செவ்வாய், 26 பிப்ரவரி, 2013


இந்த ஆண்டு ஜூன் மாதம் பள்ளி துவங்குவதற்கு முன்பே மூன்றாவது டி.இ.டி தேர்வை நடத்தி 15 ஆயிரம் ஆசிரியர்களை தேர்வு செய்ய டி.ஆர்.பி திட்டம்.
இந்த ஆண்டு ஜூன் மாதம் பள்ளி துவங்குவதற்கு முன்பே மூன்றாவது டி.இ.டி தேர்வை நடத்தி அதன் மூலம் புதியதாக 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களை தேர்வு செய்ய டி.ஆர்.பி திட்டமிட்டுள்ளது.
புதிய ஆசிரியர்கள், ஜூன் மாதம் பள்ளிகள் துவங்கியதும் பணியில் சேர்வதற்கேற்ப தேர்வு அட்டவணையை தயாரித்து முடிக்க வேண்டும் என்று டி.ஆர்.பியிடம் கல்வித்துறை தெரிவித்துள்ளன. என்வே, அடுத்த டி.இ.டி தேர்வு குறித்த அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம். பள்ளி பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 10ஆம் தேதியுடன் முடிவடைய இருப்பதால் ஏப்ரல் மாத இறுதியில் தேர்வை நடத்தி மே மாதத்திற்குள் அனைத்துப் பணிகளும் முடிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசிரியர் பணியை எதிர்நோக்கி உள்ளவர்கள் கடினமாக படிக்க வேண்டும் என்பதை விட, சரியாக திட்டமிட்டு படித்தாலே வெற்றி பெறலாம். அதாவது ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள பாட புத்தகங்களை முழுமையாக படிக்க வேண்டும். அதிகப்படியான தகவல்களுக்கு +1, +2 வகுப்பு பாட புத்தகங்களை படித்தால் போதும்.

பொதுவான வினாக்களுக்கு தினமும் செய்தித்தாள்களைப் படித்து குறிப்பு எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது முக்கிய செய்தி, கட்டுரைகள், தலையங்கங்கள் போன்றவற்றினை சேகரித்து பயன்படுத்திக்கொள்ளலாம்.

பாடவாரியான அட்டவணை தயார் செய்தும், பழைய வினாத்தாள்களை பார்த்துக்கொள்ளுதல், தேர்வுக்கு முன் குறைந்த பட்சம் 10 மாதிரி தேர்வுகளையாவது எழுதி பழ வேண்டும்.

ஒரு தேர்வில் வெற்றி பெற்றுவிட்டால், படிப்பதை நிறுத்தி விடாமல் பணியில் சேரும் வரை என்ன வேண்டுமானாலும் நிகழலாம். கடின உழைப்புக்கும், முயற்சிக்கும் நிச்சயம் பலன் உண்டு. பட்டங்களுக்காக எழுதும் தேர்வு இதுவல்ல, பணிக்காக எழுதும் தேர்வு என்பதை நினைவில் நிறுத்தி திரைகடல் ஒடி திரவியம் தேடுங்கள். வெற்றி பெற வாழ்த்துக்கள்.

ஞாயிறு, 3 பிப்ரவரி, 2013

ஆசிரியர் நியமன தகுதி மதிப்பெண்: தளர்த்த கோரிய மனுக்கள் தள்ளுபடி


ஆசிரியர் பணி நியமனத்துக்கான தகுதி தேர்வில், தகுதி மதிப்பெண்ணை தளர்த்தக் கோரிய மனுக்களை, சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. நிர்ணயிக்கப்பட்ட தகுதியை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்; அதை மீறி நடக்கும் நியமனங்கள் செல்லாது என கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர் பணி நியமனத்துக்கான, தகுதி தேர்வு, கடந்த ஆண்டு, ஜூலையில் நடந்தது. தகுதி மதிப்பெண், 60 சதவீதம் என, நிர்ணயிக்கப்பட்டது. இதில், கலந்து கொண்டோர், சொற்ப அளவிலே தேர்ச்சி பெற்றனர். இதையடுத்து, கடந்த ஆண்டு, அக்டோபரில், மீண்டும் தகுதி தேர்வு நடத்தப்பட்டது.

இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெறாத, 15 பேர், ஐகோர்ட்டில், தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்தனர். மனுக்களில், தகுதி மதிப்பெண்ணை தளர்த்தி, சலுகை காட்டுமாறு, கல்வித் துறைக்கும், ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கும் உத்தரவிட வேண்டும் என, கோரப்பட்டது.

இம்மனுக்களை விசாரித்த, நீதிபதி, சந்துரு பிறப்பித்த உத்தரவு:முதலாவதாக நடந்த தகுதி தேர்வில், தேர்ச்சி சதவீதம் குறைவாக இருந்ததால், இரண்டாவதாக, தகுதி தேர்வை, அரசு நடத்தியது.

இரண்டாவது தேர்விலும், மனுதாரர்கள் தேர்ச்சி பெறவில்லை. மற்ற மாநிலங்களில், தகுதி மதிப்பெண்ணில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதால், இங்கும் வழங்க வேண்டும் என, கோருகின்றனர்.

மற்ற மாநிலங்களில் சலுகைகள் வழங்குவது, தமிழகத்தை கட்டுப்படுத்தாது. குழந்தைகளுக்கு, தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக தான், தகுதி மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

ஆசிரியர்களின் கல்வி தரத்தில், எந்த சமரசத்துக்கும் இடமில்லை என, அரசு கொள்கை முடிவெடுத்துள்ளது. நிர்ணயிக்கப்பட்ட தகுதியை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்; அதை மீறி நடக்கும் நியமனங்கள் செல்லாது என, ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

எனவே, மனுதாரர்களின் கோரிக்கையை, பரிசீலிக்க விரும்பவில்லை. கல்வி தரத்தை குறைக்கும் வகையில், தகுதி மதிப்பெண்ணை தளர்த்துவதற்கு, அதிகாரிகளுக்கு உத்தரவிட முடியாது. மனுக்கள், தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி, சந்துரு உத்தரவிட்டுள்ளார்

சனி, 2 பிப்ரவரி, 2013

ஆசிரியர்கள் நியமனத்திற்கு அடுத்த பட்டியலில் 15,000 பேர்


இந்த ஆண்டு, ஜூன் மாதம், பள்ளி துவங்குவதற்கு முன், மூன்றாவது, டி.இ.டி., தேர்வை நடத்தி, அதன் வழியாக, 15 ஆயிரம் ஆசிரியர்களை, 
புதிதாக தேர்வு செய்ய, டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது.
இவர்கள் அனைவரும், ஜூன் மாதம், பள்ளி துவங்கும் போது, பணியில் சேர வழி செய்யப்படும் என, கூறப்படுகிறது.

கட்டாய கல்விச் சட்டத்தின் படி, எட்டாம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர், ஆசிரியர் தகுதித் தேர்வில், தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.இதன்படி, கடந்த ஆண்டு, ஜூலை, 12ல் நடந்த முதல், டி.இ.டி., தேர்வை, எட்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் எழுதிய போதும், வெறும், 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.மொத்த தேர்வர்களில், 0.33 சதவீதம் பேர் மட்டும் தேர்ச்சி பெற்றதால், தோல்வி அடைந்தவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கும் வகையில், கடந்த ஆண்டு, அக்., 14ல், இரண்டாவது, டி.இ.டி., தேர்வு நடந்தது.முதல் தேர்வு கேள்வித்தாள் கடினமாக அமைந்ததும், தேர்வுக்கு, ஒன்றரை மணி நேரம் மட்டுமே வழங்கியதும், தேர்ச்சி சரிவுக்கு முக்கிய காரணமாகக் கருதப்பட்டது.இதனால், இரண்டாவது தேர்வுக்கு, கேள்வித்தாள் கடினத்தை சற்று தளர்த்தியதுடன், தேர்வு நேரத்தை, ஒன்றரை மணியிலிருந்து, மூன்று மணி நேரமாக உயர்த்தப்பட்டது.இதன் காரணமாக, இரண்டாவது தேர்வில், 19 ஆயிரம் பேர் (3 சதவீதம்), தேர்ச்சி பெற்றனர். இரு தேர்வுகளிலும் தேர்வு பெற்றவர்களுக்கு, கடந்த டிசம்பரில், பணி நியமனம் வழங்கப்பட்டது.இந்நிலையில், மூன்றாவது, டி.இ.டி., தேர்வை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளில், டி.ஆர்.பி., இறங்கியுள்ளது. 

ஏற்கனவே நடந்த டி.இ.டி., தேர்வுகளில், இன்னும், 10 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளது.இந்த ஆண்டு, மே இறுதியில் ஓய்வு பெறும் ஆசிரியர் பணியிடங்களையும் சேர்த்தால், 15 முதல், 17 ஆயிரம் ஆசிரியர்கள் வரை, புதிதாக தேர்வு செய்ய வேண்டி இருக்கும்.முதலில், ஜூன் மாதத்திற்குப் பின், மூன்றாவது, டி.இ.டி., தேர்வு நடக்கும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், ஜூன் மாதத்திற்குப் பின் துவக்கினால், இறுதிக்கட்ட தேர்வு முடிய, இரண்டு, மூன்று மாதங்கள் கரைந்து விடும் என, கல்வித் துறை கருதுகிறது.

புதிய ஆசிரியர்கள், ஜூன் மாதம் பள்ளிகள் துவங்கியதும், பணியில் சேர்வதற்கு ஏற்ப, தேர்வு அட்டவணையை தயாரித்து முடிக்க வேண்டும் என, டி.ஆர்.பி.,யிடம், கல்வித் துறை உயர் வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.எனவே, அடுத்த, டி.இ.டி., தேர்வு குறித்த அறிவிப்பை, விரைவில் எதிர்பார்க்கலாம். பள்ளி பொதுத் தேர்வுகள், ஏப்., 10ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, ஏப்ரல் இறுதியில் தேர்வை நடத்தி, மே மாதத்திற்குள், அனைத்துப் பணிகளும் முடிக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இடஒதுக்கீடு கொள்கைக்கு முரணான ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்யக்கோரி டில்லியில் போராட்டம்


நாடு முழுவதும் ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி டில்லியில் நாடாளு மன்றம் முன்பு ஏப்ரல் 4ஆம் தேதி மறியலில் ஈடுபட அகில இந்திய ஆசிரியர் கூட்டணி முடிவு செய்துள்ளது. மறியலில் தமிழகத்தில் இருந்து 10 ஆயிரம் ஆசிரியர்கள் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பங்கேற்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணைத்தலைவர் முத்துராமசாமி கூறிய தாவது : பீகார், உத்தரபிரதேசம், சட்டிஸ்கர், ஜார்கண்ட் போன்ற பின்தங்கிய மாநிலங்களில் 9ஆம் வகுப்பு மற்றும் எஸ்எஸ்எல்சி., முடித்தவர்கள் ஒப்பந்த பாரா ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். இதுபோன்ற ஆசிரியர்களுக்கு கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் கட்டாயம் தகுதி தேர்வு நடத்த வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவு சரியானது தான். அதன் அடிப்படையில் தான் அந்தந்த மாநில அரசுகள் ஆசிரியர் தகுதித்தேர்வை நடத்தி வருகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை ஆசிரியர் தகுதித் தேர்வு என்பது தேவையில்லாதது. ஏனெனில், தமிழகத்தி லுள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் தகுதிக்கான பட்டம் மற்றும் பட்டயப்படிப்பை முடித்தவர்களே ஆசிரியர்களாக நியமனம் செய்யப்படுகின்றனர். மேலும் ஆசிரியர் தகுதித் தேர்வு என்பது இட ஒதுக்கீடு கொள்கைகளுக்கு முரண்பாடானது.

தமிழகம் போன்ற மாநிலங்களில் ஆசிரியர் தகுதி தேர்வை கட்டாயம் ரத்து செய்ய வேண்டும். நாடு முழுவதும் ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும், 6ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளை அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களையும் வலி யுறுத்தி ஏப்ரல் மாதம் 4ஆம் தேதி டில்லியில் நாடாளுமன்றம் முன் எங்களது தலைமை இயக்கமான அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் அகில இந்திய பொது செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் மறியல் போராட்டம் நடக் கிறது. மறியல் போராட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து 10 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர். இவ்வாறு முத்துராமசாமி தெரிவித்தார்