்ப்பது சாலச்சிறந்தது. ஆசிரிய சமுதாயத்தைத் தவறாகச் சித்தரித்து கேலி,கிண்டல் செய்து இழிவாகக் கருதும் சமுதாய பொதுமனநிலை நிச்சயம் மாற்றம்பெற வைக்கவேண்டியது. அதற்கு ஆசிரியரின் தனிப்பட்ட நல்லொழுக்கப்பண்பும் மட்டுமல்லாது காலந்தோறும் சமுதாயத்திற்கு உதவக்கூடியவகையில் அமைந்த விழுமியகுணங்களும் முன்மாதிரி நடத்தைகளும் இன்றியமையாதவை.
ஆசிரியர்-மாணவர் உறவென்பது ஆண்டான்-அடிமை உறவல்ல.அதுவொரு நல்ல கருத்துப் பரிமாற்றம் உள்ளடக்கிய நட்புறவு.அதைப் போற்றிப் பேணிக்காத்தல் என்பது இருவரின் கடமையாகும். அப்போதுதான் வலியின்றிச் சுதந்திரமாக கல்வி மலரும். நாடும் நலமுடனும் வளமுடனும் ஒளிவீசித் திகழும்.

சனி, 17 ஆகஸ்ட், 2013

ஆசிரியர் தகுதித் தேர்வு : உயர்நீதிமன்றம் தடை விதிக்க மறுப்பு

ஆசிரியர் தகுதித் தேர்வு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. திட்டமிட்டபடி ஆகஸ்ட் 17, 18 ம் தேதிகளில் தேர்வுகள் நடைபெறும் என அறிவித்துள்ளது. இட ஒதுக்கீட்டு பிரச்சினையை முடிவு செய்யும் வரை தேர்வுக்கு தடை விதிக்க கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
மனுதாரர் கருப்பையா கோரிக்கைபடி ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு தடை விதிக்க நீதிபதி மறுப்பு தெரிவித்து தீர்ப்பளித்தார். கருப்பையா மனுவுக்கு தமிழக அரசு 2 வாரத்தில் பதிலளிக்க ஐகோர்ட் ஆணை பிறப்பித்துள்ளது.

மனு விபரம்
தமிழகத்தில் ஆகஸ்ட் 17, 18 தேதிகளில் ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறுகிறது. ஆசிரியர் தகுதி தேர்வில் ஆதி திராவிடர், பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு இல்லை என மனுவில் குறிப்பிடபட்டுள்ளது. இட ஓதுக்கீடு அளிக்க தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் விதியில் வழி உள்ளது. தேர்வு நடத்தும் மாநிலங்கள் ஆசிரியர் கல்வி கவுன்சில் விதிப்படி இடஒதுக்கீடு அளிக்கலாம் என விதி உள்ளது. சில மாநிலங்கள் ஆதி திராவிடர், பழங்குடியினருக்கு மதிப்பெண்ணை தளர்த்தியுள்ளன. எனவே தமிழக அரசும் ஆதி திராவிடர், பழங்குடியினருக்கு மதிப்பெண்ணை தளர்த்க்கோரி மனு அளிக்கப்பட்டிருந்தது.

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013

டி.இ.டி., தேர்வுக்குஆகஸ்ட் 15,2013,19:31 IST

எழுத்தின் அளவு :
சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி.,) நேர மேலாண்மை மிகவும் அவசியம் என, மதுரை நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பாங்கிங் நிர்வாக இயக்குனர் பெ.வெங்கடாச்சலம் கூறினார்.
* ஆசிரியர் தகுதித் தேர்வை எழுத தயாராவோர், பதட்டம் இல்லாமல் படித்து தேர்வை எதிர்கொள்ள வேண்டும். இனி, புதிய பாடங்களை படித்தல் கூடாது. ஏற்கனவே படித்துள்ளவற்றையே திருப்புதல் செய்ய வேண்டும்.
* தமிழில் நூலாசிரியர்கள், தமிழ் எண்கள், பா வகை, யாப்புவில் தளை, அணி, ஆகுபெயர்களை படிக்க வேண்டும்.
* குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தலில், கோட்பாடுகளை கூறியவர்கள், பயன்பாடு, தோன்றிய ஆண்டு, உளவியலில் பல்வேறு பிரிவுகளை தெரிந்து கொள்வது அவசியம்.
* ஆங்கிலத்தில் சுருக்கு வடிவத்தின் விரிவாக்கம், ஆங்கிலச் சொல்லுக்கு இணையான, எதிர்மறை சொற்கள், பறவை, விலங்குகளின் ஒலிகள், அவற்றின் பாலினங்கள், அவற்றின் கூட்டப் பெயர்களை தெரிந்து கொள்ள வேண்டும்.
* கணக்கில் எண்ணியல், பரப்பளவு, கனஅளவு, தனிவட்டி, கூட்டுவட்டி, சராசரி, புள்ளியியல் பாடங்களில் முக்கிய சூத்திரங்கள் தெரிவது அவசியம்.
* இயற்பியலில் அலகுகள், விதிகள், பயன்கள் தெரிந்து இருக்க வேண்டும். வேதியியலில் தனிமங்களின் குறியீடுகள், சேர்மங்களின் பயன்கள், வேதிப்பெயர்கள், அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் வேதிச் சேர்மங்களை படிக்க வேண்டும்.
* தாவரவியலில் செல்கள், வைரஸ், பாக்டீரியா போன்ற பகுதிகளை நினைவுபடுத்தவும்.
* உலக புவியியலில் கோள்களின் சிறப்பம்சங்கள், இந்திய மாநிலங்களின் தலைநகரங்கள், உலகில் நடைபெற்ற முக்கிய பேரழிவுகள், நடந்த ஆண்டு, இந்திய மலைகள், காடுகள் தொடர்புடைய பகுதிகளை அறிந்திருக்க வேண்டும்.
* மனித உடலியல் பகுதியில் நோய்கள், வைட்டமின்கள், ரத்தசெல்கள் பற்றி அறிய வேண்டும்.
* வரலாறு பகுதியில் முக்கிய போர்கள், நடந்த ஆண்டு, சுதந்திர போராட்ட காலத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள், நூல், நூலாசிரியர்கள், இயக்கங்களை தோற்றுவித்தவர்கள்.
* அரசியல் அமைப்பின் முக்கிய ஷரத்துகள் (குறிப்பாக குழந்தை கல்வி தொடர்பானவை), அட்டவணைகள், சட்ட திருத்தங்கள் அறியவேண்டும்.
* சூழ்நிலையியல் பாடத்தில் சுற்றுச்சூழல் தொடர்புடைய மாநாடுகள், தினங்கள், சட்டங்கள், கல்வி தொடர்புடைய தினங்கள், தேசிய நினைவுச் சின்னங்களை நினைவுபடுத்த வேண்டும்.
* விண்வெளி தொடர்புடைய நிகழ்வுகள், ஆண்டுகள், மையங்கள், ஊராட்சி நிர்வாகம், தமிழக வரலாறு தொடர்புள்ள நிகழ்வுகளை அறிந்திருப்பது அவசியம்.
கடந்த ஆண்டு நடந்த தேர்வுகளில், பல கேள்விகளுக்கு பதில் தெரிந்து இருந்தும், நேர மேலாண்மை தெரியாததால் பலர் தோல்வி அடைந்தனர். எனவே, வீட்டிலேயே மாதிரி தேர்வுகளை எழுதிப் பழகலாம்.
150 வினாக்களில், முதலில் நன்கு தெளிவாக தெரிந்த விடைகளை எழுதியபின், மற்ற வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும். இத்தேர்வில் தவறான விடைகளுக்கு மதிப்பெண் பிடித்தம் கிடையாது. எனவே, எல்லா வினாக்களுக்கும் விடையளித்து விடவும்.
தேர்வுக்கு முன்தினம், நன்கு தூங்க வேண்டும். தேர்வு நாளில் ஹால் டிக்கெட், பால் பாயின்ட் பேனாவை முதலிலேயே எடுத்து வைத்து, கடைசி நேர பதற்றத்தை தவிர்க்க வேண்டும்.
நேர மேலாண்மைக்கு கடிகாரம் அணிந்து செல்வது நல்லது. தேர்வு மையத்தை முன்தினமே அறிந்து வைத்திருப்பது நல்லது. எல்லாவற்றையும்விட, "என்னால் வெல்ல முடியும்" என்ற நம்பிக்கை இருப்பது அவசியம். இவ்வாறு தெரிவித்தார். 

ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013

மத்திய அரசு ஊதியத்துடன் ஒப்பிட்டால் இடைநிலை ஆசிரியரின் ஒரு மாத இழப்பு

மத்திய அரசு ஊதியம்:

அடிப்படை ஊதியம் : 9300
தர ஊதியம் : 4200
அகவிலைப்படி (80%) : 10800

மொத்தம் : 24300

தமிழ்நாடு ஊதியம்:

அடிப்படை ஊதியம் : 5200
தர ஊதியம் : 2800
தனி ஊதியம் : 750
அகவிலைப்படி (80%) : 7000

மொத்தம் : 15750

ஒரு மாத இழப்பு : 8550/-

இது இந்த மாதத்தில் பணியில் சேர்ந்தவருக்கான ஒரு மாதிரி கணக்கீடு தான் . பணியில் உள்ளோருக்கு இன்னும் இழப்பு அதிகம். சங்கங்கள் தாண்டி அனைவரும் ஒன்றினைந்து போராடினால் மட்டுமே 9300+4200 தர ஊதியம் என்ற இலக்கை அடைய முடியும்

இடைநிலை ஆசிரியர்கள் கவனிக்க

மூவர் குழு அரசாணையில் தங்களுக்கு தர ஊதியம் உயர்வு இல்லை என அறிந்தபின்பும் பல்வேறு அமைப்புகள் நடத்தும் பல்வகைப்போராட்ட புகைப்படங்கள் ,நாளிதழ்செய்திகள் ,தொலைக்காட்சி ஊடக செய்திகளின் ஒளிக்காட்சிகள் பார்வையிட்டவகையில் அனேகமாக அனுபவம் மிக்க (சீனியர்)ஆசிரியர்கள்மட்டுமே,ஆங்காங்கே அதுவும் குறைந்த அளவிலே பங்கேற்பது கண்கூடாக த்தெரிகிறது.

அரசு அனைத்தையும் உளவுப்பிரிவு மூலம் கண்காணிக்கிறது.

எந்த இயக்கமாயினும் அமைப்பின் முண்ணனி தலைவர்கள்,மற்றும் தீவிரபற்றாளர்கள் கலந்து கொள்வர் என்பது இயல்பே

இதுமட்டும் போதாது, கோரிக்கை வென்றெடுக்க

உள்ளத்தில் நம்பிக்கையோடு அனைத்து இடைநிலை ஆசிரியர்களும் இயக்க வேறுபாடு பாராமல் யார் நடத்தும் போராட்டத்திலும் பங்கேற்று அவற்றை வலுப்படுத்தினால் மட்டுமே நோக்கம் நிறைவேறும்.

இது எங்கள் அமைப்பின் வேண்டுகோள் இல்லை என எவற்ரையும் ஒதுக்காமல் தர ஊதியம் கோரும் அனைத்து இயக்கப்போராட்டத்தில் அனைவரும் குறிப்பாக இடைநிலை ஆசிரியர்கள் அனைவரும் பங்கேற்பீர் !!!!!!!!!!!!!!!!!!!!

புரளிகளைநம்பாதீர்
எண்ணிக்கை மட்டுமே எதையும் வென்றெடுக்கும்.எல்லோரும் ஒருவரும் விடுபட்டாமல், சாக்கு போக்கு சொல்லாமல்,அவசரம் என சமாளிக்காமல்.காரணம் கூறாமல், அனைவரும் பங்கேற்பீர் !!!!!!!!!!!!!!!!!!!!
அதுமட்டுமே வெற்றிக்கு வழி
அதுமட்டுமே வெற்றிக்கு வழி
அது ஒன்றே வெற்றிக்கு வழி

வியாழன், 1 ஆகஸ்ட், 2013

டி.இ.டி., தேர்வர்களுக்கு, வரும், 5ம் தேதி, டி.ஆர்.பி., இணைய தளத்தில், "ஹால் டிக்கெட்' வெளியிடப்படும்' - டி.ஆர்.பி.,

வரும், 17,18 தேதிகளில், டி.இ.டி., தேர்வு நடக்கிறது. 17ம் தேதி நடக்கும், முதல் தாள் தேர்வை (இடைநிலை ஆசிரியருக்கானது), 2,68,160 பேரும், 18ம் தேதி நடக்கும், இரண்டாம் தாள் தேர்வை (பட்டதாரி ஆசிரியருக்கானது), 4,11,634 பேரும் எழுதுகின்றனர்.

தேர்வுகளுக்கான ஏற்பாடுகள், முழு வீச்சில் நடந்து வருகின்றன. தேர்வர்களுக்கு, வரும், 5ம் தேதி, டி.ஆர்.பி., இணையதளத்தில், "ஹால் டிக்கெட்' வெளியிடப்படுகிறது.
இதற்கிடையே, 27 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், விண்ணப்பங்களை, சரியாக பூர்த்தி செய்யவில்லை என, தெரிய வந்துள்ளது. 44 பேர், ஆணா, பெண்ணா என்பதையே குறிப்பிடவில்லை. 2,500 பேர், தேர்வு மையத்தை குறிப்பிடவில்லை. விருப்ப பாடம் குறித்த தகவலை, 7,800 பேர் பூர்த்தி செய்யவில்லை என்பதையும், டி.ஆர்.பி., கண்டறிந்துள்ளது. 17 ஆயிரம் பேர், பல்வேறு தவறுகளை செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த தவறுகளை சரிசெய்ய, தேர்வு நாளன்று வாய்ப்பு வழங்கப்படும் என, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது. தேர்வு நாளன்று வழங்கப்படும் விடைத்தாளில், அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை, சரியாக பூர்த்தி செய்ய வேண்டும் என்றும், டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.

இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்காததால் மாநிலம் தழுவிய மறியல் போராட்டம்

இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்காததால் மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக சங்கத்தின் மாநில செயலாளர் தெரிவித்துள்ளார்.இடைநிலை ஆசிரியர்கள் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ராபர்ட் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த 2009-ம் ஆண்டு தமிழகம் முழுவதும் மாநில பதிவு மூப்பு அடிப்படையில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
அவர்களில் ஏராளமானோர் தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஆவர். அவர்கள் அனைவரும் தற்போது சென்னை, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற தொலை தூர மாவட்டங்களில் தங்களது குடும்பத்தை விட்டு விட்டு பணியாற்றி வருகின்றனர். தற்போது வரை இந்த ஆசிரியர்களுக்கு இடமாறுதல் வழங்கப்படவில்லை. இதனால் நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். இதுமட்டுமல்லாமல், எங்களுக்கு முன்பு பணியில் சேர்ந்தவர்களுக்கு வழங்கியது போன்று எங்களுக்கு அடிப்படை சம்பளம் நிர்ணயிக்கப்படவில்லை. குறைவான சம்பளமே பெற்று வருகிறோம். ஊதிய குறைப்புஇதுபோன்ற சூழ்நிலையில் ஒட்டுமொத்த இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஊதிய உயர்வு குறித்து 3 நபர் ஊதியக்குழு அறிக்கையில் எந்தவித அறிவிப்பும் இல்லை. இது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதை போன்று உள்ளது. 6-வது ஊதியக்குழுவில் மிகக்கடுமையாக இடைநிலை ஆசிரியர்கள் பாதிப்படைந்தனர். ஒருநபர் குழுவிலும் புறக்கணிக்கப்பட்டனர். தற்போது மீண்டும் 3 நபர் குழுவிலும் மிக மோசமாக ஏமாற்றப்பட்டுள்ளனர். எந்த ஊதியக்குழுவிலும் ஊதிய இழப்பு என்பது இருக்காது. ஆனால் தமிழகத்திலேயே 6-வது ஊதியக்குழுவில் தான் ஒரு பதவிக்கு ஊதிய குறைப்பு என்பது முதல் முறையாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தோம். மறியல் போராட்டம்அப்போது, மத்திய அரசுக்கு இணையாக ஊதியம் வழங்க பரிந்துரைப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதைப்பற்றி ஒரு வார்த்தை கூட 3 நபர்கள் கொண்ட குழுவின் அறிக்கையில் இல்லை. அடுத்த மாதம் (ஆகஸ்டு) 4-ந் தேதி மதுரையில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் மதுரையில் நடக்க உள்ளது. இதில் பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் பங்கேற்கின்றன. இதன்பின்பு, எங்களது கோரிக்கையை வலியுறுத்தி மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.